Tuesday, February 7, 2023

தாற்காலிக நிரந்தரங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாற்காலிக நிரந்தரங்கள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


என் தாற்காலிகவாச அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டியாக
தாற்காலிகமாகத் தெரியக்கிடைத்த,
தாற்காலிகவேலையில் ஏழாண்டுகாலம் குளிரிலும் மழையிலும் கொரோனாகால முழு ஊரடங்கின் போதும்
லிஃப்ட் இல்லா நான்குமாடிகளுக்கு நாளும் பலமுறை ஏறியிறங்கியேறியிறங்கி வேலைபார்த்துவந்த
தாற்காலிக வேலையைத் திடீரென இழந்து
வாழ்வாதாரம் பறிபோயிருக்கும் -
பெண்ணைக் கொடுத்த வீட்டில் இன்னும் எத்தனைநாள் அண்டிப்பிழைக்கமுடியும் என்று புரியாமல் குழம்பி தொண்டையடைத்துநிற்கும் அந்த
சகமனிதருக்கு
தாற்காலிகமாகக் கிடைக்கக்கூடிய வேலையொன்றுக்காக
தகவல் தெரிவிக்கலாமென்று அழைத்தால்
தாற்காலிகமாய் துண்டிக்கப்பட்டிருக்கிறது இணைப்பு
என்று தெரிவிக்கும் அவருடைய அலைபேசியை ஊடுருவித் தகவலனுப்பும் செப்பிடுவித்தை
யெனக்குத் தாற்காலிகமாகத் தெரியக்கிடைத்தால்
எத்தனை நன்றாயிருக்கும்!

(பி.கு: இந்தக் கவிதையை மிகுந்த மனஉளைச்சலோடு எழுதிமுடித்த பிறகுதான் ‘அட, அந்த சகமனிதரின் அலைபேசி எண்ணுக்கு நாமே ‘டாப் அப்’ செய்யமுடியுமே என்ற எண்ணம் பளிச்சிட்டது. இப்போதே அதைச் செய்து விடுவேன்!)

No comments:

Post a Comment