Saturday, September 12, 2020

வாசிப்பின் சுயம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசிப்பின் சுயம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று
முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து
பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால்
இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம்
எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை
அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில்

புத்தம்புதிய வாசகர்களுக்கு அவர்களிருவருமே
உலகம் உய்யவந்த எழுத்துவித்தகர்களாய்
விடுபடா இலக்கியப் பெரும்புதிர்களாய்

இத்தனையத்தனை யென்றில்லாமல்
அத்தனை சத்தமாய் ஆர்ப்பரிக்கும் கடலைக் குடத்திலிட்டதாய்
குத்துமதிப்பாய் ஒரு நூறு வானவிற்களை
பத்திரப்படுத்திவைத்திருப்பவர்களாய்
பித்தேறச்செய்கிறார்கள்

நித்திரையிலும் அவர்களைப் போற்றிப் பாடிக்கொண்டேயிருக்கும்
குரல்களுக்குரியவர்களுக்கு ஒருகாலை தட்டுப்படலாகும் ஆழ்கடலும் நல்முத்தும்
வாசிப்பில் ஆழ்ந்தாழ்ந்து அனுபவங்கொள்ளும்
நீச்சல்திறனும்.

அத்தருணம் முதல்
அவர்களுடைய எல்லைகள் விரிய ஆரம்பிக்க
அடிமுடியறிந்த முழுவிழிப்பில்
விசுவரூபங்கொள்கிறது அவர்களுடைய
வாசிப்பின் சுயம்.

No comments:

Post a Comment