LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, December 7, 2025

வாழ்க்கை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாழ்க்கை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

எங்கிருந்தோ அந்தரத்திலிருந்து
பறவைச்சிறகித
ழொன்று
பரபரவென்று கீழிறங்கிவந்து
நம் முன் நெற்றியிலோ
கன்னக்கதுப்பிலோ படரும்போது
மனங்கனிந்துணரும் சிலிர்ப்பும்
அதன் மறதியுமாய்
அவ்வப்போது மாறும் விகிதாச்சாரத்தில்

t



கவிதையின் கையறுநிலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் கையறுநிலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கவிதைக்கு வெளியேயான எல்லாவற்றாலும்
தன்னைக் கவியாகக் காண்பித்துக்கொள்வதில்
முனைப்பாக இருப்பவரிடம்
கண்கலங்கிக் கேட்கும் கவிதை:
"என்னை ஏன் கைவிட்டீர்?"

S



அவரவர் நியாயங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் நியாயங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தான் யாரை வேண்டுமானாலும் மட்டையடி அடிக்கலாம்.
GOOGLEஇலும் AIஇலும் தரப்படாத அ(ன)ர்த்தங்களை
தரப்பட்டிருப்பதாகக் காட்டலாம்.
ஒரேயொரு கட்டுரை எழுதியிருப்பவரே அதிசிறந்த கட்டுரையாளர் என்று துண்டுபோட்டுத் தாண்டிக்கொண்டேயிருக்கலாம்.
Autobiographyயுமில்லாத Biopicகுமில்லாத ஒரு கற்பனையில் தன்னைself-justify செய்துகொண்டேயிருக்கலாம்
‘Abstract’ ஓவியம் பற்றி ஏதும் தெரியாமலே
Anatomy பற்றி ஏதும் தெரியாமலே
Aerodynamics பற்றி ஏதும் தெரியாமலே
AgroPhysics பற்றி ஏதும் தெரியாமலே
எதைவேண்டுமானாலும் பக்கம்பக்கமாய் எழுதலாம்.
அதிலொரு தவறைச் சுட்டிக்காட்டும் மற்றவர்
உயிரோடிருந்தால்
சவுக்காலடிக்கலாம் சாதியின் பெயரால்.
இறந்துபோயிருந்தால் இன்னும் வசதி
ஏறிமிதித்துக்கொண்டேயிருக்கலாம்

மனசாட்சி - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனசாட்சி

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தானே உலகத்தின் ஆகச்சிறந்த அழகு என்று
திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார் அவர்.
தானே உலகத்தின் ஆகச்சிறந்த அறிவு
என்றும் திரும்பத்திரும்பச்சொல்லிக்கொண்டேயிருந்தார் அவர்
மானே தேனே சேர்த்துக்கொண்டு ஆரவாரமாக ஆமோதித்தார்கள் அந்த சிலபலர்
அவருக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்.
விடுதலையென்பது எனக்கு அடங்கியிருப்பது
என்று போதித்தார்.
”வாஹ்! வாஹ்!” என்று வாய்நோக
வழிமொழிந்தார்கள் அந்த சிலபலர்
தானே தனக்குப் பொய்சொல்லிக்கொள்வதை
தனது படைப்புப்பணியின் உள்ளார்ந்த அம்சமாகக் கொண்டவர்
நிலைக்கண்ணாடி மட்டும் தன் சொல் கேளாமலிருப்பது கண்டு
கடுங்கோபம் கொண்டார்.
கையால் அதை சுவரிலிருந்து பிடுங்கியெறிந்தார்
தரைவிழுந்து சிதறிய துண்டங்களிலும்
அவர் முகம் அவராகவே கண்டது.

தவிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

தவிப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நாற்புறமும் வியூகம் அமைத்துத் தாக்கவரும் வாகனங்களற்ற தெருவொன்றில்
உறுமியது நாயொன்று பலவீனமாக.
அதைச் சுற்றி இரண்டு மூன்று நாய்கள்
வியூகமைத்துத் தாக்கத் தயாராய்.....
அடுத்த சில கணங்களில் நடுவீதியில்
வன்புணர்வுக்காளாக்கப்படும் அந்தப்
பெட்டைநாய்.
எங்கு விரைந்து பதுங்குமோ
எங்கெல்லாம் காயம்பட்டுத் துடிக்குமோ…
எனக்குப் பிடிக்கவில்லை என்று அதன் உறுமலில்
தெளிவாகவே புரிந்தாலும்
பொருட்படுத்துவார் யார்?
மனித வாழ்வே இங்கே நாய்ப்பாடாக
பெட்டைநாயின் வலியை சட்டை செய்ய ஏது நேரம்?
கனக்கும் மனதுடன் மேலே நடக்க
தெருவோரம் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்:
’இளம்பிள்ளைகள். இரவு நேரம்’ ’பாவம்’ என்ற வார்த்தைகள்
பாலியல் வன்புணர்வு செய்யும் பொறுக்கிகளுக்கு
வக்காலத்து வாங்குவதாய்
மண்டையில் சூடேற
ஒரு கணம் நின்று திரும்பிப்பார்த்தேன்.
’அவர்கள் அந்த நிகழ்வைத்தான் பேசினார்கள் என்று
அத்தனை சரியாக அறிவாயா நீ?’
என்று அறிவு கேட்டு
ஒருமாதிரி நிதானப்படுத்தியதில்
நடையைத் தொடர்ந்தபோது
கால்கள் நடுங்கித் தடுமாறுவதை உணரமுடிந்தது.

வாய்ச்சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வாய்ச்சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்”
_ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம்
அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில்
சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க
முக்கியஸ்தர்களுக்கெல்லாம்
மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில்
சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது அறுசுவை விருந்து
_ முழுவதுமாய் புரிந்ததென்று சொல்லமுடியாவிட்டாலும்
வெள்ளித்திரையில் விசுவரூபமெடுத்திருக்கும்
வீரநாயகன் குரல் முழக்கத்தில்
ஏற்றத்தாழ்வுகளற்று அகிலமே
அதியழகானதான பிரமையினூடே
பேருந்து நிறுத்தம் நோக்கி ரசிகர் நடந்துகொண்டிருக்க
அதே வழியாக வழுக்கியோடிச்சென்றது
அவர் வணங்கித் துதிக்கும் நடிகரின்
அந்நியநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
பிரம்மாண்ட ‘ப்ளஷர்’ கார்.
‘எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை யாவும்
நம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகள்’
என்று இரண்டரை மணிநேரம் வேகாத வெயிலில்
கால்கடுக்கக் குரலெழுப்பி முடித்த பின்
தலைவரிடம் சங்க நடைமுறை சார்ந்த ஒரு எதிர்க்கருத்தைச் சொன்னவனுக்கு
துரோகி என்ற பட்டம் தரப்பட்டு
அவனை அடித்துத் துரத்திவிட்டு
அடிப்படை உரிமைகளுக்கான கருத்தரங்கம்
தடையற்றுத் தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தது
அடிமனக் கசடுகளையெல்லாம் வெகு சுலபமாகப்
பொறுப்புத்துறப்பு செய்ய
இருக்குமொரு துருப்புச்சீட்டா யிருந்துகொண்டே
யிருக்கும்
ஒரு சில பெயர்கள்
குறியீடுகள்
பிறவேறும் _
கொக்கரிக்கவும்
குத்திக்குதறவும்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம்! . _ லதா ராமகிருஷ்ணன்

 இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

.........................................................................................................................................
_ லதா ராமகிருஷ்ணன்

(*2022 டிசம்பரில் எழுதப்பட்ட கட்டுரை இது)
வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக் கும் வழக்கம் நம்மி டையே பரவலாக இருந்துவருகிறது.
மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதி யம், தங்குமிடவசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித் துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதானவர்கள் அனைவருக் கும் ஒரேபோல் கிடைக்கிற தென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவேயாகியிருப்பதா கச் சொல்ல வழியுண்டு. ஆனாலும் 60 - 90 வரையான அனைத்து வயதினரையும் முதியவர்கள் (மூத்த குடிமக் கள் அழகான விவரிப்பு!) என்ற ஒரே அடைமொழியில் அடையாளப்படுத்தும் போக்கே இன்றளவும் பரவலாக இருக்கிறது.
வயதானவர்கள் என்றால் ஏக்கத்தோடு தன் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். தன் னால் இப்போது இதைச் செய்ய முடிய வில்லையே, அதைச் செய்ய முடியவில்லையே, தன்னை யாரும் கவனிக்கவில்லையே, தன்னோடு யாரும் பேசுவதில் லையே, தன்னை யாரும் பொருட்படுத்தவில்லையே, தன்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லையே – இப்படி ஏங்குபவர்களாகவே, அங்கலாய்ப் பவர்களாகவே வயதானவர்களைச் சித்தரிப்பதில் நிறைய பேருக்கு ஒரு சந்தோஷம்.
இப்படியிருக்கும் வயதானவர்களும் உண்டு என்பது உண்மைதான்.
ஆனால் இந்த அங்கலாய்ப்புகளும், ஆற்றாமைகளும் இளைய வயதினருக்கு இல்லையா என்ன?
சில நாட்களுக்கு முன்பு ஒருவர் முதுமை என்றால் பொய்ப்பல், ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரை, கைத்தடி என்று நிறைய வெளியாதரவுகளின் துணையோடு வாழும்படியாகிறது என்று வருத்தப்பட்டிருந்தார்.

ஒருவகையில் அது உண்மைதான் என்றாலும் அப்படிப் பார்த்தால் இளம் வயதில் பவுடர், குறிப்பிட்ட உடைகள், சிகையலங்காரம், பர்ஃப்யூம், என்று பல தேவைப் படுகின்றனவே? பிடிக்காத படிப்பு, அந்நியவுணர்வூட்டும் இடத்தில் வாழ்வாதாரத்திற்காக வாசம், என்று நிறைய சொல்லலாம்.
இந்த கையறு நிலையுணர்வுகளையெல்லாம் கடந்து தானே மாற்றுத்திறனாளிகள் தினசரி வாழ்ந்துகொண்டி ருக்கிறார்கள்?
பத்மினி மேடமுக்கு இப்போது 90 வயதுக்கு மேலேயிருக் கும். (எனக்கே 65 வயதாகிவிட்டது). ஆனால் வாழ்வை ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்ப் பதோ, அங்கலாய்ப் பதோ அவரிடம் கிடையவே கிடையாது. அவருக்குக் காலா றக் கடற்கரையில் நடப்பதும், கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும். பத்து வருடங்கள் முன்புவரை கூட தினசரி தன் நட்பினர் சிலரோடு போய்க் கொண்டிருந்தார். இப்போது முடியவில்லை. அது குறித்து மனதில் அவ்வப்போது தோன்றக்கூடிய ஒரு சிறு இழப்பு ணர்வு அங்கலாய்ப்பாக உருவெடுக்க அவர் அனுமதித் ததேயில்லை!
ஒவ்வொரு வயதுக்கும், பருவத்துக்கும் அதற்கான அனு கூலங்கள் உண்டு என்று பத்மினி கோபாலன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை 40 வயதுகளில் தனியாக இயல்பாக ஹோட்டலுக்குச் சென்று, யாரும் பார்ப்பார் களோ என்று self-conscious ஆக படபடப்பாக உணராமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடும் போது உணர்ந்திருக் கிறேன்!
70 வயதுகளில் இளையதலைமுறையினர் பயிலும் கணினிப் பயிற்சி மையத்திற்குச் சென்று கணிப்பொறி யைக் கையாளும் பயிற்சி பெற்றார்.
சில வருடங்களுக்கு முன்பு வீதியோரம் வசிக்கும் ஏழைப் பெண்மணி யொருவரின் மகள் விபத்தாக கருவுற்ற போது அவளுக்கு உதவ எங்கோ தொலைதூரத்திலிருந்த அமைப்பு ஒன்றுக்கு தோழர் மோகன் தாஸின் உதவி யோடு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போய் அங்கே மணிக்கணக்காகக் காத்திருந்து அந்தப் பெண் ணுக்கு உதவமுடிந்த வழிவகைகளை அணுகி வேண்டி னார் பத்மினி மேடம்.
இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தும் தமிழ் படிக்கவே வராமலிருக்கும் (தமிழ் வழியில் கல்வி பயின்ற) ஒரு இளம்பெண்ணுக்கு தமிழ் கற்றுத்தரும் வேலையில் இறங்கியிருக்கிறார்! எளிய தமிழிலான கதைப்புத்தகங்கள் இருக்கின்றனவா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்!
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளிகளின் தர மேம்பாடு பற்றிப் பேசி னால் ’உடனே தனியார் பள்ளிகள் மட்டும் ஒழுங்கா என்று கேட்க நிறைய பேர் கிளம்புகிறார்கள். இது ஏன் என்றே தெரியவில்லை’ என்று ஆதங்கப்படுவார்.
(அவருடைய ஆதங்கமெல்லாம் சமூகம் சார்ந்ததாகத் தான் இருக்குமே தவிர அவருடைய வயது காரணமாக எழுவதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது).
இன்றைய இளந்தலைமுறையினர் பலருக்கு (தனியார் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்குக்கூட) தாய்மொழி யில் தங்குதடையின்றி வாசிக்கவும் எழுத வும் தெரியாத நிலை பரவலாக இருக்கிறது. இந்நிலை மாறவேண்டியது மிக அவசியம்.
மாண்டிசோரி கல்விமுறையில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களில் தமிழ் எழுதவும் வாசிக்கவும் பள்ளிமாணாக்கர் களுக்குக் கற்றுத்தர முடியும் என்று பத்மினி கோபாலனின் முன்முயற்சியில் உருவான அமைப்பின் வழி மாண்டிசோரி ஆசிரியைகளாக உருவாகியுள்ளவர்கள் சமூகத்தின் அடித்தட்டி லிருந்து வரும் பள்ளிப்பிள்ளைகளிடையே நிரூபித்திருக்கி றார்கள். இந்த வழி முறையிலான மொழிப்பயிற்சி பரவலாக் கப்பட்டால் நிறைய மாணாக்கர்கள் பயனடைவார்கள்.
பத்மினி மேடமைப் பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிவது –
• நம்மைப் பற்றி மட்டுமே எண்ணாமல் நமக்கு வெளியே பார்க்கும்போது நம்மை அங்கலாய்ப்புகளும் தன்னிரக்க மும் அதிகம் பாதிக்காது.
• எந்த வயதிலும் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்.
• இன்னொருவரோடு போட்டிபோடுவதாய், மூன்றாம வரை பிரமிக்கவைப்ப தற்காக வாழ்வது என்ற மன நிலையை வளர்த்துக்கொள்ளக்கூடாது.
• நம் வீட்டுக் குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளிலான குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வீட்டுச் சூழல், பள்ளிச்சூழலை உருவாக்கித்தர நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• எதற்காகவும் மனதில் வெறுப்பும், ஆணவமும், கழி விரக்கமும் மண்ட அனுமதிக்கலாகாது.
• தன்மதிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் நிறைய எழுதலாம்……..

வேடதாரிகளும் விஷமுறிப்பான்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வேடதாரிகளும் விஷமுறிப்பான்களும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(*சொல்லடி சிவசக்தி கவிதைத்தொகுப்பிலிருந்து - கவிதை 28)


அத்தனை கவனமாகப் பார்த்துப்பார்த்துத் தேர்ந்தெடுத்து
ஊரிலேயே மிகச் சிறந்த தையற்காரரிடம் கொடுத்துத்
தைக்கச்சொல்லி
மீண்டுமொருமுறை திருத்தமாய் நீவி மடித்து
பதவிசாக அதையணிந்துகொண்டு
ஆடியின் முன் நின்றவண்ணம்
அரங்கில் நளினமாக நடந்துவருவதை
ஆயிரம் முறை ஒத்திகை பார்த்து முடித்து
அப்படியே நீ வந்தாலும்
அடி! உன் விழியோரம் படமெடுக்கும் நாகம்
வழியெங்கும் நஞ்சு கக்கும் என
அறிந்திருக்குமெனக்குண்டாம்
குறைந்தபட்சம்
இருபது திருநீலகண்டங்கள்!

காத்திருப்பு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 காத்திருப்பு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அத்தனை ஆர்வமாய் சுழித்தோடும் அந்த ஜீவநதியில்
அதன் பெருவெள்ளத்தில்
அதற்குள் இரண்டறக் கலந்திருக்கும்
ஆயிரமாயிரம் மகா சமுத்திரங்களில்
அதிசயமாய் யாரேனும் நீந்தத்தெரிந்து
நீந்த முடிந்து
முங்கி முக்குளித்து முத்தெடுத்துவந்தால்
உடனே அதை சொத்தையென்று சாதிக்கும்
அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் _
அஞ்சலிக் கட்டுரைகள் எழுதவும்
அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தவும்
அங்கேயும் அந்த நீரோட்டத்தை
அதன் சுழலை விசையை
அதன் நன்னீர்ச்சுவையை
மதிப்பழித்து
அதைக் குட்டையெனவும்
கழிவுநீர்த்தொட்டியெனவும்
இட்டத்துக்குச் சுட்டிக் காட்டவும்
பட்டம் கட்டவும்.
வற்றாதநதி வறண்டுபோனால்
அது நதியாக வாழ்ந்த காலம்
இல்லையென்றாகிவிடுமா என்ன?
நதிவாழ்வின் நிரூபணம் நம் கையிலா?
வற்றியநதிப்படுகை வெறும் பாலைவனமா
புவியியலும் இலக்கியமும் ஒன்றுதானா
உடற்கூராய்வு நிபுணர்களுக்கு
இலக்கியவெளியில் பஞ்சமில்லை.
வேறு சில வியாபாரிகளுக்கு
பொருள்களின் antique value
அத்துப்படி....
எத்தனையோ தடுப்புகளை மீறி
சிந்தாநதிதீரத்திற்கு வந்துசேர்ந்து
விழிகொள்ளாமல் வாசித்துக்கொண்டிருப்பவர்க்கு
நதிக்கடல்பெருகிக் கால்நனைய ஆன்மா குளிர_
கரைந்துருகும் மனதின் கரைகளெங்கும் சேர்ந்துகொண்டேயிருக்கின்றன
அழியாச்சொத்துக்களாய்
சொல்பொருள் நீர்மச்சலனங்கள்.