Monday, November 18, 2019

பாவனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பாவனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தான் அறிந்த எனில் அங்கீகரிக்க விரும்பாத நாலுபேர் சொல்லும் உலகத்தரமான படைப்புகளில் ஒன்றிரண்டை அரைகுறையாகப் படித்துவைத்து
அவ்வப்போது உங்களை நேராகவும் பக்கவாட்டிலுமாய்ப் பார்த்தபடி
அந்த எழுத்தாக்கங்கள் பற்றிச்
சில மேலோட்டமான கருத்துரைப்பார்.
அதிக வேலையிருப்பதால் விரிவாக எழுதமுடியவில்லை என்று
விளக்கம் தரக்கூடும்.
கவனமாகக் கேட்டுக்கொள்வதோடு
கண்டிப்பாக ‘லைக்’ போடவேண்டும் நீங்கள்.

நாளையே இதைச் செய்துவிட மாட்டார். அப்படிச் செய்தால் இன்னொருவரிடமிருந்து இரவல் வாங்கியிருப்பது தெரியவந்துவிடும்.
இன்னாரிடமிருந்து என்றுகூட.
அதுவே நான்கைந்து வாரங்களுக்குப் பின்
கூறினால்
அந்தக் கூற்றின் இரவல்தன்மை குறைந்துவிடுமென்பது
களநிலவரம்.

கலவரம் வேண்டாம்.
தரமான படைப்பாளியாவதற்கு
தரமான படைப்புகளைத் தரவேண்டும்
என்பதெல்லாம் சரிதான்.
ஆனால், அதுமட்டும்போதாது.
அதிக பாவனைகளைக் கைக்கொள்ளவேண்டும்.
ஷேக்ஸ்பியரே தன்னைக் கேட்டுக்கொண்டுதான் அத்தனை நாடகங்களையும் எழுதினார் என்று அடித்துக்கூறவேண்டும்.
அதெல்லாம் அத்துப்படி யவருக்கு.

அதை அவர் செய்யச்செய்ய
அதிக ’லைக்கு’களை நீங்கள் போட்டுப்போட்டு
போட்டிபோட்டு போட்டுப்போட்டு
கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கி எப்படிப்பார்த்தாலும்
அவர் அறிவுசாலிப் படைப்பாளியாகத்
தெரியும்படி
பீடத்தில் உயரே ஏற்றிப்
போற்றிப்பாடவேண்டும்.

படைப்பாளி பெரிய படைப்பாளியாக,
அவரைப் படிப்பவர்களும் பெரிய வாசகர்களாகிவிடுவார்கள்!

ஆனால் அவரையன்றி வேறு எந்தவொரு
அசலான பெரிய படைப்பாளியைக்
கொண்டாடினாலும்
அப்படிச் செய்யும் வாசகர்கள்
நரகத்திற்குத்தான் போவார்கள்
அங்கே யவர் பேயாக வந்து
உங்கள் ரத்தம் குடிப்பார்.

அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது;
ஆனால் பேய் பிசாசுகள் மீது நிறையவே உண்டு.
அதனால்தான் பகுத்தறிவின் தேவையைத் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்.

புரிந்தால் சரி.

விறுவிறுவென உங்கள் வலக்கர அல்லது இடக்கர ஆள்காட்டிவிரல் அல்லது மோதிரவிரலால்
’Like’ -ஐ அழுத்துங்கள்.
'Like - Love' இரண்டையும் ஒருசேர அழுத்த முடிந்தால்
இன்னும் நல்லது.

இதோ அடுத்த உலகத்தரமான இன்னொரு எழுத்தாளரின் இரண்டு மூன்று வரிகளை வாசித்துமுடித்துவிட்டார் மேதகு படைப்பாளி்.
அவை குறித்த தனது மேலான பார்வையை
இன்றிரவுக்குள் பதிவேற்றிவிடுவாரோ…
இல்லை, இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருப்பாரோ……

No comments:

Post a Comment