Sunday, September 13, 2020

சிறுசேமிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுசேமிப்பு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


இன்னும் சொல்லில் வந்திறங்காமல்
அண்ணாந்து பார்த்தால் அடையாளந்தெரியாத
வெகுதொலைவில்
அந்தரத்தில் பித்தம் தலைக்கேற சுற்றிச்சுற்றி
வட்டமடித்துக்கொண்டிருந்த
உணர்வொன்று கவிதையாகுமா ஆகாதா என்று
ஆரூடங்கேட்க/கூறத் தொடங்கினேன்.
அறிவியல் கோபத்தோடு கணினியை அணைத்துவிட
சேமிக்காத என் வரிகள் என்றுமாய் காணாதொழிந்தன.
நினைவுண்டியலைக் குலுக்கிப் பார்த்தேன்.
சன்னமாய் கேட்கும் ஒலி செல்லாக்காசுகளோ,
சில்லறையோ, சுருங்கி மடிந்த இரண்டாயிரம் ரூபாய்த் தாளோ, தொகை குறிப்பிடப்படாமல் கையொப்பமிடப்பட்டிருக்கும் காசோலையோ......

 

No comments:

Post a Comment