Thursday, March 31, 2016

தூக்கத்தின் விழிப்பு….’ரிஷி’

’ரிஷி’யின் கவிதை

தூக்கத்தின் விழிப்பு….


1.

இடையறாது நடந்துகொண்டிருக்கும் கண்ணாமூச்சிவிளையாட்டின் இருவராய்
நானும் உறக்கமும்.
சில சமயம் குட்டிக்குழந்தையாய் என் கையைப் பிடித்திழுக்கும்;
சில சமயம் கழுகாய் ஒரு கவ்வு கவ்வி யெடுத்துச் செல்லும்.

சில சமயம் ஒரு கவிதை வரி புலிவாலாய்
மனதில் சிக்கிக் கொள்ள
விலங்கின் தலை யுறக்கத்தின் பேரலையில் எங்கோ
சுழற்றியடிக்கப்பட்டு வீசியெறியப்படும்.

சமயங்களில் நட்பாய், சமயங்களில் பகையாய்
செல்ல அணைப்பாய், வன்புணர்வாய்
கருணைத் தேவதையாய்
காட்டரக்கனாய்
பாட்டிலடங்காப் பொருளாய்
புறக்கணிக்கவியலா உறவாய்…..

சரிபாதியாய் என் நீள்வாழ்வைக் குறுக்கிச் செல்லும்
உறக்கம்
எனக்குள் பெருவாழ்வு வாழவைத்துக்கொண்டிருக்கிறது
நானறியாத நானை!


2
இன்றெனை யிதோ துரத்திக்கொண்டிருக்கும் உறக்கத்தின் பிடியிறுக்கி
நான் சிலமணிநேரச் சவமாகிப்போகுமுன்
சொல்லிவிடவேண்டும் என் பயணத்தின் கதைச்சுருக்கத்தை.
பகுதிப் பெயரை வைத்துக்கொண்டு
அகக்கண்ணாடிநூலின் பல கரைகளைக் கடந்தபின்
தட்டுப்பட்டது துண்டுத்தாளடங்கிய புட்டி யொன்று.
லீலா என்று எழுதப்பட்டிருந்தது.

லீலா  தேவி?. வினோதனி?. தயாகரி?
வதி? க்‌ஷி? ஸ்ரீ? தாம்ஸன்? பாபு? பிரபாகர்?

மாலா மூர்த்தி யென்றொரு பெயரின் சுவடுகளை
அடியொற்றிப் போனதில் கிடைத்த பெயர்
லீலா வீர்
ஓர் உறவிலிருப்பதாய்
அறிமுகம் பகர
அகர முதலாய் ஃன்னா வரை
பரவியது
வலியா நிவாரணமா என்றுணரலாகாச் சரிவில்
உருண்டோடும் என்னை யென்றும்போல்
துரத்திவரும் உறக்கத்தின் மறுபெயர் பரிவு.




*


Thursday, March 24, 2016

முற்பகல் செய்யின்…… ரிஷி

(21, மார்ச், 2016 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை)

முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி
முப்பது நொடிகள் மட்டுமே…..
ஏன் மறந்துபோனாய் பெண்ணே!
விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை
யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் கிழித்தாய்.
இலக்கியவெளியில் இருக்கவே யாம் லாயக்கற்றவர்கள் 
என்று  எப்படியெப்படியெல்லாம் எத்தித்தள்ளினாய்.
(அத்தனை ஆங்காரமாய் நீ மிதித்துக்கொண்டேயிருந்ததில்
உன் கால்கள் சேதமடைந்துவிடுமோ என்றுகூட
சமயங்களில் கவலையாக இருந்தது எனக்கு.)
என்னவெல்லாம் கூர்கற்களைத் தேடித் திரட்டிக் குறிபார்த்து
எம் மேல் வீசியெறிந்துக் கெக்கலித்தாய்.
அன்னாடங்காய்ச்சிகளாயிருந்தாலும் எம்மை 
ஆதிக்க ஆண்டைப் பன்னாடைகளாக்கி
எப்படியெல்லாம் துன்புறுத்தினாய்.
நீ யிசைப்பதே நாதம், யாம் வாயைத் திறந்தாலே சுருதிபேதம்
என்று நாட்டாமைக்கெல்லாம் நாட்டாமையாய்
என்னவெல்லாம் அநியாயத்தீர்ப்பு வழங்கினாய்…
அப்படி யிப்படி யில்லாமல்
தப்படி வைத்து வைத்து இத்தனை காலமும் அத்தனை
தெனாவெட்டாய் ஆட்டம் போட்டாய்.
கத்தியின்றி ரத்தமின்றி யுன் சகபயணியரை
கருங்குழிக்குள் தள்ளிக் காணாதொழிக்கப் பாடுபட்டாய்.
தன்பாட்டில் பயணமாகிக்கொண்டிருந்தவர்களை 
வன்ம நஞ்சு தடவிய வார்த்தைகளால் 
குத்திக் கிழித்துக் காலொடித்து
அவர்களின் கையறுநிலையைக் கிரீடமாகத் 
தரித்துக்கொண்டாய்.
ஆணாதிக்கம் தொடங்கி நானாவிதமான 
எதிர்மறைச் சட்டகங்களுக்குள்
எம்மை ஆணியறைந்து கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்
காறித்துப்பினாய் மொந்தையாக்கப்பட்ட 
எம் மூதாதையர் முகத்தில்.
எம்மையெல்லாம் அவசர அவசரமாய் 
அந்தகாரச் சிறைக்குள் தள்ளி
ஆட்சிபீடத்தில் உன்னை வெகு கவனமாக 
அமர்த்திக்கொண்டாய்.
உளறல்களை உத்தரவுகளாய் 
உச்சாடனம் செய்துவந்தாய்…..

இதோ அந்த இடைநொடியின் பிரிகோடு 
மறைய ஆரம்பித்துவிட்டது.
அடுத்தவர்களின் மீது நீ எறிந்த கற்களின் வலியை
நீ அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது.
அறத்தின் கூறுகளை சாதியின் பெயராலான, 
சாதிக்கப்பாலான
ஏதொரு ஆதிக்கவெறியாலும் 
வேரறுக்கவியலாது.
இன்னுமா புரியவில்லை உனக்கு?




Monday, March 7, 2016

அடியாழ உள்வெளி - ’ரிஷி’

  அடியாழ உள்வெளி
(13.03.2016 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை
’ரிஷி’


கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை
ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில்
வரவான கையறுநிலை
அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக…..

      
 லையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும்
இந்தத் திறவுகோலை.
வீடே யில்லையென்றான பின்பும்
இதையேன் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது என் கை?
அறிவுக்கும் மனதுக்கும் இடையறாது நடந்துகொண்டிருக்கும்
இந்தப் போட்டியில்
வெற்றிக்கம்பத்தின் எதிர்முனை நோக்கி நான் ஓடியவாறு…..

      
பெருவலியினூடாய் புன்னகைத்துக்கொண்டிருந்தேன்.
கல்தடுக்கிக் கால்கட்டைவிரலில் மின்னிய ரத்தச்சொட்டு
என்னவொரு நிவாரணம் என
எண்ணாதிருக்க முடியவில்லை.



ரு நெகிழ்வில் நக்கிக்கொடுத்ததால்
என்னை நாயென்று பொருள்பெயர்த்துக் கொள்பவர்க்கு
குனிந்து கல்பொறுக்கும் சிரமத்தைத் தரலாகாதென்று
சிறகுவிரித்துயரே பறந்துசென்றுவிட்டேன்.

    
ன் பாட்டில் மொட்டைமாடியில் நின்று அண்ணாந்து பார்த்தவண்ணம்….
அந்தப் பறவை அத்தனை அற்புத வண்ணத்தில்
ஒரு சிறகிழையை உதிர்த்துவிட்டுத் தன் வழி சென்றது.
காற்றில் சுழன்றிறங்கும் அது என் கால்களின் பரப்பெல்லைக்குள்ளாய்
விரிந்த என் கைகளுக்குள் வசப்படுமோ?
விக்கித்து நிற்கிறேன்.

   
நேற்றும் இன்றும் நியமப்படி நீர் வார்த்தாலும்
நான்கைந்து நாட்கள் விட்டுப்போனதில் பட்டுப்போன செடிகள்
துளிர்விட மறுக்கின்றன.
இல்லை, இது இளைப்பாறும் பருவமோ?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் பேதைமனம்.

    

லமுறை வாசித்தும் தீராத புத்தகத்தின் பக்கமொன்றில்
பொடிந்த சின்னஞ்சிறு இலையொன்று கிடந்தது.
ஒருவேளை என் மூச்சால் அதை மீண்டும்
பசுமையாகத் துளிர்க்கச் செய்ய முடியுமோ என்னவோ….
முயன்று பார்க்க பயமாயிருக்கிறது.



ந்தப் பூனைக்கு என்ன வயதிருக்கும் தெரியவில்லை.
குடியிருப்பு வளாகமெங்கும் நீர் சூழ்ந்த நேரம்
தன்னந்தனியாய்த் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியது.
ஜன்னலிலிருந்து முருங்கை மரத்திற்கும், மரத்திலிருந்து மொட்டைமாடிக்கும்
அது தாவிய தாவல்……… அம்மாவோ!
அதன் மூக்கில் பல நாட்களுக்கு ரத்தக்கறை இருந்தது.
தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் தனதொரு கண் பார்வையைப்
பறிகொடுத்துவிட்டதுபோலும்.
பலவீனமாய் ”மியாவ்” வெளிப்படுகிறது.
தினமொரு முறை, பக்கத்துவீடு பூட்டியிருக்கும் சமயமாய்ப் பார்த்து
அத்தனை நம்பிக்கையோடு எனக்காய் குரலெழுப்புகிறது.
தரும் பாலை யருந்திவிட்டுத் தன் வழியே போய்விடுகிறது.
தலையை வருடித்தா என்று ஏங்கிப் பார்க்காத
அதன் சுயமும் தன்மானமுமாய்  _                                       
பூனையை எனக்குப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது
தூலமாகவும், குறியீடாகவும்.



      





     









Friday, March 4, 2016

HEROISM - rishi

HEROISM
                                rishi
“Call me anti-national”
_ cries hoarse a pseudo – intellectual
thirsting to be in the limelight;
to become a revolutionary overnight!

The world moves on unperturbed.
Its daily routine which they call mundane
is utmost essential for safeguarding
humanity’s safe zone.

Poor lass
(fool of an ass)
Having a wide, flat rubber-band
around her forehead,
with the word ‘firebrand’
She keeps hopping from land to land
daydreaming that she could,
just by uttering the two words
‘Magic’ , ‘Wand’
Create one out of sand!

Alas,  all she could manage to do was
leading a no-man procession always!

Frustration accumulated thus
turning her violent,
the female sets afire her children
in her poem stillborn.


WORD BUILDING - rishi

         WORD BUILDING 
rishi                                                                         

F E V E R _

Real fever alone can be
real fever
For ever….

Therefore
Rever the real…..

On the eve of fever
Or right in its eye…?

Remember
Eve too has a before and after.
No matter She or Day.

Fee for falling in love
Is the fitness to face indifference;
Swallow it all in silence.

The ‘We’ sounding ‘Ve’
Though not a word
Highlights the façade of ‘Oneness’.

Ere can or cannot replace
Before; afore….

Alone on the seashore
With the help of words
I keep building legs

To walk on water….

வாசகப் பிரதி - ரிஷி


வாசகப் பிரதி


ரிஷி




ஊரில் புதிதாய்த் திறந்திருக்கும் பிரம்மாண்ட 

நகைக்கடைக்குத்

தன் தாயை அழைத்துச் சென்ற மகள்

அவளுக்குத் தங்க வைர அணிகலன்களை 

வாங்கி அணிவித்து

அப்படி அழகு பார்த்தாளாம்!

குரல் தழுதழுக்கப் பீற்றிக்கொண்டாள் பெண் -

அந்த விளம்பரத்தில்.


அந்தத் தாயின் கண்களில் ததும்பும் 

கண்ணீரும் புன்னகையும்

பொன்னகையால் அல்லபோனால் வராத 

இளமையின்பால்கொண்ட

தீராக் காதலால் என்று

பாவம், அவளுக்கும் தெரியவில்லை,

அந்த விளம்பரதாரருக்கும் தெரியவில்லை.



புரியும்போல் கவிதை…..ரிஷி

புரியும்போல் கவிதை…..


ரிஷி


அனா,  ஆவன்னா,  இனா  ஈயன்னா  உனா

ஊவன்னா  

ஏனா  ஏயன்னா ஐயன்னா  ஃன்னா….

ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா

உர,  ஊதா,  எர,  ஏற,  ஐய,  ஃப்பா  இல்லை

யென்ற கேள்வியின்

எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு

செல்கையில்

எதிரே வந்த சிறுமி

உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப் 

 பிய்னடிக்குமா?”

என வினவிச்

சென்றாளே, சென்றாளே….