Sunday, September 13, 2020

ராஜா ராணி இளவரசியும் ஒரு சாமான்யப்பெண்ணும்……. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ராஜா ராணி இளவரசியும் 

ஒரு சாமான்யப்பெண்ணும்…….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எழுவது வயதுக்கு மேலிருக்கும் மூதாட்டியின் மீது
அத்தனை குரூரமாய் காறித்துப்பிக்கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.

சிறுமியாகி சிறுமி வளரிளம்பருவத்தினளாகி
வாலைக்குமரியாகி புதுமணப்பெண்ணாகி இளம் மனைவியாகி தாயாகி
என காலத்தே அனைத்துக் கட்டங்களையும் கடந்த பின்
இன்று மும்முரமாகக் காய்வெட்டிக்கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை சதுரங்கவிளையாட்டல்ல என்பதும்
சிப்பாய்க்கு ராஜாவின் அந்தப்புரக் கதவுகளைத் திறந்து
உள்நுழைய அனுமதியில்லை என்பதும் தெரியாமல்
மன்னரும் அவருடைய அன்புக்குரியவளும்
அடுத்தடுத்துப் படுத்ததேயில்லையென்றும்
அரசனை வெட்டிப்போடுவதே அந்த மாதின் நோக்கம் என்றும்
பரபரவென்று எழுதித்தள்ளுகிறாள்.

போதாக்குறைக்கு நேரடியாக வந்தும்
இப்படி காறித்துப்புகிறாள்.

மன்னர் இறந்து பட்டத்தரசியும் தளர்ந்துவிட்ட பின்
தாந்தோன்றி இளவரசி வைத்ததுதானே சட்டம்.

இரண்டாம் மனைவி, மனத்துணை, ஆசைநாயகி
போன்ற அடைமொழிகளில்
கொஞ்சம்போல் மரியாதை தொக்கிநிற்பதாக எண்ணி
அந்த மூதாட்டியை தன் தந்தையான சக்கரவர்த்தியின் வப்பாட்டி
யென்று திரும்பத்திரும்ப வசைபாடி மகிழ்கிறாள்.

இன்னும் விபச்சாரி என்று சொல்லவில்லையே தவிர
வேறு என்னவெல்லாமோ சொல்லியாயிற்று.

அரியணையும் கிரீடமும் வாரிசுரிமையும்
அசையும் அசையா சொத்துக்கள் யாவும் வேண்டும்
அதேசமயம் அவருடைய மனதுக்கினியவளை
வசைபாடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

முடிந்தால் ஊரைவிட்டே துரத்தி ஒரேயடியாய்
முடித்துவிடவேண்டும் தலையை வெட்டி.
ஆனால், மனிதநேயவாதி என்ற முகக்கவசத்தை
இழந்துவிடலாகாதே….

மனக்கணக்குகள் பலவகையாய்,
மூதாட்டியை மதிப்பழிப்பதே
முதலும் முடிவுமான நோக்கமாய்
காறித்துப்பிக்கொண்டிருக்கிறாள் இளவரசி.

கொரோனா காலத்தில் பொதுவிடங்களில் துப்பக்கூடாது
என்று அவளுக்கு யார் எடுத்துச்சொல்வது?

விரிந்து பரந்த அரசரின் பெயர் புகழ் செல்வத்திற்காய்
வந்து ஒட்டிக்கொண்டாள் என்று ஏசி
மீண்டும் மீண்டும் காறித்துப்பப்படும் தன் முகத்தை
மௌனமாய் துடைத்துக்கொள்கிறாள் மூதாட்டி.

தன் மனதுள்ளிருக்கும் டிரங்குப் பெட்டி நிறைய
மன்னர் தந்த சூக்குமப்பரிசுகள் இருப்பதை
எண்ணிப்பார்க்க
அவருடைய சுருக்கங்கள் நிறைந்த முகத்தில்
புன்னகை பரவுகிறது.

மூன்றாமவருக்கு இடமற்ற
அந்தரங்கம் புனிதமானது.

 

No comments:

Post a Comment