Thursday, March 24, 2016

முற்பகல் செய்யின்…… ரிஷி

(21, மார்ச், 2016 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை)

முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி
முப்பது நொடிகள் மட்டுமே…..
ஏன் மறந்துபோனாய் பெண்ணே!
விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை
யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் கிழித்தாய்.
இலக்கியவெளியில் இருக்கவே யாம் லாயக்கற்றவர்கள் 
என்று  எப்படியெப்படியெல்லாம் எத்தித்தள்ளினாய்.
(அத்தனை ஆங்காரமாய் நீ மிதித்துக்கொண்டேயிருந்ததில்
உன் கால்கள் சேதமடைந்துவிடுமோ என்றுகூட
சமயங்களில் கவலையாக இருந்தது எனக்கு.)
என்னவெல்லாம் கூர்கற்களைத் தேடித் திரட்டிக் குறிபார்த்து
எம் மேல் வீசியெறிந்துக் கெக்கலித்தாய்.
அன்னாடங்காய்ச்சிகளாயிருந்தாலும் எம்மை 
ஆதிக்க ஆண்டைப் பன்னாடைகளாக்கி
எப்படியெல்லாம் துன்புறுத்தினாய்.
நீ யிசைப்பதே நாதம், யாம் வாயைத் திறந்தாலே சுருதிபேதம்
என்று நாட்டாமைக்கெல்லாம் நாட்டாமையாய்
என்னவெல்லாம் அநியாயத்தீர்ப்பு வழங்கினாய்…
அப்படி யிப்படி யில்லாமல்
தப்படி வைத்து வைத்து இத்தனை காலமும் அத்தனை
தெனாவெட்டாய் ஆட்டம் போட்டாய்.
கத்தியின்றி ரத்தமின்றி யுன் சகபயணியரை
கருங்குழிக்குள் தள்ளிக் காணாதொழிக்கப் பாடுபட்டாய்.
தன்பாட்டில் பயணமாகிக்கொண்டிருந்தவர்களை 
வன்ம நஞ்சு தடவிய வார்த்தைகளால் 
குத்திக் கிழித்துக் காலொடித்து
அவர்களின் கையறுநிலையைக் கிரீடமாகத் 
தரித்துக்கொண்டாய்.
ஆணாதிக்கம் தொடங்கி நானாவிதமான 
எதிர்மறைச் சட்டகங்களுக்குள்
எம்மை ஆணியறைந்து கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்
காறித்துப்பினாய் மொந்தையாக்கப்பட்ட 
எம் மூதாதையர் முகத்தில்.
எம்மையெல்லாம் அவசர அவசரமாய் 
அந்தகாரச் சிறைக்குள் தள்ளி
ஆட்சிபீடத்தில் உன்னை வெகு கவனமாக 
அமர்த்திக்கொண்டாய்.
உளறல்களை உத்தரவுகளாய் 
உச்சாடனம் செய்துவந்தாய்…..

இதோ அந்த இடைநொடியின் பிரிகோடு 
மறைய ஆரம்பித்துவிட்டது.
அடுத்தவர்களின் மீது நீ எறிந்த கற்களின் வலியை
நீ அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது.
அறத்தின் கூறுகளை சாதியின் பெயராலான, 
சாதிக்கப்பாலான
ஏதொரு ஆதிக்கவெறியாலும் 
வேரறுக்கவியலாது.
இன்னுமா புரியவில்லை உனக்கு?




No comments:

Post a Comment