Thursday, June 20, 2024

அன்னா அக்மதோவாவின் கவிதைகள் சில தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

 அன்னா அக்மதோவாவின் கவிதைகள் சில

தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

//அன்னா அக்மதோவா கவிதைகள்//




இப்போது படிக்கும்போது சில வரிகளை இன்னும் செறிவாக மொழிபெயர்த்திருக்கலாமே என்று தோன்று கிறது. முழுக்கவிதையையும்கூட. எந்தவொரு கவிதை யையும் இரண்டாம் முறை மொழிபெயர்க்கும் போது அது முதல் மொழிபெயர்ப்பிலிருந்து இயல்பாகவே மாறியிருக்கிறது.
கீழேயுள்ள அக்மதோவா கவிதையின் எனது இப்போதைய மொழிபெயர்ப்பு.
...............................................................................................................................
எனக்கு நம்பிக்கையில்லை
தொலைபேசிகள் தந்திகள் வானொலிகள் அன்னபிற
அநாவசியங்களில்
எல்லாவற்றிலும் எனதேயான சட்டதிட்டங்கள் உண்டு.
அவை என்னுடையவை – கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் வினோதமாகவும் இருந்தாலும்.
நான் , வெளி, காலம் தொடர்பாய் எனதேயான தொடர்புவழிகள் உண்டு
எனவே
இன்னொருவர் கனவுக்குள் எளிதாகப் பறந்து நுழையவோ
அல்லது
நான் விரும்பும் உயரத்திற்கு மேலெழும்பவோ
ஒரு ஜெட் விமானத்தை ஓட்டிச்செல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை.
......................................................................................................................
மூல கவிதையின் பொருளை மட்டும் கிரகித்துக் கொண்டு அதை தமிழுக்கேயுரிய வழியில் கவிதையாக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படிச் செய் தால் அது கீழ்க்கண்டவாறு அமையக் கூடும்.
//தொலைபேசிகள் தந்திகள், வானொலி போன்ற
வேண்டாதனவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை.
எனதேயான விதிமுறைகள் எனக்குண்டு
எல்லாவற்றிலும்.
கொஞ்சம் காட்டுத்தனமாகவும் விசித்திரமாகவும் இருப்பினும்
அவை என்னுடையவை.
வெளி, காலம் தொடர்பாகவும்
எனதேயான வழிமுறை உண்டு.
இன்னொருவர் கனவுக்குள் எளிதாகப் பறந்து நுழையவோ
நான் விரும்பும் உயரத்திற்கு மேலெழும்பவோ
ஒரு ஜெட் விமானம் எனக்குத் தேவையில்லை.
ஆனால், மொழிபெயர்ப்புக் கவிதையின் கட்டமைப்பு தமிழிலும் அப்படியே இருந்தால் என்ன - அதாவது, தமிழ்மொழியின் இயல்பான கட்டமைப்பைக் குலைக்காத அளவு என்ற பார்வையும் அர்த்தம் செறிந்ததே.
மேலும், தமிழ்க்கவிதையின் மொழிக்கட்டமைப்பிலும் நிறைய மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு இன்று இயல்பாகிவிட்ட நிலையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது.
மூல கவிதையின் சாரம் மாறாதவரை, ஒரு கவிதை இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட வேண்டும், இன்ன வார்த்தைக்கு இன்ன வார்த்தையைத்தான் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தவேண்டும் என்று மொழிபெயர்ப்பை standardize செய்வது ஒருவித சட்டாம்பிள்ளைத்தனமாகவே தோன்றுகிறது.
இங்கிருப்பதே ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட மூல கவிதை யின் ஆங்கில மொழிபெயர்ப்பு என்பதும், அக்மதோவாவாவின் ஒன்றுக்கு மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கின் றன என்பதும் கவனத்திற்குரியது.
இங்குள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் இறுதி வரிகள் இன்னொருவரின் கனவுக்குள் நுழைவதைப் பற்றி மட்டும்தான் பேசுகின்றனவா? அல்லது கனவுக்குள் நுழைவதையும் அல்லது விரும்பினால் வேறொரு உயரத்திற்கு மேலெழும்ப முடிவதையும் என இரண்டு தனித்தனி விஷயங்களைப் பேசுகின்றனவா?
அன்னா அக்மதோவாவின் கவிதை
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

(அக்மதோவாவின் கவிதைகள் சுமார் 100 மற்றும் அவரைப் பற்றிய விரிவான வாழ்க்கைக்குறிப்புகள் ஆகியவை என் மொழிபெயர்ப்பில் சில வருடங்களுக்கு முன் (கைவசம் பிரதி இல்லையாதலால் எந்த வருடம் வெளியானது என்று சொல்ல இயலவில்லை) உயிர்மை பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டது. அதற்குப் பின் கவிஞர் ராணி திலக் என்னிடம் அக்மதோவாவின் கவிதைகளின் வேறொரு தொகுப்பை அனுப்பித்தந்தார். (நேரில் தந்தாரா, அனுப்பித்தந்தாரா?) நான் மொழிபெயர்க்காத, மொழிபெயர்க்கத் தக்க கவிதைகள் அதில் இருப்பதாகத் தெரிவித்தார். அந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை மொழிபெயர்த்துக்கொண்டிருக் கிறேன். அவற்றில் ஒன்று இதோ:*இறுதி மூன்று வரிகள் என் மொழிபெயர்ப்பில் சரியாக வரவில்லையோ என்று தோன்றுகிறது – லதா ராமகிருஷ்ணன்)
________________________
எனக்கு நம்பிக்கையில்லை
தொலைபேசிகள், வானொலிகள் இன்னபிற அபத்தங்களிடம்
எல்லாவற்றிலும், என்னுடையதேயான சட்டதிட்டங்கள் இருக்கின்றன.
அவை என்னுடையவை – கொஞ்சம் விபரீதமாகவும் வினோதமாகவும் இருப்பினும்
நான் வெளி, காலத்தைக் கையாள
எனதேயான வழிகள் உள்ளன.
எனவே எளிதாக மேலேறிச்செல்லவோ
அல்லது விரும்பும் உயரத்தை எட்டவோ
ஒரு ஜெட் விமானத்தில் நான் பறக்கவேண்டியதில்லை
இன்னொருவர் கனவுக்குள்
THE ENGLISH VERSION
(Translated by Sergei Roy)
I do not believe in telephones,
Telegraphs and radios and such rot.
In all things, I have laws of my own.
They are mine _ if a bit wild and odd.
Me, I have my ways with space and time.
So I do not need to fly a jet
Into someone’s dream with ease to climb
Or as high as I damn please to get.
(24, October, 1959)
__________________________________________________
அன்னா அக்மதோவா (இயற்பெயர் Anna Andreyevna Gorenko), ருஷ்யக்கவி. பிறப்பு ஜூன் 1889 – இறப்பு மர்ச் 1966) இறப்பின் பின்னரே உலகப் புகழ் பெற்றார்.
11 வயதுச் சிறுமியாயிருந்தபோதே கவிதை எழுதத் தொடங்கியவர் அன்னா அக்மதோவா. 21 வயதில் ஸெயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கவிஞர் குழுவில் இணைந்துகொண்டார். புகழ்பெற்ற கவிஞரான Osip Mandelshtam இந்தக் குழுவைச் சேர்ந்தவர். Acmeists, என்ற அந்தக்குழுவின் தலைவர், Nikolay Gumilyovஐக் காதலித்து மணந்துகொண்டார். அவர்கள் மகன் லெவ் 1912இல் பிறந்தான். ஆனால், அக்மதோவாவின் மணவாழ்க்கை 1918இல் விவாகரத்தில் முடிந்தது. இந்த மணமுறிவின் விளைவாய் ஏற்பட்ட மனமுறிவு அக்மதோவாவின் பல கவிதைகளில் பிரதிபலிக்கிறது.
விவாகரத்துக்குப் பிறகு அக்மதோவாவின் மாஜி கணவர் குமில்யோவ் (Gumilyov), ருஷ்யப் புரட்சிக்கு எதிராக சதி செய்ததாகப் (அவ்வமயம் அறிவாளிகள், கலைஞர்கள் பலர் இத்தகைய அடக்குமுறைகளுக் கும் தண்டனைகளுக்கும் ஆளாயினர்) பொய்க் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதன் விளைவாய் அரசு அக்மதோவாவையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்தது. அவருடைய கவிதைகள் ‘பாதி பரத்தை – பாதி கன்னியா ஸ்த்ரீ’ எழுத்துகள் என்று பழிக்கப்பட்டன. 1923இலிருந்து அவருடைய கவிதை மௌனமாயிற்று. அவருடைய எந்த தொகுப்புக ளுமே 1940 வரை வெளியாகவில்லை.
குறிப்பாக1930கள் அன்னா அக்மதோவாவுக்கு மிகவும் கடினமான காலகட்டம். அவருடைய மூன்றாவது கணவர், 1918 முதல் 1928 வரை அவருடன் வாழ்ந்தவர் 1935இல் முரண்-அரசியலாளர் என்று கைதுசெய்யப்பட்டார். அவருடன் வரலாற்றாசிரியர் – விமர்சகரான இன்னொருவரும் இன்னொரு அக்மதோவாவின் மகனும் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள் சீக்கிரமே விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதன் பின் அக்மதோவாவின் மகன் லெவ் குமில்யோவ் 1938இல் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தார். அக்மதோவாவின் நண்பரான கவி ஓஸிப் மாண்டெல்ஷ்தாம் 1934இல் அக்மதோவாவின் முன்னிலையில் கைது செய்யப்பட்டு 1938இல் ஒரு வதைமுகாமில் இறந்துபோனார்.
1940இல் அக்மதோவாவின் கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியாயிற்ரு என்றாலும் உடனடியாக அது நூலகங்களிலிருந்தும் விற்பனை மையங்களிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டது. 1941இல் ஜெர்மானியப் படையெடுப்பின்போது லெனின்கிராட் பெண்களுக்கு வானொலியில் எழுச்சியுரை ஆற்ற அக்மதோவா அனுமதிக்கப் பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களுக்காக கவிதைகள் வாசித்தார். அவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகள் இடம்பெறும் சிறிய தொகுப்பு ஒன்று தாஷ்கண்டில் வெளியானது. 1943இல் போர் முடிந்த பிறகு அவருடைய கவிதைகள் உள்ளூர் பத்திரிகைகளிலும் தினசரிகளிலும் வெளியாக ஆரம்பித்தன. அவர் கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் பங்கேற்றார். ஆனால் 1946 ஆகஸ்ட் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு அவருடைய கவிதைகள் இச்சை, இறைமை, பிரபஞ்சப்புதிர் என்றிருப்பதாகவும், அரசியல் அக்கறையற்றிருப்பதாகவும், சோவியத் மக்களுக்கு அந்நியமானவை என்றும் அவரைக் கடுமையாகப் பழித்துரைத்தது. கலை-கலாச்சார அடக்குமுறைகளுக் கென்று ஸ்டாலின் அரசு அமைத்திருந்த செயற்திட்டத்தின் இயக்குனரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு உறுப்பினருமான Andrey Zhdanov அக்மதோவாவை “harlot-nun” என்று குறிப்பிட்டார். சோவியத் எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அக்மதோவா நீக்கப்பட்டார். அச்சுவேலை முடிந்து பிரசுரத்திற்குக் காத்திருந்த அவருடைய தொகுப்பு ஒன்று அழிக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு அவருடைய கவிதைகள் எதுவும் வெளியாகவேயில்லை.
1950இல் ருஷ்யத் தலைவர் ஸ்டாலினையும் சோவியத் கம்யூனிஸத்தையும் போற்றும் கவிதைகள் சில அக்மதோவாவால் எழுதப்பட்டு சில இதழ்களில் வெளியாயின. “ஸ்டாலின் எங்கேயோ அங்கே தான் விடுதலையும் உலகின் ஒளிர்வும் இருக்கிறது” என்பதாய் அவர் எழுதிய வரிகள் எப்படியாவது தன்னுடைய மகனை சிறையிலிருந்து விடுவிக்க அவர் மேற்கொண்ட பிரயத்தனங்களாகவே பார்க்கப்படுகின்றன. அக்மதோவாவின் வழக்கமான உணர்வெழுச்சி மிக்க கவித்துவம் மிக்க கவிதைகளிலிருந்து அவை மிகவும் வேறுபட்டிருந்தன.
1935 முதல் 1940 வரையான காலகட்டத்தில், அக்மதோவா எழுதிய (“Requiem”) என்ற நீள்கவிதை Requiem ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் எதிர்க் கருத்தாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரக் ‘களையெடுப்பு நடவடிக்கைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லவொண்ணா பாதிப்புகளைப் பற்றிப் பேசுகிறது. தங்களுடைய கணவன், பிள்ளை, உற்றார் உறவினர் சிறைகளில் அடைக்கபட்டிருக்க(இந்த ‘களையெடுப்பு நடவடிக்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப் பட்டனர்) அவர்களைக் காண நாட்கணக்காக, மாதக் கணக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்போரைப் பற்றிய கவிதை இது. அப்படி தன் மகனைக் காண அக்மதோவாவும் வேறு பல பெண்களோடு வரிசை யில் நின்றவராதலால் அந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நேரடி சாட்சியமாக எழுதப்பட்ட கவிதை இது. ஒருவழியாக 1963இல் புத்தக வடிவில் ருஷ்ய மொழியில் இந்த நூல் வெளியானாலும் சோவியத் ஒன்றியத்தில் 1989 வரை இந்த நீள்கவிதை அதன் முழுமையான வடிவில் பிரசுரிக்கப்படவில்லை..
1940 முதல் 1962 வரை அவர் எழுதிவந்த“Poem Without a Hero” என்ற பொருள்படும் தலைப்பிலான அவரு டைய நீள்கவிதை மிகச் சிறந்த கவிதையாகப் பேசப்படுகிறது. முதலாம் உலகப்போருக்குப் முந்தைய பீட்டர்ஸ்பர் கலைஞர்கள் வாழ்க்கையை யும் 1917க்குப் பிறகான அவர்கள் வாழ்க்கையும் மிக நுட்பமாக ஊடாடுகின்றன.
அக்மதோவா விக்டர் ஹ்யூகோ, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ளார். மாண்டெல்ஸ்தாம் உள்ளிட்ட சிலரைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் எழுதியுள்ளார்.


உண்மை, இனி நான் தப்பிக்கவியலாது _
சொல்லப்படும் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரியதாகும்,
வலமும் இடமும் அதலபாதாளங்கள் அதிபயங்கரமாய் வாயைப் பிளந்துகொண்டிருக்கும்,
என் புகழ், உதிர்ந்த இலைகளாய் காலடியில் கிடக்கும்,
இந்த விசித்திரக் கவிதையிலிருந்து.

THERE IS APPARENTLY NO MORE ESCAPE FOR ME
FROM THIS STRANGE POETRY, WHERE EVERY POINT IS MOOT,
WHERE RIGHT AND LEFT ABYSSES YAWN DISASTROUSLY,
AND WHERE MY FAME, LIKE FALLEN LEAVES, LIES UNDERFOOT.
Autumn 1944
Translated by Segei roy.



அன்னா அக்மதோவாவின் கவிதை
(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)
புத்துயிர்ப்பிக்கவியலாத வார்த்தைகள் சில உள்ளன.
அவற்றைக் கூறுபவர் விரயமாக்குகிறார் பெருங்குவியலை.
இரண்டேயிரண்டு விஷயங்களே எல்லையற்றவை –
விண்ணுலகின் நீலமும் தேவனின் கருணையும்.
There are some words that one cannot renew,
And he who says them wastes away a hoard.
Two things alone are infinite – the blue
Of Heaven and the mercy of the Lord.
Winter of 1916
Translated by Sergei roy



அன்னா அக்மதோவாவின் கவிதை
தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

நூல் வெளியீடு
................................
அந்த நாள் எப்பொழுதுமே ஒர் அரிய நிகழ்வு
அலுப்பும், விரக்தியும் எரிச்சலும்
ஆட்கொண்டிருக்கும் கவி
பண்புமிக்க விருந்தளிப்பவராய், தனது பொக்கிஷங்களைப் பார்வைக்கு விரிக்கிறார்
வாசகரும் வெகுவாகவே ஈர்க்கப்படுகிறார்.
ஒன்று வாசகர்களை
ஒளிரும் பளபளப்பில் அமிழ்த்துகிறது
இன்னொன்று அவர்களை ஒரு குடிலுக்கு
இட்டுச்செல்கிறது
மூன்றாவது பள்ளியறைக்கதவுகளை
பெரிதாகத் திறந்துவிடுகிறது
என்னுடைய வாசகருக்கு
ஒரு வதைச்சட்டகம் போதுமானதா
யிருக்கிறது.
அவர்கள் யார்?
எங்கிருந்து, ஏன், எதைநோக்கி…
வெறுமையை நோக்கி வழிநடத்தும்
இந்தப் பாதையில்
தங்களால் போகமுடியும் என்று அவர்கள்
எண்ணுகிறார்களா?
அவர்களை எந்த உள்ளொளி ஈர்க்கிறது
தன்பால்?
எந்த கன்னங்கரிய நட்சத்திரம்?
ஆனால் நிச்சயம் அவர்கள் கண்டிருப்பார்கள்
எத்தகைய அவலமான அன்பளிப்புகளை
அவர்கள் எதிர்பார்க்கலாமென்று:
இந்த மூட்டமான தோட்டம் ஈடன் அல்ல,
அபாயங்கள் நிரம்பியிருப்பது.
நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து
உங்களால் தப்பிக்கமுடியாது
மீண்டும் அவர்கள் விரைவாக, அடர்வாகக்
குழுமுவார்கள்.
அலட்சிய, அநாவசிய அனுதாபத்தால்
உங்கள் இதயத்தைச் சுக்குநூறாகக்
கிழித்தெறிவார்கள்

A POEM BY AKHMATOVA
PUBLICATION OF A BOOK
That day is always an occasion.
The poet, bored, embittered, vexed,
A courteous host, displays his treasures,
The reader’s suitably impressed.
One plunges readers into splendor,
Another takes them to a shack,
A third throws wide the doors of bedrooms,
My reader settles for a rack.
Who are they, wherefrom, why and whither
D’they think they’ll get along this path
That leads to nothingness? What vision
Is drawing them, what pitch-black star?
But surely they must be seeing
What dire rewards they can expect:
This somber garden is no Eden,
And one by dangers is beset.
You can’t escape the path you’ve chosen
Again they’ll troop in, fast and thick,
and tear your heart to shreds by casual
and uninvited sympathy.
13 August, 1962(daytime)
Komarovo
Translated by Raissa Bobrova

(* ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டபோது மூலத்திலிருந்ததில் எத்தனை நழுவிப்போயிருக் குமோ. அக்மதோவா வின் ஒரே கவிதை இரண்டு மொழிபெயர்ப் பாளர் களால் நேரெதிர் அர்த்தங் களில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதைப் படித்திருக்கி றேன். மூலத்தில் இடம்பெறும் சில சொற்கள், சொற்றொடர் கள், வழக்குச் சொற்கள் மொழிபெயர்ப் பாளரை கதி கலங்கச் செய்துவிடுவதுண்டு. அக்மதோவாவின் இந்தக் கவிதை யின் இந்த ஆங்கில மொழி பெயர்ப்பில் இடம்பெற்றிருக்கும் rack என்ற சொல் அப்படிப்பட்டதாய் என்னை அலைக்கழித்தது. அக்மதோவாவின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து சரியாகத்தான் மொழிபெயர்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். என்றாலும், உறுதியாகச் சொல்லமுடியவில்லை)

















அன்னா அக்மதோவாவின் கவிதை
(ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்)

அன்னா அக்மதோவாவின் கவிதை
வேறொருவர் கூறியதையே கூறாதீர்கள்
உங்களுடையதேயான வார்த்தைகளையும் கற்பனையையும் பயன்படுத்துங்கள்.
ஆனால், ஒருவேளை, கவிதையே
ஒரேயொரு மகத்தான மேற்கோள்தானோ என்னவோ
Do not repeat what someone else has said,
Use your own words and your imagination.
But it may be that Poetry itself
Is simply one magnificent quotation.
4 September 1956
(Translated by Olga Shartse



முகவுரை

அன்னா அக்மதோவா
(தமிழில்: லதா ராமகிருஷ்ணன்)
காதல் வயப்பட்டிருக்கும் யாருடைய யாழின் துணைகொண்டும்
மனிதர்களை வசப்படுத்த விரும்பவில்லை நான் _
ஒரு தொழுநோயாளியின் தட்டலொலி
இசைக்கிறது என் கைகளில்
சபிக்கவும் அலறவும்
நிறையவே நேரமிருக்கிறது உங்களுக்கு
என்னிடமிருந்து ஒதுங்கிப்போகக் ’துணிச்சல்காரர்’களுக்குக்
கற்றுத்தருவேன்.
பதிலுக்கு எதையும் நான் வேண்டவில்லை
புகழை எதிர்பார்க்கவில்லை
முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்
மரணமதன் இறக்கையின் கீழ்.



பலருக்கு
அன்னா அக்மதோவா
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்)

நான் உங்கள் குரல், என் வழியாக உங்கள் மனநிலை வெளிப்படுகிறது
நான் உங்கள் முகத்தின் பிரதிபலிப்பு.
வீணாகப் படபடக்கும் உங்கள் இறக்கைகளின் சிறகடிப்பு,
ஏனெனில் எப்படியும் நான் உங்களுடன் தான் இருப்பேன்.
அதனால்தான் நீங்கள் என்னை அளவுகடந்து நேசிக்கிறீர்கள்
என்னுடைய பலவீனங்களிலும் பாவங்களிலுமாய்
அதனால்தான் நீங்கள் மகிழ்ச்சியோடு ஈந்தீர்களெனக்கு
உங்கள் மகன்களில் மிகச்சிறந்தவனை; மகத்தானவனை.
அதனால்தான் இந்த முடிவற்ற நாட்களிலெல்லாம்
அவன் எங்கே என்று ஒருபோதும் என்னைக் கேட்டதேயில்லை நீங்கள் ; மாறாக
வெற்றுப் பாராட்டுகளின் காரப்புகைகளால்
நிரப்பினீர்கள்
இதயமும் ஆன்மாவும் எங்கோ ஓடி விட்ட என் வீட்டை
இப்போது இறைஞ்சுகிறீர்கள்: யாரும் என்னிடம் அத்தனை நெருக்கமாக இருக்கவியலாது,
வேறெந்த நேயமும் அத்தனை அவ:லமாகாது
ஒரு நிழல் அதன் தூலத்திலிருந்து விலகியோடுவதுபோல்,
ஓர் ஆன்மா தசை நீங்கவேண்டுமென்று விரும்புவதுபோல்
அவ்வண்ணமே, இந்த நாட்கள்,
நினைவிலிருந்து நீங்கிவிட விரும்புகிறேன் நான்.
TO MANY
(By Akhmatova)
I am your voice, through me your temper rings,
And I am the reflection of your face.
In vain, the futile fluttering of your wings,
For I will stay with you in any case.
That is the reason you love me greedily
Me in my feebleness and in my sins,
And that was why you gladly gave to me
The fairest and the finest of your sons.
And that was why in all these endless days
You never asked me where he was; instead
You filled with acrid fumes of empty praise
My house from which its heart and soul had fled.
You plead now: none could be as close to me,
No other love could be as misbegotten….
The way a shadow would from substance flee,
The way the soul aspires the flesh to leave _
That’s how, these days, I want to be forgotten.
(September 1922.)
Translated by Sergei Roy.

No comments:

Post a Comment