Thursday, June 20, 2024

நேர்கொண்ட பார்வை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேர்கொண்ட பார்வை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அவள் நல்லவளாகவே இருக்கக்கூடும்;
வல்லவளாகவும்கூட.
நடுவகிடு எடுத்துத் தலைவாரினாலும் சரி
கோணவகிடு எடுத்துத் தலைவாரினாலும் சரி
அவள் அழகென்றே அறியப்படத் தகுதிவாய்ந்தவளே.
அத்தனை சீக்கிரம் அழாத திட மனது வாய்க்கப்பெற்றவளாயிருக்கலாம் ;
அவரிவருக்கு அனேக உதவிகள் செய்பவளாயிருக்கலாம்;
முத்துமுத்தான கையெழுத்து வாய்த்திருக்கலாம் அவளுக்கு;
முதல் மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும் பள்ளி கல்லூரிகளில்.
பெற்ற குழந்தைகளுக்கு நற்றவத்தாயாயிருக்கக்கூடும்;
கற்ற வித்தைகளை காசு வாங்காமல் நாலுபேருக்கு சொல்லிக்கொடுக்கக்கூடும்;
கோனார் நோட்ஸ்ஸின் உதவியில்லாமலேயே பரிட்சைகளில் தேறியிருக்கக்கூடும்;
கோஹினூர் வைரத்தில் ஒட்டியாணம் அவள் நகைப்பெட்டியில் இருக்கக்கூடும்;
குழலிசைக்குரலுக்குச் சொந்தக்காரியாக.
இருக்கக்கூடும்;
கூடுவிட்டுக்கூடுபாயும் வித்தையைக்
கற்றிருக்கக்கூடும்;
ஆடலும் பாடலும் அறிந்திருக்கக்கூடும்;
அநாயாசமாய் ஆறுக்குமேல் பெரிய தோசைகளை சாப்பிடக்கூடும்.....
எப்படியிருந்தாலும் சரி _
தயவுசெய்து இப்படி எல்லாப் புகைப்படங்களிலும்
ஒருபுறமாய் தலையை சாய்த்து
சகிக்கமுடியாதவொரு கிறக்கப்பார்வை வீசியவாறே
’போஸ்’ கொடுக்கவேண்டாம்
என்பதே
மண்டியிட்டு தெண்டனிட்டு
அவருக்கு நான் சமர்ப்பிக்கும்
பணிவான கோரிக்கை.

No comments:

Post a Comment