Wednesday, August 29, 2018

சரிநிகர்சமானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


சரிநிகர்சமானம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தொடர்ந்த இடைவெளிகளில் அந்த வாக்குறுதி
சாமான்யர்களுக்கு
அளிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

என் முன் எல்லோரும் சமம்.
இனியென்னாளும்
சரிசமம் சமத்துவம் வெறும் சொப்பனமல்ல - சத்தியம்

ஆனந்தப்படும் சாமான்யர் அறிவதில்லை
அரசர்களின் முன் அனைவரும்
அடிமைகளே என்பதை;

ஒருபோதும் அரசர்கள் அப்பிராணி மக்களுக்கு
சாமரம் வீசுவதில்லை யென்பதை;

குறிப்பிட்ட பொதுவெளிகளைத் தவிர
மற்றபடி
அரசர்களின் அரசகுடும்பத்தினரின்
பளபளக்கும் இருக்கைகளில்
தங்களுக்கு இடமில்லை யென்பதை;

கடையென்றாலும் தன்னுடையதும் அரசருடையதும்
சமமான சதுரமீட்டர் பரப்பளவு கொண்டதாக
இருப்பதில்லை யென்பதை.....

அரசரோ அரச குடும்பத்தினரோ அடித்தால்
சாமான்யர்களனைவரும்
சமமாக வாய்பொத்தி கைகட்டி
வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

அரசரின் அந்தப்புரப்பெண்டிரனைவரும்
சமமாக
சகித்துக்கொள்ளத்தான்வேண்டும் _
அரசர்களின் அரசகுடும்பத்தினரின்
அத்துமீறல்களை
அடியுதை ஆகாத்யங்களை.

அதேவயதொத்த பிள்ளைகள்
சாமான்யவீட்டிலிருந்து வந்தவர்கள்
இளவரசர்கள் ராஜகுமாரிகளின் விளையாட்டுக்
களிலெல்லாம் 
சமமாகப் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும்_
பந்துபொறுக்கிப்போடுபவர்களாய்;

அரச குடும்பத்தினரின் ’‘போங்காட்டத்தை
யெல்லாம்
ஆஹா! ஓஹோ !வாரே-வாவ்!’ என்று
ஆகாயமளாவ போற்றிப் புகழ்பவர்களாய்;

அரசவெற்றியைப்பாராட்டிப் பாட்டுப்படித்து
வறுமையில் வாடி
ஒருவேளை சோறு உண்டு ஈட்டிய
கைக்காசைப் போட்டு 
பதக்கம் வாங்கித் தருபவர்களாய்......

எல்லோரும் எப்போதும்
சமமாகவே பாவிக்கப்படுகிறார்கள்:
சோப்ளாங்கிகளாகக் கையாளப்படுவதில்....

எல்லோரும் எப்போதும்
சமமாகவே நடத்தப்படுகிறார்கள் _
சமமற்றவர்களாக.



No comments:

Post a Comment