Tuesday, November 8, 2022

கடை எடை கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கடை எடை கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு புகைப்படத்தில் புத்தகங்களைப்
பறவைகளாகப்
பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு புகைப்படத்தில் புத்தகங்களைப்
புதையலாகத்
தோண்டியெடுத்து அள்ளிவருகிறார்.

ஒரு காணொளியில் நூல்களுக்கு நடுவில்
கால்மேல் காலிட்டு அமர்ந்தபடி அவற்றிலொன்றை வருடித்தந்தவண்ணமிருக்கிறார்.

வேறொன்றில் ஒரு புத்தகத்தில்
காதலனுக்குரியதும் குழந்தைக்குரியதுமான
குத்துமதிப்பான மொத்த முத்தத்தை
பதித்துக்கொண்டிருக்கிறார்.

சற்றே மங்கலாய்த் தெரியும் காணொளியில்
அருள்பாலிக்கும் புன்னகை யொன்றால்
தன் வதனத்தைப் பொலியச்செய்தவாறு
குற்றேவல் புரியக் காத்திருப்பதா யொரு புத்தகத்தை
அத்தனை பிரியத்துடன் அணைத்துக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு காணொளியில் நூல்களைப்
பால்புட்டியிலிட்டு
உறிஞ்சியவாறிருக்கிறார்.

எல்லாப் புகைப்படங்களிலும் எல்லாக்
காணொளிகளிலும்
எல்லோரும் புடைசூழத் தன்னைத்தான் கடைவிரித்தபடியிருக்கு மவரை

கலவரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது
கவிதை.

No comments:

Post a Comment