Thursday, March 31, 2016

தூக்கத்தின் விழிப்பு….’ரிஷி’

’ரிஷி’யின் கவிதை

தூக்கத்தின் விழிப்பு….


1.

இடையறாது நடந்துகொண்டிருக்கும் கண்ணாமூச்சிவிளையாட்டின் இருவராய்
நானும் உறக்கமும்.
சில சமயம் குட்டிக்குழந்தையாய் என் கையைப் பிடித்திழுக்கும்;
சில சமயம் கழுகாய் ஒரு கவ்வு கவ்வி யெடுத்துச் செல்லும்.

சில சமயம் ஒரு கவிதை வரி புலிவாலாய்
மனதில் சிக்கிக் கொள்ள
விலங்கின் தலை யுறக்கத்தின் பேரலையில் எங்கோ
சுழற்றியடிக்கப்பட்டு வீசியெறியப்படும்.

சமயங்களில் நட்பாய், சமயங்களில் பகையாய்
செல்ல அணைப்பாய், வன்புணர்வாய்
கருணைத் தேவதையாய்
காட்டரக்கனாய்
பாட்டிலடங்காப் பொருளாய்
புறக்கணிக்கவியலா உறவாய்…..

சரிபாதியாய் என் நீள்வாழ்வைக் குறுக்கிச் செல்லும்
உறக்கம்
எனக்குள் பெருவாழ்வு வாழவைத்துக்கொண்டிருக்கிறது
நானறியாத நானை!


2
இன்றெனை யிதோ துரத்திக்கொண்டிருக்கும் உறக்கத்தின் பிடியிறுக்கி
நான் சிலமணிநேரச் சவமாகிப்போகுமுன்
சொல்லிவிடவேண்டும் என் பயணத்தின் கதைச்சுருக்கத்தை.
பகுதிப் பெயரை வைத்துக்கொண்டு
அகக்கண்ணாடிநூலின் பல கரைகளைக் கடந்தபின்
தட்டுப்பட்டது துண்டுத்தாளடங்கிய புட்டி யொன்று.
லீலா என்று எழுதப்பட்டிருந்தது.

லீலா  தேவி?. வினோதனி?. தயாகரி?
வதி? க்‌ஷி? ஸ்ரீ? தாம்ஸன்? பாபு? பிரபாகர்?

மாலா மூர்த்தி யென்றொரு பெயரின் சுவடுகளை
அடியொற்றிப் போனதில் கிடைத்த பெயர்
லீலா வீர்
ஓர் உறவிலிருப்பதாய்
அறிமுகம் பகர
அகர முதலாய் ஃன்னா வரை
பரவியது
வலியா நிவாரணமா என்றுணரலாகாச் சரிவில்
உருண்டோடும் என்னை யென்றும்போல்
துரத்திவரும் உறக்கத்தின் மறுபெயர் பரிவு.




*


No comments:

Post a Comment