Sunday, January 1, 2023

மனசாட்சி ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனசாட்சி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவரெல்லாம் வானளாவப் புகழ்ந்துகொண்டிருந்தபோது
இவருக்குத் தன்னைவிட அந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் அதிகத் தகுதியானவர் நினைவுக்கு வந்தார்.

அவர் அத்துவானக்காட்டில் பாடிக்கொண்டிருப்பவர்.

ஆனால் அவருக்கு சுருதி சுத்தம்
அநாயாசமாக வரும் கல்பனா சங்கீதம்.

அண்ணாந்திருக்கும் அவர் கண்களுக்குள்
ஆகாயக்கடல் அலையடிக்கும்……

அரங்கிலிருந்த இவருக்கு அந்த ஊரிலேயே
பெரிய பிரமுகர்
மாலையணிவித்து மரியாதை செய்வித்துப்
பொன்னாடை போர்த்தி மார்போடணைத்துப் புளகாங்கிதமடைந்து
வாராது போல வந்த மாமணியைத்
தோற்போமோ என்று
மனப்பாடம் செய்துவந்த வரிகளை மறக்காமல்
சரியாகச் சொன்னபோது
தொலைந்துவிட்ட மாமணிகள் இவர் நினைவில்
தவிர்க்கமுடியாமல் வந்துதொலைத்தனர்.

வலையிலகப்பட்ட மீன்களில் இதுவே
மிக அதிக நீளம் என்று
மனிதரை மீனாக்கி மகாப் பேச்சாளரொருவர்
இவர் சிரசில் மகுடம் சூடியபோது
இவருக்கு சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும்
அதி நீள மீன்கள் நினைவில் அலைமோதின.

’ஓய்வற்ற அலைகளைக் கொண்ட எழுத்துக்கடல்
இவர்’ என்றொருவர் முழங்க
அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தபோது
நடுக்கடலின் நிச்சலனமாயிருப்பவரை இவரால்
நினைக்காதிருக்க முடியவில்லை.

நல்லதே நடக்கும்போதும் இது என்ன
இப்படி அல்லாடவைக்கிறது
என்று சின்னதாய் பின் மண்டையில் அடித்துக்கொண்டார்.

அருகே அமர்ந்திருந்தவர் திரும்பிப்பார்த்தபோது
ஒன்றுமில்லை சின்னப் பூச்சி கடித்துவிட்டது என்றார்

No comments:

Post a Comment