Saturday, July 14, 2018

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சிலபல நேரங்களில்

சிலபல மனிதர்கள்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)






சிலருக்கு இவரைப் பிடிக்காது;
அசிங்க அசிங்கமான வார்த்தைகளில்
வசைபாடுவார்
ஆங்காரத்துடன் 
அதிமேதாவித்தனத்துடன் _
கவிதை கட்டுரை கதை விமர்சனம் 
முகநூல் பதிவு
இன்னும் நிறைய நிறைய 
நுண்வெளிகளில்.

அவருக்கு இவரைப் பிடிக்காது
அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார்
அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்
அதிமேதாவித்தனத்துடன்
அதே யதே நுண்வெளிகளில்.

அவர்கள் செய்வது சமூகப்பணி;
அவர்கள் காட்டுவது மனிதநேயம்.

அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள்
அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே.

மெத்தப்படித்தவர் அவர் _
சத்தம்போட்டுத் தூற்றிக்கொண்டேயிருக்கிறார்
இந்த நாடு நாசமாய்ப் போகட்டும் என்று.

போனால் நானும் அவரும் என்னாவது என்று கேட்டால்
என்னைப் போன்ற சுயநலவாதியும் இருக்கமுடியுமோ?

இவருக்கு முன் இன்னொருவர்
’இந்த நாடு நாசமாய்ப்போகட்டும்,
இருக்கும் ஆறுகளெல்லாம் வறளட்டும்’
என்று அடுக்கிக்கொண்டே போய்
இறுதியில்
’குழந்தைகள் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கட்டும்’ என்றார்.

அதெப்படி முடியும் என்று எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை எனக்கு
அன்றும் இன்றும்.

ஆகச்சிறந்த அறிவீலி நான் என்று
ஏகமாய் துக்கம் சூழ்ந்ததுதான் மிச்சம்.



இச்சகம் பேசிப்பேசியே .
கச்சிதமாய்க் காரியத்தை முடித்துக்கொள்பவர்
’இச்சகத்திலோரெல்லாம் எதிர்த்துநின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’
என்று பாரதியைத் துணைக்கிழுத்துக்கொள்வதைக்
கேட்கப் பொறுக்காமல்
உச்சிமீது வானிடிந்து வீழ _

வச்ச சோறு வாய்க்குள் போவதற்கு முன்
விரைந்தோடிவந்து அவரை
அப்பால் இழுத்துதள்ளிக் காப்பாற்றியவர்
அடிபட்டுக்கிடப்பதைக் கண்டுங்காணாமல் அப்பால் நகர்ந்தவர்
மெச்சிக்கொண்டார் தன்னைத்தானே.




கிச்சுகிச்சுமூட்டினாலும் சிரிக்கவைக்கமுடியாதவர்களெல்லாம்
சாப்ளினைத் தம் குருவாகச் சொல்லிக்கொள்கிறார்களென
மிச்சம் மீதி இல்லாமல் திட்டித் தீர்த்தவர்
தன் கவிதையை புல்தடுக்கிப்பயில்வானொத்த கோமாளியாக்கி நடத்திக்கொண்டிருக்கும்
சர்க்கஸைக் காணக்
கட்டணமுண்டு கட்டாயம்.

ரொக்கமாகத்தான் தரவேண்டும் என்றில்லை…….

என்றாலும்
அவர் சகாக்களுக்கு மட்டும்
என்றுமுண்டு இலவஸ பாஸ்கள்..

Ø  

No comments:

Post a Comment