Saturday, May 3, 2014

ஒலிக்குமா நீதிமணி? - கவிதை


ரிஷியின் கவிதைகள்

1.  ஒலிக்குமா நீதிமணி? அல்லது சுரண்டலின் பரிமாணங்கள் அல்லது பகற்கொள்ளைகள் பலவிதம் அல்லது ஒரு பிழைப்புவாதியின் கையில் மொழிபெயர்ப்பு அல்லது……







’மூத்திரம் குடித்து மலம் உண்டது பூதம்’ என்று முடித்து
கிச்சுகிச்சு மூட்டி குழந்தையை சிரிக்கவைக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது கதை.
பெரியவர்களின் பகற்கனவுகள் அல்லது மனவக்கிரங்களே
பிள்ளைகளுக்கான கதைகளாகிவிடுகின்றன பெரும்பாலும்.
சுத்தம் சுகாதாரம் சிதைத்து சிரிக்கவைக்கப்பார்ப்பது சரியல்ல என்றேன்.
மனம்போல் மாற்றிக்கொள்ளுங்கள் மொழிபெயர்ப்பாளரே என்றார்.
மகா கம்பீரமாய்.
குழந்தைக் கதைகளாயிற்றே என்று அரைக்கட்டணத்திற்கு மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டேன் ஆங்கிலத்தில்.
மின்னஞ்சலில் அனுப்பித் தந்து மூன்றுவருடங்களாயிற்று.
மிச்சக்காசு இன்னும் வந்துசேரவில்லை.
கேட்கும்போதெல்லாம் உடல்நிலை சரியென்றும் நிதிநிலை சரியில்லையென்றும்.
நாகூசாமல் [பொய்] சொல்லிவந்தவர்
நாளடைவில் கைபேசியில் சிக்காமல் நழுவிப் போனார்.
ஒருவழியாய் வலைவீசிப் பிடித்தபோது
வேறு கதை எழுதியிருக்கிறீர்களே என்று எகத்தாளம் பேசினார்.
உங்கள் மொழிபெயர்ப்பு பழுது என்றார்.
இன்னமும் மிச்சத்தொகைக்காய் நான் இலவுகாத்த கிளியாய்
நீதிமணியை ஒலிக்கச்செய்துகொண்டிருக்கிறேன்.
நின்றுகொல்லவாவது வேண்டும் தெய்வங்கள்..



(*ஏப்ரல் மாத திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)

No comments:

Post a Comment