Monday, November 18, 2019

கவிதையின் மெய் ’ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)

             கவிதையின் மெய்
’ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

மெய்க் கவிஞர்
பொய்யாகக் குழைய மாட்டார்;
பொய்யாகப் பணிந்து் குனிய மாட்டார்
பொய்யாகப் புகழ மாட்டார்
பொய்யாக இகழ மாட்டார்
மெய்யாகப் பாராட்டுக்கு
அலைய மாட்டார்
மெய்யாகத் தலையை சிலுப்பிவிட்டுக்
கொள்ள மாட்டார்;
மெய்யாகக் கடலலைகளை
கணக்கிட்டுமுடித்துவிட்டதாய்
நம்பிக்கொண்டிருக்க மாட்டார்;
மெய்யாகவே எம்பிக் குதித்து
விண்ணைத் தொட்டுவிட்டதாய்
மனப்பால் குடித்துக்கொண்டிருக்க
மாட்டார்;
மெய்யாக மண்டியிடாத குறையாய்
முக்கியஸ்தர்களை அண்டிப்
பிழைக்க மாட்டார்.
அதீத அடக்கம் காட்ட மாட்டார்;
அதீத ஆணவமும்.
ஆக்ரோஷமாய் வாய்ச்சிலம்பம்
ஆட மாட்டார்;
கூடமாட ஒத்தாசைக்கு வரும் எடுபிடியாய்
வாசகரை பாவிக்க மாட்டார்;
அடிக்கடி தத்துவம் பேசியவாறே
அடுத்த அடுக்குமாடிவீடு கட்டுவதற்கு
வாகான இடம் தேட மாட்டார்.
மெய்யாகப் பொய்யையும்
பொய்யாக மெய்யையும்
முன்வைப்பாரேயல்லாமல்
தை தக்க தை என்று
அரங்கின்றி வட்டாடி யதை
அரியவகை நாட்டியமாய்
கவிதையில் எடுத்துக்காட்ட
பிரயத்தனம் செய்யமாட்டா
ரொருபோதும்
சிறுபத்திரிகை அங்கீகாரமும் வேண்டும்’
வெகுஜன ஊடக வெளிச்சமும் வேண்டும்
என்று சதா பரபரத்து
ஏங்கித் தவிக்கமாட்டார்;
அனைத்திற்கும் மேலாய்
தன்னை வழிநடத்திய இலக்கியத்தடம்
குறித்து
அறுபத்தியைந்து வயதுக்குமேல்
ஆங்காரமாய் அங்கலாய்த்துக்
கொண்டிருக்க மாட்டார்

No comments:

Post a Comment