Tuesday, May 26, 2020

நாயின் சூரியன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)



நாயின் சூரியன்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சூரியனைப் பார்த்து நாய் குரைத்திருக்கலாம்;
அதற்கான அர்த்தங்கள் மனித அகராதிக்கு அப்பாற்பட்டவை
யென்றே தோன்றுகிறது.
நாயுமல்லாத சூரியனுமல்லாத மனிதர்
நாயின் கண்களால் சூரியனைப் பார்த்திருக்க வழியில்லை.
சூரியக்கதிர்களாகி நாயைத் தொட்டிருக்கவும் முடியாது.
நெருக்கமாய் வாலாட்டி நின்றாலும்
நாய்க்கும் தனக்கும் நடுவேயுள்ள நெடுந்தொலைவையோ
வரிவரியாய்க் கவிதையெழுதினாலும்
கதிரோனுக்கும் தனக்குமிடையிலான
காலவேகத்தையோ
கடக்கவேயியலாத மனிதர்
காலங்காலமாய்
சூரியனுக்கும் நாய்க்கும் இல்லாத சச்சரவில்
நியாயம் வழங்கி தன்னைத்தானே நாளும்
மெச்சிக்கொண்டபடி…
.

No comments:

Post a Comment