Saturday, September 12, 2020

விரி கதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விரி கதை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குக்குறுங்கதைக்குக்கூட குறைந்தபட்சம்
எட்டு முதல் பதினைந்துவரிகள் தேவைப்படும்போது
விரி கதையை ஒரு வரியில் எழுதுவதாவது
என்று சுற்றிலும் குழுமியிருந்தவர்கள் குழம்பித் தவிக்க _

கவிழ்த்துவைத்திருந்த கூடையை நேராக நிமிர்த்திய
படைப்பாளி
கீழே குவிந்துகிடந்த சொற்களிலிருந்து இரண்டேயிரண்டை யெடுத்து
ஒரு வரியாக (அன்றி ஒரு வார்த்தையாக)க் கட்டமைத்ததில் _

எல்லையற்று நீண்டுகொண்டே போன
விரிகதை யில்
கவி விதை கதை தை கரி யெனக் கிடைத்த
சொற்கள் போதாமல்
கதை யெங்கே எனக் கேட்கும்
அதிகப்பிரசங்கி வாசகரை
’நாசமாய்ப்போ’ என்று சபித்தபடி_

கால் வரியில் காவியம் போல் ஒன்றைத்
தன் ஆவி கட்டாயம் எழுதும் என்று அறிவித்து
தன் ஆத்ம வாசகர்களின் கலிதீர்க்கிறார்
(கிலிசேர்க்கிறார்) அவர்!

No comments:

Post a Comment