Sunday, September 12, 2021

பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்...... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்......

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது

குழந்தைக் கிறுக்கல்கள்
தந்தைக்குக் காவியமாக_
ஞானத் தந்தைக்கு
ஆழமற்ற கிணற்றுக்குள்ளிருந்து
உபதேசிக்கக் கிடைத்த
அரிய வாய்ப்பாக _
காயத்ரியின் மழலைப்பேச்சு
மந்திரமாக உச்சரிக்கப்பட்டு
உருவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்
சூழல்….
பழகப் பழகப் பழகிவிடக்கூடும்
இதுவே பேரிலக்கியம் என்ற
.புரிதலும்…..
இருந்தாலும்
மழலை மாறும் விழிகளில்
விரியும் வானம்
ஒரு நாள் தெளிவாக்கும்
பரிந்துரையில் பிறப்பதல்ல பேரிலக்கியம்
என்று.
அது தன்னிலிருந்து கிளர்த்தெழுமொரு
காட்டுச்செடி,
மனிதநேயம்பாற்பட்ட மலைப்பிரசங்கங்களுக்கும்
மலைப்பிரசங்கங்களுக்கப்பாலான
மனிதநேயங்களுக்கும் இடையே
மறைந்தோடும் ஜீவநதியென
அம்மணம் மீறிய ஆன்மாவொன்று
அன்போடு சொல்லக்கேட்டு _
முயல் ஆமை முயலாமை ஊடாய்
வழியேகும் படைப்புவெளியில்
வளர்ந்த மகள் நடைபழக
நாலிலே ஒன்றிரண்டு பலித்திட
வழியுண்டு.


No comments:

Post a Comment