Saturday, May 3, 2014

1. மின்னஞ்சலில் முக்கிய(?)ச் செய்திகள் அனுப்பித்தந்து கொண்டிருப்பவருக்கு…

ரிஷியின் கவிதைகள்

1.  மின்னஞ்சலில் முக்கிய(?)ச் செய்திகள் அனுப்பித்தந்து கொண்டிருப்பவருக்கு…

மன்னிக்கவும்.
’மிக்க நன்றி’ என்று சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.
இன்றுவரை அரைக்காணி நிலமும் சொந்தமில்லை தான்
என்றாலும்
செய்தித்தாள் வாங்காதிருந்ததில்லை யொருநாளும்.
நடுநிலைச் செய்திக்காய் நாலு வாங்கும் நாட்களும் நிறையவே உண்டு.
கணினி இயக்கத்தில் மேதையில்லை எனினும்
‘கூகுள் சர்ச்’ தெரியாத அளவு பேதையுமில்லை.
கூடவே, யாரனுப்பும் செய்தியின் உள்நோக்கத்தையும் பொருள்பெயர்ப்பதும்
காலத்தே கைவந்த கலையாகிவிட்டது.
கண்டந்தோறும் நடந்துகொண்டிருப்பவற்றையெல்லாம் கணத்தில் கொண்டுவந்துசேர்க்கும் தொழில்நுட்பங்கள்
நம்மைச் சுற்றி நிறைய நிறைய.
தெரியும்தானே உங்களுக்கும்.
அலைபேசியில் கூட வளவளவென்று பேசப்பிடிப்பதில்லை.
சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.
நீங்கள் சொல்வதற்கெல்லாம் ’ஓ!’ போடச் செய்து
என் அறிவை விருத்திசெய்யும் பிரயத்தனத்தில்
தலையும் வாலும் அற்ற ‘முண்ட’ச் செய்திகளைத்
திரும்பத் திரும்ப மின்னஞ்சல் செய்து
என் ‘செல்ல’ ஸ்பாம் பெட்டியை வீங்கிப் புடைத்து
வெடிக்கும்படி செய்துவிடாதீர்கள்.



No comments:

Post a Comment