Wednesday, October 6, 2021

மழையின் திருக்கரமும் காளியின் தூளியும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மழையின் திருக்கரமும்

காளியின் தூளியும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
மழையின் சிறகுகளை அறுத்தெறியப் பார்ப்பவனின்
அறியாமையை நினைந்து
மந்தகாசப் புன்னகையொன்றைத் தருமதன்
ஆயிரம் தலைகளில்
ஆறேழைக்கூட கொய்தெறிய முடியாமல்
கொந்தளிக்கின்றவனின் சிரசையும் அதேயளவு
இதமாய் வருடியபடி
நிதம் நிதம் ஆயிரமாயிரங்கால்கள் மிதித்தேகும்
நீதிமன்றப் படிக்கட்டுகளை
அழுக்குபோகக் கழுவிவிட்டபடி
வழுக்கிக்கொண்டுருண்டோடிப் படியிறங்கும் மழை
நுழைந்துகொள்ளும் அந்தப் பெண் மனதில்
அதற்கென்று ஒரு வழுவழு நூல்புடவையாலான
தூளியும்
அதைத் தன் திருக்கரத்தாலாட்டிவிடவொரு
கோபதாபக்காளியும்
ஆயத்தநிலையி லென்றும்.
காயங்களுக்குக் கவிதையால் மருந்துதடவி முடித்து
மழையோடு மழையாகிவிடவும்.
(லீனா மணிமேகலைக்கு)

No comments:

Post a Comment