Friday, July 22, 2016

ஆரூடக்காரர்களும் ராசிபலன்களும்!

ஆரூடக்காரர்களும் ராசிபலன்களும்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)





1
யதேச்சையாய் உதிரும், அல்லது, வேண்டுமென்றே உதிர்க்கப்படும்
ஒரு பெயரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதும்
அதை வெறுமே உச்சரித்துக்கொண்டிருப்பதும்
உங்களுக்குப் போதுமானதாயிருக்கலாம்.
ஆனால் அதுதான் இறந்துகொண்டிருக்கும் இலக்கியத்தைப்
பிழைக்கவைப்பதற்கான ஒரே வழி
என்று வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
கல்லாதது கடலளவுதான். என்றாலும்
நான் மாணவப்பருவத்தைக் கடந்துவெகுதூரம் வந்தாயிற்று.
இன்னும் ஆரம்பப்பள்ளியில் இருக்கும் நீங்கள்
அனுதாபத்திற்குரியவர்.

2
நுனிப்புல்லா கடலாழமா உங்கள் அறிவின் தீட்சண்யம்?
உங்கள் மனதுக்கு நன்றாகவே தெரியும்.
மனப்பாடமாக நான்கு பெயர்களை
வரிசையாக உச்சரிப்பதல்லவே அறிவு?
ஆகாசத்தைத் தொடுவதற்கான சூத்திரமாக நீங்கள் அதை
நம்பிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை.
ஆனால் மற்றவர்களை மதிப்பழிப்பதாய்ப் பார்த்து
எள்ளிநகையாடும் முன்
உங்களை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்.
நோஞ்சான் கொம்புகளோடு சிலுப்பித் திரியும் உங்களை
ஆசானாக எப்படி வரிக்க இயலும்?

 3
யாரும் கொம்புசீவி விடலாம்,
ஆனால், முறிந்தால் வலி உங்களுக்கு மட்டுமே.
குழந்தைகூட தகப்பன்சாமியாகும்தான்.
ஆனால், ‘ப்ரோக்ராம்ட்’ குழந்தை யல்ல;
மனிதனின் ஆறாம் அறிவு
கிளியிடம் தர்க்கம் செய்யவியலுமா என்ன?

 4
திறனாய்வுக்கோலைக் குறுக்கே நீட்டிப்
பிறரைத் தடுக்கிவிழச் செய்து
கைகொட்டிச்சிரிக்கும் முன்
சூரியனின் தகுதியைக்
கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

5
அன்றாடம் ஆயிரம் நாளிதழ்கள்;
ஒவ்வொன்றிலும் ராசிபலன்கள் வெவ்வேறாய்.
அவ்வாறாய் கவிதை ஆரூடக்காரர்களும்…..
கவிதை செத்துவிட்டது என்பார் சிலர்;
செத்துக்கொண்டிருக்கிறது என்பார் சிலர்;
சாகப்போகிறது என்று சிலர் சொல்ல,
சாகக்கூடியது என்று சிலர் சொல்ல
சத்தியமாயின்னும் பிறக்கவேயில்லை என
சாதிக்கும் சிலர்.

 6
இன்னும் பிறக்காத கவிதையைப் பிழைக்கவைக்க
திறனாய்வுச் சத்துணவாய் எதையெதையோ கலந்து பிசைந்து
உண்ணத் தருவார்.
குமட்டிக்கொண்டுவரும் குழந்தைக்கு
தன்னிச்சையாய் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொள்ளும்
பிள்ளையின்   முதுகில்
பேயறை பதம் பார்க்கும்.
வலியில் சில துள்ளித் துடிக்க

சில வலிக்க வலிக்கக் கடித்துவிடும்!.



No comments:

Post a Comment