Sunday, May 30, 2021

இறக்கைகளை இனங்காணல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இறக்கைகளை இனங்காணல்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்) 

தெரியும், பட்டாம்பூச்சி என்பது உங்களுக்கு ஒரு பொதுப்பெயர்.

எனக்கு அது தனிப்பெயர்.

என் வண்ணங்களை நீங்கள் பொதுவாக்கினாலும்

எனக்கு அவை தனியானவைதான்.

என் ஊதாநிறம் எப்படி இன்னொரு பட்டாம்பூச்சியின் ஊதாநிறமாகும்.

ஒத்திருத்தலும் ஒன்றாதலும் ஒன்றா?

நான் பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிகள் அல்ல.

பட்டாம்பூச்சிகள் என்று அடையாளமழிப்பதில் உள்ள

வஞ்சப்புகழ்ச்சியை நான் அறிவேன்.

லதாஎன்பதற்கும்லதாக்கள்என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை

நீங்கள் அறியாதவரல்ல.

என் வாசகசாலையும் சர்வகலாசாலையும் உங்களுக்குத் தெரியாதென்பதால்

அவை இல்லையென்றாகிவிடாது.

ஒரு விரிபரப்பைக் கடக்கும் கால்கள் உண்மையில்

அந்த விரிபரப்பின் ஒரு பகுதியையே கடக்கின்றன பெரும்பாலும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சம்பந்தமில்லாமல் ஒரு பழமொழியை உதிர்ப்பதற்கு முன்பு பட்டாம்பூச்சிக்குப் பல்லிருக்கிறதா என்று தெரிந்துகொள்வது நலம்.

பட்டாம்பூச்சியாகிய எனக்கு வண்ணத்துப்பூச்சி என்ற பெயரும் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

ஆனால்வண்ணாத்திஎன்று ஒரு கவி அன்பொழுகப் பாடியபோது

துணிவெளுப்பவளை என்றல்லவா தவறாக எண்ணிவிட்டேன்.

சலவைத்தொழிலில் எதுவும் இழிவில்லை

என் மொழியறிவுப்போதாமையைத்தான் பழிக்கிறேன்

என்று சுயவிமர்சனம் செய்யும் பட்டுப்பூச்சியாகிய என்

இறக்கைகள் சன்னமாக இருந்தால்தான் என்ன?

எனக்குப் பறக்கமுடிகிறதேஅதைவிட வேறென்னவேண்டும்?

அவரவர் பட்டாம்பூச்சிகளுக்கு அவரவரிடம் செல்லப்பெயர்களும் உண்டு.

நானாகிய என் பட்டாம்பூச்சியின் செல்லப்பெயர்(கள்)

அநாமிகா ரிஷி.

சொல்லும்போதே சரேலென விரியும் என் சிறகுகள்

அதோ உயரே!

 

No comments:

Post a Comment