Sunday, September 13, 2020

பட்டியல்களுக்கு அப்பால்….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பட்டியல்களுக்கு அப்பால்…..

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்
கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன்.

சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமே
என்று புரியும் காலம் வரை
சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமே
அரியணையைச் சுமந்தபடி.

நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயே
அந்த வளரிளம் மனம்
ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது…..

உளவியலை அறிந்துகொள்ளும் முன்பே
எதிர்-உளவியலை அறிந்துகொண்டதில்
நான் அடைந்த லாப நஷ்டங்களை
இந்தக் கொரோனா கால
உலகளாவிய பேரிழப்புகளின் சமயத்தில்
பேசுவது சரியல்ல.

ஒருவகையில் வாழ்க்கை வியாபாரம்தான்
என்றாலும்
வியாபாரிக்கும் இசைகேட்கவேண்டிய தேவையிருக்கிறதுதானே….

பட்டறிவு என்ற பெயரில் அவனுக்கு அறவுரை சொல்ல
அனுபவங்கள் அத்தனை ஒற்றைத்தன்மை வாய்ந்தவையா என்ன?

ஆனாலும் இன்று அந்த இளைஞனின் முகம்
ஒரேயடியாக வாடியிருந்ததைக் காணச் சகிக்கவில்லை.

கண்ணீரைவிட அதிகம் உறுத்துவது
அதன் அதிஉறைநிலையிலான ஒரு முகபாவம்.

காரணம் கேட்டதற்கு
குறிப்பிடத்தக்க கவிஞர்களின் பெயர்ப் பட்டியல்களில்
தன் பெயர் இடம்பெறுவதேயில்லை என்றான்.

பலசரக்குக்கடையொன்றில் வாங்கவேண்டிய பண்டங்களின் பெயர்ப்பட்டியல்களை எழுதிய துண்டா நீ?”

உண்டு.”

வீட்டில் எத்தனை பேர் அந்தப் பட்டியல்களைத் தந்திருக்கிறார்கள்?”

அம்மா, அத்தை, பெரியப்பா.”

எல்லோருடைய பட்டியல்களும் ஒரேமாதிரி யிருக்குமா?”

இருக்காது. அம்மாவின் பட்டியலில் வெள்ளைப்புளி யென்றால் அத்தையின் பட்டியலில் கருப்புப்புளி.
பெரியப்பாவின் பட்டியலில் சின்னகற்கண்டுப் பொட்டலமிருக்கும் கண்டிப்பாக.
அதை ஒரு கை வாயில் போட்டு ருசித்தபின்
அத்தனை அருமையாகப் பாடுவார்.”

வீட்டிற்கென அவர்கள் தயாரிக்கும் அத்தகைய பட்டியலை உன்னால் எழுத முடியுமா?”

முடியாது. ஒருமுறை எழுதியபோது உளுத்தம்பருப்பு மூன்று முழம் என்று எழுதிவிட்டேன். எல்லோரும் அன்று முழுக்கச் சிரித்தார்கள்.”

ஆக, பட்டியல் தயாரிப்பதற்கும் ஒரு தகுதிவேண்டும். சரிதானே?”

ஏதோ புரிவதுபோல் தலையசைத்தான் அந்த வளரிளம்பருவத்தான்.

சரி, உனக்கான தினசரி உணவு தயாரிக்க நீ எழுதும் பட்டியலில் என்னவெல்லாமிருக்கும்?”

காற்று, சில நட்சத்திரங்கள், ஒன்றிரண்டு இனிமையான பாடல்கள், நல்ல கவிதைகள், கொஞ்சம்போல் அவல், சிறிது தண்ணீர், அல்லது ஒரேயொரு பாக்கெட் மாரி பிஸ்கெட்

இந்தப் பட்டியலைப் படிப்பவர்கள் _”

என்னைப் பைத்தியம் என்பார்கள்

ஆனால், நீ அதுவா?”

இல்லை. தவிர, பைத்தியம் என்று சொல்லப்படுபவர் பார்வையில் நாமே பைத்தியமாகத் தெரியக்கூடு மல்லவா?”

அவ்வளவுதான் எல்லாம்.”

ஒரு காதலன்கூட அப்படிப் பார்த்திருக்கமாட்டான்! _ அத்தனை உள்ளார்ந்த அன்போடு என்னைப் பார்த்த அந்த விழிகளில் புத்துயிர்ப்பு மின்னியது.

இன்றிரவு அவன் இன்னுமிரண்டு கவிதைகளைக் கண்டிப்பாக எழுதுவான்.

No comments:

Post a Comment