Tuesday, May 26, 2020

ஒளிக்கீற்று - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஒளிக்கீற்று
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’உனக்கு இருள் எனக்கு ஒளி’ என்றால்
’உன் இருள், என் ஒளி’ என்பதல்ல பொருள்.
முற்றிய பைத்தியமாய் அருள்வாக்கு
சொல்வதாய்
நக்கல் செய்யலாம் நீங்கள்.
விக்கல்போல் அல்லாமல் அது்
மிக்க விழிப்புடனான உங்கள் தேர்வு;
பொக்கிஷம் அனைய அடிப்படை உரிமை.
எதையும் எவரையும் எத்தித்தள்ளுதலே
ஏற்றந்தரும் பெருமை.
எக்காரணங்கொண்டும் அவற்றை
விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று
நன்றாகவே தெரியும். நல்லது.
அதற்கு முன்
’தக்கார் தகவிலர்’ என்ற குறளையும்
சற்றே நினைவுபடுத்திக்கொண்டால்
இன்னும் நல்லது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:114)


பொழிப்பு (மு வரதராசன்): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்

மணக்குடவர் உரை: செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.
இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.
(தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவ்ருடைய புகழ் அல்லது பழியால் அறியப்படும். (எச்சம் -இறந்த பின்னர் எஞ்சி நிற்பது புகழ் அல்லது பழி)

No comments:

Post a Comment