Monday, November 18, 2019

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கர்ணனைத் தங்கள் தோழனாகத்
தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர்
வலது கை கொடுப்பதை
இடது கை யறியாமல்
தர விரும்புவதேயில்லை.
’கமர்கட்’ தானம் கொடுத்தாலும்
அதைக் கணக்கற்ற காமராக்களின்
ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள்.
இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய்
கொடுத்து
வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில்
துல்லியமாய் செல்ஃபியெடுத்துப்
பதிவேற்றிவிடுகிறார்கள்.
குட்டு வெளிப்பட்டதும்
துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என்று
கொஞ்சமே கொஞ்ச காலம்
அஞ்ஞாதவாசத்திலிருந்தவர்கள்
வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து
கவி பாடி
விட்ட இடத்திலிருந்து
தங்கள் தர்பாரைத் தொடங்குகிறார்கள்.
காணிநிலமென்று சில ஏக்கர்
நிலங்களைக்
கைவசம் வைத்திருக்கும்
நவீன ஏழைகள் சிலர்
ஒண்டுக்குடித்தனத்திலிருப்பவர்களைக்
கொடுங்கோலரசர்களாகக் காட்டி
செருப்பாலடிக்கிறார்கள்
திரும்பத்திரும்ப.
பேசும் பாம்புகளாக மெகாத்தொட
ரோட்டிக்கொண்டிருக்கும்
விஜய் தொலைக் காட்சி
‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க
வில்லை, மூடப்பழக்கவழக்கங்களை
ஊக்குவிக்கவில்லை' என்றெல்லாம்
பலவாறாய்
நீண்டு வளைந்துசெல்லும்
வாக்கியப் பாம்புகளை
திரையில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு வேகவேகமாய்
ஊர்ந்துசெல்ல வைக்கிறது.
எல்லோரும் உண்மைதான் பேசுவார்கள்,
உண்மையாகத்தான் பேசுவார்கள்
என்று இன்னமும் எண்ணியவாறிருக்கும்
இத்தனை பெரிய மூடநம்பிக்கையிலிருந்து
மீளும் வழியறியாமல்
விக்கித்து நிற்கிறது என் பகுத்தறிவு.

No comments:

Post a Comment