Monday, January 16, 2017

சீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சீதைக்கும் பேசத் தெரியும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ராமன் என் அன்பன்.
அவனோடு நான் அற்புதமான பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
நாங்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும்!
எப்படியெல்லாம் கூடிக்களித்திருக்கிறோம் தெரியுமா?
ஆரண்ய மரங்கள் கதைப்பாட்டுப் படிக்கும்!
அவன் என்னை சந்தேகப்பட்டது ஒரு சறுக்கல்;
அதற்காய், என்னைக் கடத்திச்சென்றவனை நான்
காதலிப்பேன் என்று கிறுக்குவதா?
பெண்ணை வலுக்கட்டாயப்படுத்துபவன் கயவனல்லவா?
கதாநாயகன் என்கிறீர்களே?
எனதுரிமையைப் பேசுவதாய் என்னை ஏன் இன்னுமின்னும் சிறுமைப்படுத்துகிறீர்கள்?
கடத்திச் சென்றவனுக்குக் கெடுக்கத் தெரியாதா என்ன?
கிட்டே நெருங்கினால் தலை வெடித்துச் சிதறும் என்பதால்
எட்ட நின்றே ஏங்கிப் பார்த்தான்.
கையெட்டும் தூரத்தில் மண்டோதரி இருக்க
என்னென்ன கெட்ட வார்த்தைகளைப் பேசினான் தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை துட்டனே யவன்.
அவனுக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு.
ஆனால், நான் அவனை உள்ளூர நேசித்தேன் என்று பொய்பேசி
பாதிக்கப்பட்ட என்னைக்கொண்டே பாதகன் அவன் விடுதலையை வாங்கித்தரப் பார்க்கவேண்டாம்.
உங்கள் மனைவி, மகள் கடத்தப்பட்டால்
இப்படித்தான் மனிதநேயம் பேசுவீர்களா?
என் அன்பன் ராமபிரான் என்னை சந்தேகப்பட்டான்.
யாரால்? யார் செய்த காரியத்தால்?
சந்தேகப்பட்டதற்காய் எத்தனை அலைபாய்ந்திருக்கும் என் அன்பன் மனம் என்று எனக்குத் தெரியும்.
ஆறாக்காயம்தான், 
அதற்காய் ராவணன் கையாலா மருந்திட்டுக்கொள்வேன்?
ஏன் எல்லோருமே என் விஷயத்தில் வெவ்வேறுவிதமாய்
ராவணனாகவே நடந்துகொள்கிறீர்கள்?


No comments:

Post a Comment