Wednesday, July 11, 2018

ராமன் என்பது சீதை மட்டுமல்ல; சீதை என்பது ராமன் மட்டுமல்ல - லதா ராமகிருஷ்ணன்


அணுகுமுறை 
ராமன் என்பது சீதை மட்டுமல்ல;

சீதை என்பது ராமன் மட்டுமல்ல
லதா ராமகிருஷ்ணன்


ஒரு காவிய நாயகன் நாயகி, காவியக் கதை எல்லாவற்றிலுமே சாரமும் உண்டு; சக்கையும் உண்டு. எல்லாவற்றிலும் சாரத்தை எடுத்து சக்கையை விடுத்துச் செல்வதே வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது.

ராமன் என்ற காப்பிய நாயகனை நாம் ஏன் எப்போதுமே சீதையை சந்தேகித்தவனாக மட்டுமே அணுகவேண்டும்? அற்பதினாயிரம் மனைவி யரை ஒரு மன்னர் வைத்திருந்த காலத்தில் ஒரு சொல் ஒரு இல் ஒரு வில் என வாழ்ந்தவனும் அவன் தானே. எல்லாப் பெண்களுக்குமான ஆத்மார்த் தமான எதிர்பார்ப்பு அவன் வழி சீதைக்கு லபித்ததல்லவா! சீதையை சந்தேகித்ததில், அவள் பிரிந்ததில் அவன் மகிழ்ச்சியடைந் தானா? மனநிம்மதியடைந்தானா?

’தீர்ப்பளிக்காதே நாமெல்லாமே பாவிகள்தான்’ என்று ஒரு பரத்தைமீது கல்லெறி பவர்களை நோக்கி ஏசு கூறுவது பரத்தையர்களைக் குறை சொல்வதாக தொனிக்கிறது. அவர்கள் பரத்தையரானதற்கு இந்தச் சமூகம்தானே காரணம் என்று எழுத்தாளர் தேவகாந்தன் தனது கதை யொன்றில் குறிப்பிட்டிருப்பார். இதுவோர் ஆழமான சமூகநேயம் மிக்க பார்வை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏசுவின் வாசகத்தில் தொனிப்பது, அடர்ந்திருப்பது பரத்தையை குறைசொல்லும் போக்கா, அல்லது அவளை ஏசுபவர்களுக்கு புத்திபுகட்டும் நோக்கமா? எழுத்தாளர் தேவகாந்தனை எனக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தகாலத்தில் நாங்கள் இதுகுறித்து விவாதித்ததுண்டு.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று முடியும் சுமைதாங்கி திரைப்படப் பாடலைப் பற்றி (கண்ணதாசன் எழுதியது) ஒருவர் நமக்குக் கீழே உள்ளவர் கோடி என்னும்போது அதை நினைத்துப்பார்த்து நிம்மதியாக இருக்கமுடியுமா, அப்படிச் சொல்வது அக்கிரமமல்லவா என்று கோபத்தோடு எழுதியிருந்தார். அவருடைய சமூகப் பிரக்ஞையைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் அந்தப் பாட்டில் இடம்பெறும் அந்த வரிகள் அலைப்புறும் நாயகனை அமைதிப் படுத்தப் பாடப்படுவதே தவிர ’அவருக்குக் கீழே உள்ள மனிதர்களைப் பொருட்படுத்தாமலிருக்கும்படி போதிப்பதல்ல.

இருபதாண்டுகளுக்கு முன்பு என் தோழியொருவர் ஆசிரியராக இருந்து வெளிவந்துகொண்டிருந்த சூர்யோதயா என்ற இதழொன்றில் ‘படி தாண்டிய பாஞ்சாலி’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். மகாபாரதப் போரில் தங்கள் கணவர்கள், குழந்தைகள், தகப்பன், தமையன் என்று எல்லோரையும் இழந்துபோன பெண்கள் பாஞ்சாலியை சந்தித்து உங்கள் வீட்டு விவகாரத்திற்காக எங்கள் மக்களையெல்லாம் போரில் பலியாக்கிவிட்டீர்களே இது என்ன நியாயம் என்று கோபத்தோடு கேட்க, அந்தக் கேள்வியின் உண்மையுணர்ந்த பாஞ்சாலி தன் கணவர்களிடம் தன்னுடைய சீதனத்தை கேட்டு வாங்கி அவர்களை விட்டு நீங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றச் செல்வதாய் அந்தக் கதை விரியும். மகாபாரதத்தை ஒரு புதிய சமூகக் கண்ணோட்டத்தில் அணுகிவிட்டதாய் எனக்கு உள்ளூற ஒரு பெருமை இருந்திருக்கக் கூடும். அதற்குப் பின் சில காலம் கழித்து ஆங்கில நாளிதழொன்றில் வாசிக்க நேர்ந்த KURUKSHETHRA AND ITS AFTERMATH என்ற கட்டுரை என் கதை முன்வைத்த பார்வையும் அதைத் தாண்டிய பல பார்வைகளும், போரின் கொடுமை, மக்கள் சீற்றம், போரின் வெற்றி யாருக்குமே மகிழ்ச்சியளிக்காது என்ற உண்மை என பலப்பல குருக்‌ஷேத்திரப் போருக்குப் பிறகு’ என்பதாய் அந்தக் காப்பியத்திலேயே விரிவாகப் பேசப்பட்டிருப்பதை விரித்துக்கூறியிருந்தது!

வால்மீகி ராமாயணம் என்ற கடலில் தனது காப்பிய முயற்சி ஒரு துளி என்று கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டிருப்பார். கம்பராமா யணத்தில் இந்திரனோடு கலந்திருந்ததன் விளைவாகக் கிடைத்த சாபத்தால் கல்லாகச் சமைந்திருக்கும் அகலிகை ராமனின் கால்பட்டு மீண்டும் உயிர்பெற்றதும் ராமனின் காலில் விழுந்து வணங்குவதாக வரும். ஆனால் மூல காவியமான வால்மீகி இராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி, தெரிந்தே அவனோடு கலக்கும் அகலிகை சாபத்தால் அருவமாக உலவிக்கொண்டிருக்க ராமன் அந்த இடத்தின் எல்லையை மிதித்ததும் உருவம் பெறுவாள். ஆனால், ராமன் தான் அவள் காலில் விழுந்து வணங்குவான். தெய்வாதீனமாக நேர்ந்துவிட்ட ஒன்று என்றுதான் அவளுடைய இந்திரக் கலப்பை அவள் மகனே  குறிப்பிடுவான். அதற்காக யாரும் அந்தப் பெண்மணியை மதிப்பழித்து நடத்தமாட்டார்கள். வால்மீகி இப்படி எழுதியதால் சோரம் போகிறவள் பெண், பெண் சோரம் போவதே சரி என்று சொல்வதாய் எடுத்துக்கொள்வது சரியா? கம்பர் இதை மாற்றியெழுதியதால் அவர் ஆணாதிக்கவாதியாக முத்திரைகுத்தத் தக்கவரா?

நான் இந்தக் காப்பியங்களையெல்லாம் முழுமையாகப் படித்ததாகச் சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால், இந்தக் காப்பியங்களிலும் சரி, வேறு பல ஆழமான படைப்புகளிலும் சரி – அடிநாதமாக ஒரு தொனி, ஓர் உட்குறிப்பு வேர்ப்பிடித்து ரீங்கரித்துக்கொண்டிருக்கும். அதை நாம் மாற்றிப்போடலாகாது. ஒரு பிரதியில் மறை-பிரதி இருந்தால் அதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், நாமே மறை பிரதிகளை உருவாக்க லாகாது. இராமாயணம் முன்வைப்பது ராமன் கொடுமைக்காரக் கணவன், அடுத்தவன் மனைவியைக் கவர்ந்துகொண்டு போகிறவனே பேராண்மையாளன் என்பதா?  இல்லையென்றே நான் நினைக்கிறேன். அப்படியிருக்குமானால் இராமாயணம் இத்தனை காலம் மக்களிடையே நிலைத்திருக்க வழியில்லை.

காப்பியங்களாக இருந்தாலும் சரி, சமகாலப் படைப்புகளாக இருந்தாலும் சரி, வாழ்வின் BIG PICTURE அல்லது அதன் பிரதிபலிப்பு களை முன்வைக்கும் படைப்புகளை நாம் ஒற்றைப்பரிமாண வாசிப்பாக, பொருள்பெயர்ப்பாகக் குறுக்கிவிடுவதால் என்ன பயன்?

தவிர, ராமன் என்பவன் சீதையின் கணவன் மட்டும்தானா? ஒரு தனி மனிதன், ஒரு சமூக மனிதன், ஒரு தனயன், ஒரு அரசன், ஒரு மகன், ஒரு நண்பன் - ஒரு கருத்தாக்கம், ஒரு சிந்தனைப்போக்கு,  ஒரு வாழ்முறை, ஒரு கற்றல் – இன்னும் எத்தனையோ. நாம் உள்வாங்கிக்கொள்வதில் தான் இருக்கிறது எல்லாம்

நான் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணச் செய்யுள்கள் சில பாடமாக உண்டு. அதில் ஒன்று – முதல் நாள் பட்டாபிஷேகம் என்றபோதும் மறுநாள் காட்டுக்குப் போ என்றபோதும் ‘சித்திரத்தில் வரைந்த செந்தாமரையைப் போல் அபப்டியே இருந்தது அவன் முகம் என்பதாய் விவரிக்கும். அந்தப் பக்குவப்பட்ட மனம் வாய்க்க வேண்டும் என்பதே, அதற்கான வழிகாட்டியே என்னைப் பொறுத்த வரை எனக்கான இராமார்த்தம்.




No comments:

Post a Comment