Wednesday, October 6, 2021

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம் - லதா ராமகிருஷ்ணன்

22.9.2021 _  இன்று கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்தநாள் 1935இல் பிறந்தவர். இன்றளவும் கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து இலக்கியதளத்தில் இயங்கிக்கொண்டிருக் கிறார். அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையொன்று 2015இல் திண்ணை இணைய இதழில் வெளியானது. அதை இங்கே பகிர்கிறேன்.

....................................................................................................................................
கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்
எழுதியது latharamakrishnan தேதி September 06, 2015
லதா ராமகிருஷ்ணன்




கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! (அதாவது, 2021 இல் 86) அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டு நாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் அருங் கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங் களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத் தக்கவை.http://www.vydheesw.blogspot.in/) கவிஞர் வைதீஸ் வரனு டைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளி யாகியுள்ளன. 2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரைஅடர்செறிவானது!)

(*இக்கட்டுரை ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பில்2005இல் சந்தியா பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்ட சில நவீனத் தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகள் அடங்கிய எனது நூலில் இடம்பெற்றுள்ளது)
நீ
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
வெயில் அடிக்கிறது
வேண்டாம் என்று
மழையைத் தடுக்க முடிவதில்லை.
போதும் நிறுத்து என்று
புயலுக்கு உத்தரவிட இயல்வதில்லை.
நீர்வீழ்ச்சி விழுந்து கொட்டிய பின் தான்
ஆறாகி அடங்குகிறது.
இந்தக் கவிதைகளும் அப்படித்தான்
போலும்
ஒருவித மானஸீகப்
பிடிவாதத்தின்
மர்ம வெளிப்பாடு.
வைதீஸ்வரன்.

_மேற்காணும் சிறு கவிதை, ‘கவிதை’ பற்றிய கவிஞரின் பார்வையை கனசுருக்கமாக, அதே சமயம், கனகச்சிதமாகப் புலப்படுத்திவிடுகிறது! இந்தச் சிறுகவிதையிலே இடம்பெறும் மழை, வெயில், புயல், ஆறு, நீர்வீழ்ச்சி முதலிய இயற்கையின் பல்வேறு அம்சங்களும் வைதீஸ்வரனுடைய கவிதை வெளியின் முக்கிய உந்துவிசைகளாகத் திகழ்கின்றன. ‘நீர்வீழ்ச்சி விழுந்து கொட்டிய பின் தான் ஆறாகி அடங்குகிறது’ என்ற இரட்டை வரிகளே ஒரு தனிக் கவிதையாகத் திகழ்வதோடு கவிதை என்பது SPONTANEOUS OVERFLOW OF POWERFUL EMOTIONS’ என்ற ‘கவிதைக் கோட்பாட்டை நினைவுகூரச் செய்வதாகவும் இருக்கிறது. ‘மானஸீகப் பிடிவாதத்தின் மர்ம வெளிப்பாடு’ என்ற சொற்றொடரும் வைதீஸ்வரன் கவிதைகளில் துல்லியமாக இயங்கும் உள் உலகத்தைக் குறிப்பாலுணர்த்துகிறது.
‘எழுத்து’ இலக்கிய இதழின் மூலம் அறிமுகமாகிய கவிஞர் வைதீஸ்வரன் நவீன தமிழ்க்கவ்தையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்த குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்படுபவர். ஓவியம், இசை, நாடகம் ஆகிய துறைகளில் அவருக்கிருக்கும் ஆர்வம் அவருடைய கவிதைகளின் லயத்திற்கும், நுட்பமான காட்சிப்படுத்தலுக்கும் முக்கி யக் காரணமாகிறது என்று கூறலாம். ‘உதய நிழல்’, ‘நகரச்சுவர்கள்’, ‘விரல் மீட்டிய மழை’ முதலானவை அவருடைய கவிதைத்தொகுப்புகள், வைதீஸ்வரன் கவிதைகள் என்ற அவருடைய முழுத்தொகுதியில் (கவிதா பதிப்பக வெளியீடு) ஏறத்தாழ 250 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தாண்டியும் அவர் பல கவிதைகளை இன்றளவும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் விரலோட்டம்
நெளியும்
மணல் வெளி முதுகெங்கும்.
ஒரு முனையில்
நீண்ட சிற்றலைகள்
கரைகளின் செவியோரம்
நிரந்தர ரகசியங்கள்
சொல்லிச் சொல்லி
உலர்ந்து போகும்.
படபடக்கும் கூந்தலுடன்
அவளுக்கும், அருகே,
அவனுக்கும் இடையே
செறிந்த மௌனத்துள்
அநிச்சயங்கள் ஆயிரம்
பொருமும், பலஹீனத்
தழுவல்கள் மனத்துக்குள் மட்டும்.
அதோ!
நீண்டு வருகிறது
மீண்டும் சிற்றலை ஒன்று,
அவள் உடல் முனையை சீண்டி விட, ஆதிகால நாகத்தின்
நாக்குத் தீ போல.

’சலனம்’ என்ற கவிதையின் வரிகள் மேலே தரப்பட்டிருக்கின்றன. NATURE IS A TEACHER என்ற அணுகுமுறையை விட இயற்கையை ஒரு பரவசக் கொண்டாட் டக் களமாகவே பாவித்துக் குதூகலிக்கின் றன வைதீஸ்வரனின் கவிதைகள்! இயற்கையின் ‘கலைடாஸ்கோப் கோலங்களை’ இவருடைய பல கவிதைகள் பூரிப்புடன் படம்பிடித்துக்காட்டுகின்றன. இதனாலேயே, ஒரு கவிதை அதன் மொத்த அளவில் வாழ்க்கையின் துயரம் அல்லது தத்துவம் என்பதாகப் பேசும்போதுகூட அதில் பல வரிகள் ‘இயற்கையை’ அழகுறக் காட்சிப்படுத்தும் கோலாகலமான தனிக் கவிதைகளாக மிளிர்கின்றன. உதாரணமாக, ‘வீட்டு வாழ்வுக்குள் சில சூரியத் துளிகள்’ என்ற நீள்கவிதை யைக் குறிப்பிடலாம். ‘அந்தி ஒளியில் ஜவலிக்கும் ஓராயிரம் இலைகளில், கிடைத்த இடைவெளிகளில் சிரித்த சூரியத்துளிகள் தூல வாழ்வின் இயந்திரத்தனத் திலிருந்து சில மனிதர்களை மீட்டெடுத்து வேறோர் அற்புத உலகத்தில் சிறுபொழுது வேர்விடச் செய்கின்றன. தூல இருப்பு இன்மையாக, வேறோர் இருப்பு உண்மையாகும் சில மந்திர கணங்களைப் பதிவுசெய்யும் இக்கவிதையில் இயற்கையின் அழகில் ஒரு மனிதன் இரண்டறக் கலக்கும் ‘ரசவாதம்’ ஆனந்தமாகப் பேசப்படுகிறது. ’அந்த உன்னத மனோநிலை நீடிப்பதில்லை’ என்ற சோகம் குறிப்பாலுணர்த்தப்படுவதாய் கவிதை முடிந்தாலும், அதைவிட அதிக அளவில் அந்தக் குறும்பொழுதின் பரவசம் வரவாக்கும் ஆனந்தமே கவிதை முழுவதும் விரவி நிற்கிறது.
‘தூரத்தில் ஒரு வெண் மேகம்
நடந்து வருகிறது. ஒளியால் செய்த
விண்ணகத்துப் பறவை
இறகில்லாமல் பறக்கிறதா,
தரையில்? இருக்கலாம்.
அவர் நடையில்
மனித முயற்சிகள் இல்லை.
சக்தியின் வியாபகம்
அந்த அசைவு’.
இந்த வரிகளில் வரும், ‘தரையில் பறக்கும் விண்ணகத்துப் பறவை’ எழுதுவோன் பிரதியில் ‘அபூர்வ மனிதன்’ யாரையேனும் கூடக் குறிக்கலாம். வாசிப் போன் பிரதியில் அதுவே, அந்த மந்திர கணங்களில் மேகம் உயிருடைய, மதிப்பிற்குரிய ஜீவியாகவும் புரிபடுவதாகலாம்.
(ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரையைக் கேட்கும் அனுப வத்தைப் பற்றிய கவிதையோ இது என்று நினைக்கத் தோன்றுகிறது). கவிதை முழுக்க இயற்கையின் பல காட்சிகள் குறியீடுகளாகக் கட்டமைந்திருக்கின்றன.
(உ-ம்)
‘இலைகள்
பச்சைக் காதுகளாகி
எங்கள் உள்ளம் போல் குவிந்து
கூர்மையாகின்றன.’
‘மனக்குருவி’, ‘தீர்ப்பு’, ‘மரம்’ முதலிய பல கவிதைகளில் இயற்கையின் அம்சங்கள் குறியீடுகளாய் கவிதையை வடிவமைத்திருப்பதைக் காண முடிகிறது.
இயற்கை போலவே ‘ஆண்-பெண்’ உறவுநிலைகளும் வைதீஸ்வரன் கவிதைகளின் முக்கியக் கண்ணிகளுள் ஒன்றாகப் பிடிபடுகிறது. பாலுறவை அதனளவிலான ஆனந்தத்திற்காய் பரவும் கவிதைகளும், அதன் வழி பெறப்படும் ஆத்மானுபவத்திற்காய் பரவும் கவிதை களும் வைதீஸ்வரன் படைப்புவெளியில் கணிசமாகவே இடம்பெற்றுள்ளன. ‘உறவில்’ என்ற கவிதையை உதாரணமாகக் காட்டலாம்.
‘தேனாய் உருகித் தழுதழுத்துக்
கடுமூச்சில் கன்னம் சுட்டு தெய்வம்….தெய்வம் என்று
நெஞ்சுக்குள் நெருங்கிக் கொண்டாய்….
நான் நம்பவில்லை….
வம்பாக _
ஊமையிருட்டில்
உனைத் தேடும் உள்ளங்கைக்குள்
தாழம்பூ முள் தரித்து
ரத்தம் இயங்கியதும்
நான் சிரிக்கக் கண்டேன்.
உடல் திறந்து
உனை நாடும் மர்மத்தில்
பட்டதெல்லாம் இன்பமாச்சு
ரத்தம் – தேன்
உடல் கைப்பொம்மை
நீ – நான்
கைகோர்த்த புயல்கள்.
’கூடல்’ என்ற தலைப்பிட்ட கவிதை:
‘வியர்வை, ஒழுக்கம்
வறுமை வெட்கம்
தேவையற்ற துகிலை
வேண்டித் திறந்து
ஒரு கணம் பிறப்பின்
சோகச் சுகமறியும் வெறியில்
உடல்கள் படுமோர்
இன்ப முயற்சி’.
என்று ‘உடலுறவை’ ‘பிறப்பின் சோகச் சுகமறியும் யத்தனமாய்’ விவரிக்கிறது.
‘நான் சந்தனம்
பூசிக்கொள்
மணம் பெறுவாய்
நான் மலர்
சூடிக்கொள்
தேன் பெறுவாய்
நான் நதி
எனக்குள் குதி
மீனாவாய்
நான் காற்று
உறிஞ்சிக்கொள்
உயிர் பெறுவாய்
நான் உயிர்
கூடிக்கொள்
உடம்பாவாய்.’
என்று விரியும் ‘கூடல் 2’ மிகக் குறைந்த, எனில் மிகச் சிறந்த வார்த்தைகளில் ‘கலவி’யின் சாரத்தை எடுத்து ரைக்கிறது. ‘தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நான் உனக்கு’ என்று காதலில் தோய்ந்த ஆண்-பெண் இரண்ட றக் கலத்தலை, அதன் உணர்வுநிலையில் பாடிப் பரவும் பாரதியாரின் கவிதை தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது.
’நம் குரல் கொடிகள்
மொழிகளை உதிர்த்துவிட்டு
ஒலிகளைக் காற்றால் பின்னிப்பின்னி
உணர்ச்சிகளை
உச்சிப் பூவாய் சிவப்பாக்குகிறது.
நமக்குள்
காலமும்
உலகமும்
உடலும்
காணாமல் போய்விடுகிறது’
என்று முடியும் ‘உச்சிப்பூவு’ம் அடர்செறிவான பாலியல் கவிதை.
இந்த ‘நிறைவான’ பாலுறவின் மறுபக்கமாய், மூளை பிறழ்ந்த ஏழைப்பெண், வன்புணர்ச்சி காரணமாய் வயிற்றில் உருவாகியிருக்கும் கர்ப்பத்தோடு செல்லும் காட்சியும் கவி மனதில் தவறாமல் இடம்பெறுகிறது.
குப்பையை தலையிலும்
குழந்தையை வயிற்றிலும்
சுமந்து நடந்த அவள்
சம்பந்தமில்லாமல்
சிரித்துக்கொண்டு போகிறாள்.’
(மின்னல் துளிகள்),
வயதின் வாசல் என்ற நீள்கவிதையையும் பாலியல் கவிதைக்குச் சிறந்த உதாரணமாக முன்வைக்கலாம்.
‘அசிங்கமாய் சின்ன வயதில்
வெறுப்புடன் தெரிந்த
பல பாறை இடைவெளிகள்
இன்றெனக்கு
ரகசிய அடையாளங்களை
அங்கங்கே காட்டுகின்றன’
என்ற வரிகள், மற்றும் _
‘பனிக்குடம் வெடித்ததென
எரிமலைக் குழம்புகள்
பாய்கிறது சமவெளியெங்கும்
வெடிக்கும் பூக்களும்
இசைக்கும் புயலும்
தந்தை – தாய் பரஸ்பரத் தழுவலும்
அன்பின் ஓசையும், புழுக்கமும்
அத்தனையும் கலந்த கனவுக் குழப்பம்
துயில், மந்திரக் கம்பளமாகி
தூக்கிச் செல்லும் என்னை
மலையுச்சி நட்சத்திரத்திற்கு.’
முதலிய வரிகளும், இறுதி வரிகளான _
‘எனக்குள் நிச்சயமாக ஒரு தந்தை எழுந்துவரக் கண்டேன்.
நீருக்குள் தோன்றும்
நெருப்புப்பந்தம்போல.’
என்ற வரிகளும் இக்கவிதையை செறிவடர்த்தி மிக்க பாலியல் கவிதையாக இனங்காட்டு கின்றன.
சமூகப் பிரக்ஞையுள்ள மனிதராய் கவிஞர் வைதீஸ் வரனை இனங்காட்ட அவருடைய எல்லாத் தொகுப்பு களிலும் கணிசமான என்ணிக்கையில் கவிதைகள் உண்டு. இந்த வகைக் கவிதைகளில் நீள் கவிதைகள், குறுங்கவிதைகள், இறுக்கமாகக் கட்டப்பட்ட கவிதைகள், தளரக் கட்டப்பட்ட கவிதைகள், நேரிடையான கவிதை கள், பூடகமான கவிதைகள் முதலான பல பிரிவுகளைக் காணலாம். ‘மைலாய் வீதி’, ‘நிலைகள்’, ‘ஊமையின் சாபம்’, ‘ஈ’, ‘பெஞ்சி’, ‘பசி’ முதலிய பல கவிதைகளை உதாரணங்கூறலாம்.
வாழ்க்கையின் நிலையாமை குறித்த கவிதைகளும் கணிசமாகக் காணக்கிடைக்கின்றன. நாளொன்றின் ஒவ்வொரு கணப்பொழுதும் கவி மனம் தன்னைச் சுற்றி நிகழும் இயக்கங்களைத் துல்லியமாக அவதானித்தும், அனுபவித்தும், இரட்டிப்பு உயிர்ப்புடனும், அதன் விளைவாய் இரட்டிப்பு வலியுடனும் இருந்துவரும் நிலையை வைதீஸ்வரன் கவிதைகள் பதிவு செய்யும் நுண் விஷயங்களிலிருந்து அறிய முடிகிறது. நாய், பூனை, வௌவால், கிளி, ஆடு, என பல உயிரினங்களின் வாழ்க்கைகளை இவர் கவிதைகள் அவற்றின் அளவிலும், அவை வாழ்வுக்குக் குறியீடுகளாலும் அளவிலும் எடுத்தாளுகின்றன. ‘சாவை நோக்கி’ என்ற கவிதையில் காகம் ஒன்றின் சாவு மனித வாழ்க்கையை நிறைய வரியிடை வரிகளோடு அவதானிப்பதை உதாரணங்காட்டலாம்.
கொல்லைப்புறத்தில்
விழுந்த காகம்
கோமாளித் தொப்பியாய்
குதிக்கிறது.
மனத்திற்குள் பறப்பதாக
இரண்டடிக்கும் குறைவாக.
வயதான பறவைக்கு
வானம் ஒரு சறுக்குப்பாறை.
உயரப் பறக்கும் குடும்பங்கள்
உதவியற்ற தூரத்துப் பறப்புகள்.
நிலமும் மனிதனும்
அபாயமாய் நெருங்கி
நிழல் நகங்கள் நீண்டு கவ்வ
கிழிந்த காகத்துக்குள்
பயம் மட்டும்
படபடக்கிறது
இறக்கைகளின் பொய்யாக.
மண்ணில் உதிர்ந்த
இறகுகள் இரண்டு
காற்றின் விரல்கள் போல்
கருப்பாய் பதறுகின்றன,
காகத்தின் அர்த்தத்தை மெதுவாக அழித்தவாறு.’
மேற்கண்ட கவிதையில் காகத்தின் சாவு வழி வாழ்க்கை யின் நிலையாமை அவதானிக்கப் படும் போக்கில் எத்தனை நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது!
‘வயதான பறவைக்கு
வானம் ஒரு சறுக்குப்பாறை.
கிழிந்த காகத்துக்குள்
பயம் மட்டும்
படபடக்கிறது
இறக்கைகளின் பொய்யாக.
மண்ணில் உதிர்ந்த
இறகுகள் இரண்டு
காற்றின் விரல்கள் போல்
கருப்பாய் பதறுகின்றன,
காகத்தின் அர்த்தத்தை மெதுவாக அழித்தவாறு.’
என எத்தனை கவித்துவமான வரிகள் வாசிப்போனுக்கு வரவாகின்றன!
வாழ்க்கை பற்றிய தத்துவமாகட்டும், மரணம் பற்றிய எண்ணவோட்டமாகட்டும், இயற்கை யைப் போற்றிப் பரவும் கவிதையாகட்டும், தினசரி வாழ்க்கையில் பெறக் கிடைக்கும் அமா னுஷ்ய தருணங்களாகட்டும், பாலுறவு குறித்த கவிதையாகட்டும், மேற்கண்டவிதமான நுட்பமான உவமான உவமேயங்களும், ஒப்புமைகளும், மொழி கையாளப்பட்டிருக்கும் அழகும் வைதீஸ்வரன் கவிதைகளில் வெகு இயல்பாக இடம்பெறுகின்றன.
சின்னச் சின்னக் கவிதைகளில்கூட ‘நவீன கவிதையின் முக்கிய குணாம்சங்களில் ஒன் றான’ மொழிப் பிரயோக வீச்சைத் துல்லியமாக உணர முடிகிறது.
’பையன் தெருவில்
காற்றைக் கோர்த்து
விரலை ஒட்டி
வானைப் பார்த்தான்
அங்கே பறந்தன
அவனுடைய குரல்கள்’
என்ற ‘பட்டம்’ என்ற தலைப்பிட்ட ஆறுவரிக் கவிதையின் மொழிவீச்சு பட்டம் விடும் பையனின் குதூகலத்தை எத்தனை நயம்படவும், திறம்படவும் படம்பிடித்துக் காட்டுகிறது! இதுபோல் பல கவிதைகளை உதாரணங்காட்ட முடியும்.
‘கொடியில் மலரும் பட்டுப்பூச்சி
கைப்பிடி நழுவி
காற்றில் பறக்கும் மலராச்சு (பறக்கும் சுவர்)
‘வானத்தைச் சுட்டேன்
காகம் விழுந்தது
காகத்தைச் சுட்டேன்
காகம் தான் விழுந்தது,’
‘விரல் மீட்டிய மழை’, ‘மரக்குதிரை’ ஆகியவை வைதீஸ்வரனின் நீள்கவிதைகளில் இரண்டு வகைமைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. ‘மரக்குதிரை’ முழுக்க முழுக்க குறியீடுகளால் கட்டமைந்தகவிதை. ‘விரல் மீட்டிய மழை’ மழையை மழையாகவே கண்டு நுகர்ந்து காட்சிப்படுத்தும் கவிதை.
‘இந்த மழையை விரல் தொட்டு எழுத ஆசை,
இயற்கையின் ஈரம் சொட்ட
எனினும்,
தொட்ட விரல் மேகத்தில்
ஒட்டிக்கொண்டுவிடுகிறது;
ஓரங்கமாக
மேகம் இட்ட கையெழுத்தோவென
கவிதை காட்சி கொள்ள’.
என்பதாய் முடியும் ‘விரல் மீட்டிய மழை’ யில் வெளிப்படும் இயற்கையின்பால் ஆன அளவற்ற பிரியம் கவிஞரை சூழல் மாசுபாடு குறித்த கவலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகளையும் எழுதத்தூண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, ‘மனித-வெடிகள்’ என்ற கவிதை ‘மரம் வெட்டப்படுதலை’யும், காடு அழிக்கப்படுதலையும் வலியோடு பேசுகிறது:
‘கொன்று குவித்த
ஆதிகால உடலங்களாய்
அடுக்கிக் கிடத்திய காட்டு மரங்கள்
லாரியின் மேல்
ஊருக்குள் நகரும்
முழு நீளப் பிணங்கள்
படுகொலைக்குக் ஆரணமாய்
தொங்கிய இரண்டடிக்
கைகளை என் மேலும்
ஊரெங்கும் பார்த்தேன்.
முழு உடம்பையும் யோசிக்க
மனதில்
பயம் வெடிக்கிறது
அணுகுண்டாக.’
’காக்கை ,குருவி எங்கள் சாதி’ என்று பாரதியார் பாடியதற்கேற்ப கவிஞரின் படைப்பு வெளியில் காக்கை, குருவி, நாய், பூனை முதலிய உயிரினங்கள் இங்குமங்கும் உலவிக் கொண்டேயிருக்கின்றன. ‘அ-சோக சிங்கங்கள்’, ‘கோழித் தலைகள்’, ‘கால்நடையின் கேள்வி’, ‘அணில்’, ‘கிளி நோக்கம்’, ‘ஆடுகள்’, ‘வௌவால்கள்’, ‘எனக்கும் யானை பிடிக்கும்’, ‘கொக்கு வாழ்வு’, என பல கவிதைகள் நான்குகால் உயிரினங்கள் மற்றும் புள்ளினங்களை நலம் விசாரிப்பவை. அவற்றை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையை இழை பிரித்துக் காட்டுபவை.
‘இலையிடையில்
எலி நினைவால்
பூனை நீண்டு
புலியாகும்.’
செவிகள் கொம்பாகி
வாலில் மின் பாயும்
நகங்கள்
கொடும்பசி போல்
மண்ணைத் தோலுரிக்கும்.
‘காற்றின் கண்ணிமைப்பில்
இலைகள் நிலைமாறி
எலிகள் நிலைமாறி
எலிகள் நிழலாகப்
புலி மீண்டும்
பூனைக்குள் பாய்ந்து
முதுகைத் தளர்த்தும்.
கிட்டாத கசப்பை
மியாவால்
ஒட்டி, ஓட்டில்
வளைய வரும்
வீட்டுப்பூனை.
’நிழல் வேட்டை’ எனத் தலைப்பிட்ட மேற்கண்ட கவிதை பூடகத்தன்மை வாய்ந்த நவீனக் கவிதைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இதன் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த அடுக்குகளும், உள்ளார்ந்திருக்கும் ‘நான்’ – ‘நீ’க்களும் வாசிப்பனுபவத்தைத் தம்முள் தேக்கிவைத்திருப் பவை.
இவருடைய நனவோடையில் ‘காற்றாடிகள்’ பறந்தவண்ணமேயிருக்கின்றன.
வானத்தில்
என்றோ கட்டறுந்து போன
என் காற்றாடியை மறந்து
எத்தனையோ நாளாச்சு
இன்றுவரை தெரியவில்லை,
அது
என் வீட்டுக் கூரையிலேயே
வாலாட்டிக் கிடக்குதென்று (பிணைப்புகள்)
’கிணற்றில் விழுந்த நிலவு’ என்ற தலைப்பிட்ட, பரவலாகப் பேசப்பட்ட கவிதையில் ‘கிணற்றில் விழுந்த நிலவின் நடுக்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்திவிட’ச் சொன்னவர், (தன்னிடமா, உன்னிடமா, என்னிடமா என்று தெரியாத விதத்தில்’) கடைசி வரியில் ‘யாருக்கும் தெரியாமல் சேதியிதை மறைத்துவிடு/ கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு’ என்று சொல்லும்போது நிலவு ‘தவறி விழுந்த, தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணைக் குறிப்பதாகிறது என்று தோன்றுகிறது.
‘பெண் அழகுணர்வுக்குரியவள்’ என்பதைத் தாண்டி அவளுடைய கால்களில் தன்னை நிறுத்திக்கொண்டு அவளைப் புரிந்துகொள்ள முயலும் எத்தனம் இவருடைய பல கவிதைகளில் காணக்கிடைக்கிறது. ‘ஊமையின் சாபம்’, ‘மாடல்’, ‘ஈ’ முதலிய கவிதைகளை உதாரணங்காட்டலாம்.
‘ஆடைகள் அவளைத் துறந்து
ஒரு நாற்காலியை மறைத்துக்கொண்டிருக்கின்றன.’
என்று சூழலை விவரிக்கும் கவிதை _
‘பெண்ணென்ற அற்புதத்தை
கனவு விரல்களால் பூசும் கலைஞனுக்கு
காலமும், சூழலும் அர்த்தமற்றது,’
என்று ஓர் ஓவியரின் சார்பாய் பேசுவதோடு நின்றுவிடாமல்,
’கீழ்படிந்த உருவத்தின்
மடிந்த வயிற்றுக்குள் இரை’யும்
காலிக் குடல் காற்றும்
விழிக் கடையில் சுவடான நீர்க்கோடும்
ஓவியத்துக்குள் வருவதில்லை
_ எப்படியோ
தப்பிவிடுகின்றன’.
என்று, வறுமை காரணமாக அந்த மாடல் ‘நிர்வாணமாக’த் தன்னைப் படம் வரைய ஒப்புக்கொடுத்திருக்கும் நடப்புண்மையைஉம் பதிவுசெய்து முடிகிறது.
சுய – விசாரணைக் கவிதைகள், சுய – எள்ளல் கவிதைகளும் வைதீஸ்வரனின் படைப்புவெளியில் கணிசமாகவே இருக்கின்றன. ‘நடைமுறை ஒழுக்கம்’, ‘ரிக்ஷாவும் – விருந்தும்’ முதலிய பல கவிதைகளை உதாரனங்காட்டலாம்.
‘ஆண் என்பதாக சமூகம் கட்டமைத்திருக்கும் பிம்பம் அவனை எப்படி மூச்சுத்திணற வைக்கிறது’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் கவிதை ‘பரிணாமத்தின் புழுக்கம்’.
‘அழுகிறவன் ஆம்பளையில்லை’ என்ற
அசட்டு வாக்கியத்தில்
வெட்கப்பட்டு, வயதாகி
ஊமையானவன் வாலிபத்தில்
பிறந்தபோது கேட்டு
உறவுகள் சுற்றி கும்மியடித்த
என் முதல் அழுகை _ அது பூர்வ ஜன்மத்தின் முற்றுப்புள்ளி.
‘இன்று எனக்கு அழ வேண்டும்.
அழுதாக வேண்டும் சாவதற்கு முன்
எதற்காகவாவது அழுதாக வேண்டும்.’
இறுக்கம் கூடிய கவிதைகளின் அளவு இறுக்கம் தளர்ந்த, உரைநடைத்தன்மை அதிகமான கவிதகளும் வைதீஸ்வரனின் படைப்பாக்க வெளியில் காணப்படுகின்றன. அப்படியான கவிதைக்குரிய தேவையை ஒரு சமூகமனிதனாக அவருடைய கவிமனம் உணர்ந்திருக்கக் கூடும். நவீன தமிழ்க்கவிதையில் தனிமனிதப் புலம்பல்களே அதிகமாக உள்ளது என்று பொத்தாம்பொதுவாய் கூறிவருபவர்கள் இவருடைய கவிதைகளிலுள்ள சமூகப் பிரக்ஞை பற்றி என்றேனும் அக்கறையோடு பேசப்புகுந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு ‘இல்லை’யென்பதே எனக்குத் தெரிந்த பதிலாக இருக்கிறது. ஒரு கட்டுரையில் திரு.வைதீஸ்வரனின் கவிதைவெளி குறித்து அடக்கிவிட முடியாது. இயற்கை, வாழ்வின் அநித்தியம், வறுமை, சுய விசாரணை, நகர வாழ்வு, பெண் பற்றிய பார்வை, காலம், புலன் உணரும் அமானுஷய்ப் பொழுதுகள், பாலியல் கவிதைகள், பறவைகள் – விலங்குகளோடான கூட்டுறவு எனப் பல விஷயங்கள் வைதீஸ்வரன் கவிதைகளில் பதிவாகியிருப்பது குறித்த அகல்விரிவான ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment