Monday, November 18, 2019

நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு… ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு…    

ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்)

பாரிய பெருநிலத்தை
வாரிசுரிமையாய் வம்சச் சொத்தாய்
அரியணை யேறி யரசாண்டு துவம்சம் செய்த
கொடுங்கோலாட்சியாளர்களின் அநியாய
அக்கிரம
அநீதிகள் ஆக்கிரமிப்புகளையெல்லாம்
விரும்பி மறந்துவிடுபவர்கள் _
திரும்பத் திரும்ப மன்னித்துவிடுபவர்கள் _
வெகுசுலபமாய் கடந்துசெல்பவர்கள் _
வேகவேகமாய் தரைவிரிப்பின் கீழ்
மறைத்துவிடுபவர்கள் _
ஒரு புள்ளியிலிருந்து பார்க்கத்
தொடங்குகிறார்கள்
சகமனிதர்கள் அனுபவிக்கும்
சித்திரவதைகளை.
அதற்குமுன் அனுபவித்த
சாட்டையடிகளின்
ரத்தக்கசிவுகள் ரணகாயங்களின்
தழும்புகளைப் பார்க்க மறுக்கும் இவர்கள்
அவற்றைக் கணக்கிலெடுத்துக்
கொள்வதில்லை.
சென்ற பல வருடங்களில் சமத்துவம் பேசித்
தம் சொத்துமதிப்பைப்
பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டவர்களை சகமனிதநேயவாதிகளாகக்கூடப்
பார்க்கச் சித்தமாயிருக்கு
மிந்தச் சிந்தனையாளர்கள்
குறிப்பிட்ட ஒரு பகலிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்
தம் பிரக்ஞையை.
அதுவே முதல் சூரியோதயமென
முழங்குகிறார்கள்.
இத்தனை காலம் சமத்துவம் போதித்த
வர்களதைச்சத்தியமாய்ப் பேசியிருந்தால்
இன்று அத்தனை மக்களுக்கும்
கிடைத்திருக்கும்
அடிப்படை வாழ்வுரிமைகள்.
இது புரியாதவர்களல்ல இவர்கள்;
பார்க்கமறுக்கும் அறிவுசாலிகளின்
விழிகளுக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது பேருண்மை
வானம்போல்.
மொத்தமா யொரு தலையில் பழியைப் போட்டுவிடுவதே
பத்தரைமாற்று அறிவுசாலியாக உடனடி வழியென்றான பின்
சத்தமாய் இன்னும் சத்தமாய்
இன்னுமின்னும் சத்தமாய்ப்
போட்டுத் தாக்கி
குழிபறித்துப் புதைப்பதற்கென்றே
கிழிபடும் வரலாறு.

No comments:

Post a Comment