Monday, January 16, 2017

கச்சேரி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கச்சேரி
ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்)


(*சமர்ப்பணம்: தோழர் கே.என்.சிவராமனுக்கு)


சிலருக்குக் குரலெழும்பவில்லை; 
கிச் கிச்மாத்திரை கைவசம் இருந்ததோ இல்லையோ..
கோடையென்றாலுங்கூட சிலர் 
அவசரமாய் அப்பால் சென்றார்கள் சிறுநீர் கழிக்க
இயற்கையின் அழைப்பை ஏற்கவில்லையானால்ஈகாலஜியைப் பழிப்பதாகிவிடாதா
காதுகளில் செருகியிருந்த கருவியைக் காரணங்காட்டி, 
எதுவும் கேட்கவில்லை என்பதான பாவனையைத் 
தருவித்துக்கொண்டவர் சிலர்; 
தக்கவைத்துக்கொண்டவர் சிலர்.
மறு கன்னத்தைக் காட்டுபவனே மகத்தான மனிதன் என்று மேற்கோள் காட்டியவர்கள் உண்டு.
காட்டானை மாற்றான் தோட்ட மல்லிகை மணமாக
பாட்டுப்படித்தவர்கள் உண்டு.
பல்லவி அனுபல்லவி கீர்த்தனை ஆலாபனை 
யென நீண்டு
சாட்சாத் கவிதைக் களவாடிகளே சரணம் என்று 
மங்களம் பாடினர் சிலர் மாறா சுருதிபேதங்களில் நின்று.
முன்னும் பின்னுமாய் நிலவிய மயான அமைதியே
இன்னருங் கானம் என சிலர் பொருள்பெயர்க்க
உன்னை மிதிப்பதில்தான் என் வழி திறக்கிறதென
பொன்மொழி சிலர் இறைக்க,
அரங்கதிரக் கைத்தட்டல் அவ்வப்போது 
கேட்டுக்கொண்டிருந்தது கிசுகிசுப்பாய்.
அபஸ்வரத்தைச் சுட்டுவது யார் , குட்டுவது யார் என்று 
அந்தரத்தில் காயம்பட்டுக்கிடந்த சிட்டுக்குருவி 
 
விட்டுவிடுதலையாகவோர் 
சூட்சுமமாய்
கிளம்பியது அரங்கில் அந்த ஒற்றைக்குரல்
ஓலமாய் 
ஓங்காரமாய் 
ஒப்பிலா சங்கீதமாய்.
ஒருவகை சாபவிமோசனமாய்.


No comments:

Post a Comment