Saturday, September 12, 2020

கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…..‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…..



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


முன்பின் பார்த்தறியாத அரிய பறவையொன்றின்

ஒற்றைச் சிறகிதழ் காற்றில் மிதந்து வருவதைப்

போலொரு சொல்

மூச்சை உள்ளிழுக்கும்போதாயிருக்கலாம் _

அத்தனை மென்மையாக என்

 நுரையீரல்களுக்குள் நிறைந்து

என் இரத்தநாளங்களில் ஊடுருவிச் செல்லத்

 தொடங்குகிறது….

சொப்பனத்தில் எங்கென்றே சொல்லமுடியாத

 ஒரு வனாந்தரத்தில்

அல்லது ஒரு தெருவில்

நான் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும்போது

ஒரு தேவதை எதிரே வந்து

‘என்ன வேண்டும் கேள்’ என்று சொன்னால்

பேந்தப்பேந்த விழிப்பதுபோலவே _

விழித்தபின் காலின்கீழ் எங்கோ 

புதையுண்டிருக்கும்

அந்த வனாந்திரத்தை அல்லது தெருவை

நினைவில் மீட்டுயிர்ப்பிக்க மீண்டும் மீண்டும்

 முயலும்

பிரக்ஞையின் கையறுநிலையாய்

காந்தும் அந்தச் சொல்……

பூங்கொத்தாகுமோ

உதிரிப்பூவாகவே நின்றுவிடுமோ

எப்படியிருந்தாலும்

இப்போது அது எனக்குள் தன்னை

 எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையாக….

No comments:

Post a Comment