Monday, January 16, 2017

சரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

சரியும் தராசுகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)



















1.தொழில்நுட்பம்
 காசுள்ளவர்க்கும்
 காவல்படை வைத்திருப்ப
வர்க்கும்
 காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ
எப்போதும் தேவை
எளிய கவிஞர்களின் தலைகள்.
தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று
விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.

2. ரசனை
பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை ஏந்திவந்தார்
நீந்தத் தெரிந்தவனை மூழ்கடிப்பதே குறியாய்
வண்டை வண்டையாய்
தொண்டைத்தண்ணீர் வற்ற
ஏசிமுடிக்க.
கூசாத மனசாட்சி வாய்த்த நீசர்கள்
கூலிக்குப் போட்டுத்தள்ளுகிறவர்களைக் காட்டிலும்
மோசமானவர்கள்.

3. வாசிப்பு
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
என்ற நம்பிக்கையில்
படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்
அது படிக்கவேண்டிய புத்தகம் என்று.
பக்கம்பக்கமாய் பெருகியோடும் அபத்தத்தின் அழுகலில்
அக்கம்பக்கமெங்கும் புழுத்தவாறு.

4. புவியியல்
இருந்தாற்போலிருந்து திடீரென்று முளைத்த காளான்
தானொரு கோள்தான் என்று காட்டிக்கொள்ளும் முனைப்பில்
நீட்டிமுழக்கிக்கொண்டிருப்பதைக் கேட்டு
நகைத்துமாளவில்லை
நட்சத்திரங்களுக்கு.

5. தமிழ்க்கவியின் தலைவிதி
எண்பது பக்கக் கவிதைத்தொகுப்பிற்கு
எண்ணூறு பக்க விமர்சனம் எழுதுவதென்பது
எத்தனை பெரிய காருண்யம் என்பார்
கல்லறையிலிருந்து எழுந்துவந்து
கவிஞர் நன்றிதெரிவிக்கவேண்டும் என்றும் சொல்லக்கூடும்.

6. இடிபாடு
நட்பை விடுங்கள்
கெட்டுப்போய்விட்டதே நன்னெறி…
பட்டுப்போய்விட்டதோ மனசாட்சி?
அந்த எட்டு பேர் காலாட்டியமர்ந்தபடி
கெக்கலிக்கும் குட்டிச்சுவரின்
அடித்தளம் உட்குழிந்தவண்ணம்.

7. விற்பனைக்கு
பெறவுள்ள பட்டமே குறியாய்,
நிறுத்தற்குறிகளுக்கப்பாலான
கவிமனதை
வதைத்துச் சிதைத்து
வாழ்த்துப்பா பாடுபவர்
விழுமியம் கிலோ என்ன விலை?

8.ஈரும் பேனும்
எட்டுப்பக்கங்களில்
கட்டவிழ்க்கப்பட்டிருந்த
சட்டாம்பிள்ளைத்தனத்தின்
முட்டாள்தனம்
ஒரு பானை சோறும்
ஒரு சோறும்….

9. உரமும் திறமும்
அந்த விரிவுரையாளருக்காகப் பரிந்துபேசுபவர்
வரிந்துகட்டிக்கொண்டு வழக்காடுபவர்
இந்த விரிவுரையாளரைப் புறக்கணிப்பதும்
புறம்பேசுவதும் சரியோ சரியா?
சிரியோ சிரியென்று சிரிக்கிறாரே
சான்றோனைக் கண்டு.
அறிந்தே இவர் செய்யும் சிறுமையைப்
பொறுத்தருளப்
பைத்தியமல்லவே பராசக்தி.



No comments:

Post a Comment