தீர்ப்பும்
விசாரணையும்
ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
“அது அராஜகச் சட்டம்”
”அப்படியல்ல. வாருங்கள்,
சற்று அகல்விரிவாகப் பேசுவோம்”
”பகலிரவாய் அதைப்பற்றிப்
பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா?
அரைகுறை அறிவைக்
கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம்.
ஆயிரம் சொன்னாலும் அது தோல்வியடைந்த திட்டம்தான்”
”அப்படியல்ல வாருங்கள்,
அதன் முக்கிய அம்சங்கள், விளைவுகளைப்
பற்றி சற்று அகல்விரிவாகப்
பேசுவோம்”
”அட, வெட்டு ஒன்று
துண்டு இரண்டு. வீணுக்கு ஏன் வளவளாப் பேச்சு
அது நாசகாரவேலைதான்.
நாக்குமேல பல்லப் போட்டு நீ இல்லையென்றால்
நீச வேசக்காரன்
நீயெனச் சொல்லிவிடுவேன்.”
”அப்படியல்ல, வாருங்கள் -
அதைப் பற்றிய என் பார்வையை முன்வைக்கிறேன்”
”முன்வைத்த காலை
பின்வைக்கும் ஆளில்லை நான்.
நான் சொன்னால்
சொன்னதுதான்.”
“இப்படிச் சொன்னால்
எப்படி?என் தரப்பைச் சொல்ல அனுமதியுங்கள்”
நீ என்ன பெரிய
இவனா ?
நீங்கள் என்ன பெரிய
இவரா என்று நான்
ஒருபோதும் கேட்கமாட்டேன்
பரவாயில்லை, வாருங்கள்
- அதன் முக்கியத்துவத்தைப் பற்றி சற்று
முனைப்பாய்ப் பார்க்கலாம்
நினைப்புதான் பொழப்பைக்
கெடுக்கும்
– உன் நினைப்பையும்
உன் பொழப்பையும்தான் சொல்கிறேன்.
அப்படியேயாகட்டும்,
வாருங்களேன் அதைப் பற்றி சற்று திறந்த மனதுடன் அலசிப் பார்க்கலாம்
நான் சொல்வதை சரியென்று
வரவேற்க மட்டுமே உன் மனதைத் திறந்துவைக்கக் கற்றுக்கொள்.”நான் சொன்னால் சொன்னது தான்
– மறுத்துப்பேசும் நீ அவருடைய கைக்கூலி – கருங்காலி
மூடிக்கொள் வாயை
– இல்லையோ நீ காலி”.
Ø
No comments:
Post a Comment