Tuesday, November 8, 2022

பிறவிப்பயன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிறவிப்பயன்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நான்கே வரிகளில்
அல்லது நாலிலொரு வரியில்
நான்கே வார்த்தைகளில்
அல்லது நாலிலொரு வார்த்தையில்
ஆங்கே யொரு காடு வெந்து தணிய
ஆங்காங்கே பெருமரநிழல்கள் காய் கனிகள்
புள்ளினங்கள் பூச்சி பொட்டுகள்
துளிர்க்க
புதுமழை பொழிய
பூமியெங்கும் நிரம்பிவழியும் பூக்களெங்கும்
பட்டுப்பூச்சிகளுக்கு மட்டுமின்றி கட்டுக்கடங்கா பிச்சிமனங்களுக்குமாய்
கொட்டிக்கிடக்கும் மகரந்தத்தூவல்கள்
எட்டுத்திக்குகளும் பரவும் நறுமணம்
உயிர்விரவி யுள் பரவும்
அவரவருக்காகுமவை
மனதின் அந்தர வெளியில் ரீங்கரிக்கக்
கேட்கும்
தருணங்களில் அரும்பி மலரும்
பிறவிப்பேரின்பம்
விரி வழியெங்கும் அடர்ந்திருக்கும்
அவரவருக்கான ஆரண்யங்களும்
அஞ்ஞாதவாசங்களும்.

No comments:

Post a Comment