Sunday, May 30, 2021

பிறவி ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிறவி

 
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக்

காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம்.

There is many a slip between the cup and the lip என்று

சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து

எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி

ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள்.

பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை.

ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள்.

நீர்க்கோப்பையின் கனத்தில் கை நலுங்குகிறது.

மறுகையிலுள்ள ஸ்கேல் மிக நெருங்கிவரும் போதெல்லாம்

அரண்டுபோய் தம்மையுமறியாமல் மூடிக்கொள்கின்றன விழிகள்.

அதன் அச்சத்தை அதிகரிப்பதாய்,

ஒருமுறை ஸ்கேலின் மேற்பகுதி உதடுக்கு மேல் ஏறி

விழிமீதூர்ந்து புருவத்திலேறிவிடுகிறது.

ரணமாகிச் சிவந்த கண்களின் வலிநீக்க முன்வருவார் வரிசை யென்று என்றாவதிருந்திருக்கிறதா?

ஆனாலும் திரும்பத்திரும்ப முயன்றவண்ணமிருக்கிறாள் சிறுமி.

ஒவ்வொரு முறையும்

அவளுடைய இன்னொரு கையிலிருக்கும் கோப்பையிலிருந்து

தரையில் சிந்திக்கொண்டிருக்கிறது நீர்.

 

 

 

 

 

No comments:

Post a Comment