Sunday, September 12, 2021

அமரத்துவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அமரத்துவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)

”அவரைத் தெரியுமா உங்களுக்கு?”
நன்றாகவே தெரியும்”
”அவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
”பலமுறை பார்த்திருக்கிறேன்”.
”அவரோடு பேசியிருக்கிறீர்களா?"
"நிறையவே பேசியிருக்கிறேன்".
எப்போதுவேண்டுமானாலும் அழுதுவிடுவதாய்
எதிரே நிற்கும் இளைஞன் கண்களில்
தழுதழுப்பு…..
காணக்கிடைக்காத கொள்ளையழகு!
கோடிசூரியப் பிரகாசம் பிரசன்னம்
சிரிப்பில் மலர்ந்த அவன் கன்னக்குழியில்!
ஒரு கணம் தனது ஆதர்ஷப் படைப்பாளியை
நானாகக் கண்டு உருகிநின்றவன்
அன்பின் உச்சத்தில் தன் சட்டைப்பையில்
வைத்திருந்த
ஐந்து ரூபாய் ஜெல் பேனாவை எடுத்து
என்னிடம் கொடுத்தபோது
நடந்த உருமாற்றம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது.
வருகிறேன் என்று சொல்லிச் சென்ற அவன் குரலில்
மறுபடியும் பிறப்பெடுத்த அந்தப் படைப்பாளி
திரும்பவும் ஏன் அதே ஒண்டுக்குடித்தன வீட்டிலேயே
அத்தனை அருமையான கதைகளை எழுதிக்கொண்டிருந்தார் என்பதைத்தான்
என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

No comments:

Post a Comment