Sunday, June 17, 2012

எனக்குப் பிடித்த என் கவிதைகள்! [1] - ரிஷி


எனக்குப் பிடித்த என் கவிதைகள்! [1]

ரிஷி

[முதல் தொகுப்பு-அலைமுகம்]











1.     மூன்றாவது நதிகளுக்கு...!

ஒவ்வொரு அசைவிற்கும்
உள்ளலை கொள்ளும் வைரப்பளீரிடலாய்,
காற்றை வாரியணைக்கக் கரங்களில் பெருகும்
காட்டாற்றுத் தினவாய்,
உடைந்துவிடாதபடி குமிழ்களை
அடைகாத்துக்கொள்ள
கடுந்தவமியற்றும் மனதின் காலாதீதமாய்,
அசந்த நேரத்தில் வசப்படுத்திவிட்ட இந்த

உயிர்ப்பின் ரஸவாதத்தை

ஊமையாய் சுமந்துகொண்டிருக்க முடியவில்லை.
உரக்கப் பாடவேண்டும்.
கண்டம் கானாமிர்தமாய்
காடுமலை மேடெல்லாம் கரைந்துருகப்
பாடிப் பரவ வேண்டும்...
அண்டசராசரமும் காண
ஆனந்தக்கூத்தாட வேண்டும்.
வரவேற்பிற்கும் பிரிவுபச்சாரத்திற்கும்
இடைநிரம்பியது வாழ்க்கை.
வழியில்
ஆறவதிலோ அடுத்த  மரத்திலோ
எனக்கான அம்பு.
அழியு முன்
என் உயிர்க்கோலப் புள்ளிகள்
கோடுகளையெல்லாம்
கொண்டாடிவிட வேண்டும்.
உன்னையும்...
அனந்தேட்டா!

அறிய மாட்டாய் என்னை.
அதனாலென்ன?
ஹாம்லெட்டுக்கும் தெரியாது.


2.கோனார்களுக்கு


பொருளகராதியேறிப் புறப்பட்ட அம்மணக் கோ

பறவைப் பரிபாஷைக்குப் பதவுரை யாக்க
விரியத் திறந்தான் வெறுங்காதை.
நிரம்பியது புரியாமை.
பெருங்கோபமாய் அண்ணாந்து வில்லிழுக்க
உறுகாயமேதுமின்றி புள்
பறந்தது உயருயரே.
போகட்டும், பறவை பேசுமோ?” என்றான்.
பரிவாரங்கள்  “அதானேபோட
பேசாதது பாடுமோ?” என்றான்.
பின்னும் படை தலையாட
புரையோடும் வெறியில்
பார்வை மீறிய பறவையே பொய்யெனப்
பகர்ந்தவனைப் பாராமல் வெளிஅரவித்
திரியும் களிபறவைக்கு
கண்டம் காணிநிலம்!


3.கவித்தடம்

புரவியின் குளம்போசை
பெறாப்பெரும் பேறாய் வெகு அருகில்
கேள்பொழுதில்
காதடைக்க கண்மயக்க நான் சரிந்த
முட்பரப்பைத்
துப்புரவாக்கும் அருவக்கைகள்
முனையெல்லாம் துருநீக்கி யுருவேற்றும் போர்க்கூர்.
தப்ப முடியாமல்
நாணிழுப்பவன் கணையெல்லாம் சொல்
சொல்லனைய
ஆன மட்டும் தாங்கிய ஊனுருகியிறுகி
அணையப்
பெறும் வலி வானமுதம் போல்...
உறக்கத்திற்கும், சாகாடிற்குமிடை
ஊசலாடி
கயிறறுந்த போதத்தில் கண்டதென்ன?
கவியிருளில் தொடர் குளம்போசை.
அறிவறியும்_
அம்மணராஜாவாயிருக்க லாகாது
ஆரோகணித்திருப்பது.
வால்பிடித்தேனு மேக
வெளி நீளும் கை வலுவற்று.
வழுவழுக்காயம் பரவ
காட்டுத் தீ உயிர் பற்ற
பனிமனிதன் வழித்தடங்கள்
காணக் கிடைக்கு முன்
கண்மூடலாகாது.
கற்க வேண்டும் இனியேனும் ஓசையின் பாஷை.



குறுங்கவிதைகள்

4. தபசி


 மோனத்தவம் தினம்.
மனக்கால்கள் இற்றுக் கனக்கின்றன.
புற்று சுற்றிலும்...
முற்றுமறிந்து மறந்தாரை கடிக்காது சற்றும்.
கடித்தாலும் கடுக்காது.
இங்கே இரண்டும், பிறவும்.
குறிக்கோளற்றதாலோ?
அறியப்படாதது அற்றதாமோ?
[எதிரே வந்துவிட்டால் எதைக் கேட்க?]
அறியப்படுமோ? அரைகுறையாகவே
புரிந்து விடுமோ?
அறியாததே வரமோ?

5. இரண்டற...


 தேகத்தைத் தனியாக்கத் தான்
தூரத்தே கோட் ஸ்டாண்ட்இல் மாட்டத்தான்
நாட்டம்...
எனில், ஜுரம் வந்தால் சுரமிறங்கி
புதிதுடுத்தால் குதூகலித்து
காவியக் காதலிலும் கரங்களும் பங்கெடுத்து...
எருவும் தருவுமாய் இரண்டும்.
எரு தரு அவரவர் விருப்பப்படி.

6. அடைந்தது


 மேகத்தை மனம் தொட எண்ணினாலும்
தேகத்திற்கு சம்போகம் மண்ணோடுதான்.
தொடக் கிடைத்த மேகமும்
விரலிடுக்கில் கசிந்து போகும்.
ஏகமாய் விழைவெதற்கு?
சாகும் வரை பூமி சாசுவதம்.


7. கடை


தினமுமாய் அந்தக் கடைப்பெயர்
கண்ணுக்கு இடம்பெயரும்.
பெயர்க்காரணம் அறிய
வியர்வைப் பெருக்கும் மனம்.
படிதாண்டிப்போய்க் கேட்கப்
பிடிப்பில்லை.
வினவாதவரை விடைகள் ஆயிரம்!

8.நிவாரணி


மெய்யாய் உள்ளங் கையை முகர
பழ வாசம் பரவும் சுகமாய்...!
வலி யடித்து யிர் துடிக்கையில்
யாசகமாய் அவ் வாசகத்தை உள் பேச_
இல்லாதது போலிருக்கும் வலி

[இன்னுமுண்டு]


என் கவிதைகளில் எனக்குப் பிடித்தவை! [2]

ரிஷி

[முதல் தொகுப்பு-அலைமுகம்]


 9.மண்ணில் தெரியுது வானம்!

நானும் நினைத்திருந்தேன்_
நிலம் நோக்காத் தலையனாய்
நேர்ப்பார்வையாய் நடப்பதே நேரியதென்று...
நடந்து நடந்து கழுத்து விறைத்துக்
குடைந்தது!
நேர்ப்பார்வையா தார்ப்பாதை தூரத்தே....
தரைநோக்கினும் அதே பாதை
அருகே.
கண்களும் உதடுகளும் கன்னம் பற்கள்
நுதலுமாய்
விழிகளில் நுழையும்
நழுவும் இதயங்கள்.
நேர்ப்படுவதும் முழுமையற...
பார்வையை மண்சேர்த்தேன்.
விரைத்த கழுத்தின் வலிகுறைந்தது.
தரை யுறவு வரவாகியது.
இறைந்திருந்த எண்ணங்களை இருகைகொள்ளாமல்
பொறுக்கியெடுத்தபடி விரையத் தெரிந்தது!


                                           10. விழல்


அந்த என் வரிகளெலாம்
அந்தந்த நேரத்து மெய்த்துளிகள்.
அள்ளிச்சேர்த்தால் கடல் பெருகும்.
காலத்திற்கும் முத்துக்குளிக்கலாம்.
நீயோ_
லோட்டாக்களில் கூறுபடுத்திக் கடைவிரித்தாய்.
பட்டுப்பூச்சியைக் காட்டிச் சிரிக்கும்
பிள்ளைப்பரவசமாய்க் கொள்ளமுடியாதபடிக்கு
கூவும் உன் பலசரக்குக் குரல்...
குடித்தவர்கள் கரிக்கிறதெனக் கூறிச்
சென்றிருப்பார்களாயிருக்கலாம்...
அன்பை பூதங்காக்க ஆன்ம பலம் வேண்டும்.
அம்மணமாக்கித் திரியவிட்ட உன்
நீர்மை
மலையேற்ற முடிவில் காலிழந்ததாய்...

11.சூரிய நமஸ்காரம்

நைந்த கறுப்பு பொம்மையாய் கிடந்தது அது_
கழிவுகளோடே
சாலையோரம் ஒரு சோகநாடகமாய்.
தெறித்தது எண்ணெய்க்கொப்பரை.
ஆக்டேவியா கணவன் கண்ணீரும்.
இதற்கு ஆறுமணிநேரம் கழித்து
நேற்று எங்கள் ஆற்றில் நெரடியது
பங்காளிபோல்.
தெரு இருளின் அணுவாய் முன்னால்
உருண்டெழுந்து நகர்ந்துகொண்டிருந்தது.
பீ மிதிக்காமல், வட்டக்கால் எருதுகள்
முதுகுபிளக்காமல், போர்த்திய திகம்பரராய்
கயிற்றரவின் மறுமுனையை எட்டும்வேளை
அம்மா சொன்னாள் அரைச்சிரிப்போடு:
அது அவ்வளவுதான்”.
அவ்வளவுதான். கதவருகே கையுள்ளே
குவிந்தது. அவ்வளவு தான்’.


                    12. அந்தரங்கம்

வத்திகள் வேண்டாம், வியர்வை நாற்றமெடுக்கும்.
மலர்தூவலாகாது, ரணபூமி நினைவுறுத்தும்.
யாரையோ காட்டும் ஆடி தேவையில்லை.
அகற்றியாகிவிட்டது சுவரில் மாடியிருக்கும்
மரணத்தின் சிரிப்புகளையும்.
காலப்பாழுக்குள் வீழ்த்தி கண்ணழிக்கும்
கடிகாரம் காணாமல் போகட்டும்.
அழுத்தமாக மூடிய ஜன்னல்களும்
கதவங்களும் கூடிய
அத்துவானக்காட்டில்தான் நம் கடிமணம்.
நேற்றும் நாளையுமற்று நான், நீ மட்டும் இங்கு....
இதில் எங்கிருந்து ஊடுருவின
கத்திமுனைக் கீறல்களா யிக் கண்கள்?
எங்கிருந்து கமழ்ந்து கூசவைக்கிறது
நாற்சந்திவாசம்...?



13. புயல்கரையொதுங்கியபோது

கவசகுண்டலமழிந்த அந்த காய்ச்சல் நாட்களில்
புகலறியா வியூகம் சிக்கி
கதிர்வீச்சுகள் சுக்குநூறாக்கிய
நிராயுதனாய்
அம்புப்படுகையின் மேல் அழுதிருந்த பொழுது
போய்
இன்று மழையோய்ந்த மௌனத்தில்
நோய்மீண்ட உடல்.
கைதோளுக்கிடியே கடல்வெளி.
நடப்பது மிதப்பதாக
வடிவழிந் தேக
என் நிழலே போல் வளையவரும் நான்.
மெல்ல வடியும் மரணபயம்.
என்றாலும்
படுத்தே கழித்த பத்துநாள் பரோல்
போகவேண்டிய சிறை
களிச்சோறன்ன பிற
இடியுறையும்
மண்டைச்சூடு மாத்திரம் மாறாமலே.


                               14. பதிவு


மேலே போயாகவேண்டும்.
பின்னோடு வந்ததை கைகருக எடுத்துக்
கிடத்தினே நொரு ஓரமாய்.
நாளடைவில் அதன்மேல் அப்பிக்கொண்டது
புழுதிப்படலம்.
தட்டுமுட்டு சாமான்கள் அடுக்கப்பட்டன.
ஊசிமுனை துளைக்க உயிர்கசியும் வேளைகள்
மழுங்கின.
தடுக்கிவிழும் பயமற்று நடைபழகிற்று.
சுவடழிந்ததாய் சுற்றிலும் ஒரு சாந்தி...
சமயங்களில் துழாவிப் பார்க்கப் புகும்
கரங்களில் திணிப்பேன்
சோற்றுமூட்டையை.
இன்று இருந்தாற்போலிருந்து வீசிய
ஊழிக்காற்றில்
புழுதி பறக்க, பொரு ளுருண்டு சிதற
ஆழத்தில் கண் திறந்தது
சீழ்பிடித்த கபாலம்.

குறுங்கவிதைகள்


15.உள்ளளவும்


நேர்க்கோடாய், நெளிவளந்தும்
சிறுதுகளாய் விரையும் எறும்பு
இரைதேடி_
தரையழுந்தும் பாதங் கீழ்
குரலெழும்பாது பிரியு முயிர் தாங்கி.

16.வயதின் வயது


காமிக் கிடைக்க
குழந்தையாகி
கனவில் நினைவில்
கிளர்ந்தி ளமையாகி
மனங் கனக்க
மூப்புணர்ந்து _
வயோதிகமென்பது வயதா?

17.எல்லை


காணும் பெண்ணையெல்லாம்
சோதரியாய் பேண இயலாது;
போலவே_
காதலியாய் காணலும்.

18.ஈவு


சகலமும் இங்கே சுலபந் தான்
ஆரவாரமற்றிருத்தல் தவிர,
அன்பைச் சுரண்டாப்
பெருந்தன்மை தவிர,
தன்னைப் பிரகடனம் செய்யாப்
பேராண்மை தவிர,
அன்ன பிற தவிர தவிர.

19.பிரிவாற்றாமை


ஒரு புதன் வருவதாய்ச் சொன்னாய்
புதன்கள் பல கடந்தோடிவிட்டன.
உன் வருகை நிகழவில்லை.
வாடும் மனம்_
வந்துபோன புதன்கள் இனி சொந்தமாகாதே என்று.


20. நனவோடை


இருக்கச்சொல்லியிருந்தால் இருந்திருப்பேனோ...
வருந்தியிருக்கப்போமோ இருவரும் பின்...
நிறைவில் கறை கூடாதென்றா
விடைகொடுத்தாய்?
நினைப்பாயோ என் மனதால்....?
நீ இருக்கச்சொல்லவில்லை.
நான் இருக்கவில்லை.


21. கண்கட்டி....


விரைந்து நடக்கையில் மறைவிருந்தொரு கை
சொடுக்கி யிழுக்க
மடங்கி மந்தொடும் உடல்....
அடியினும்
அடையாளங் காண லாகா
வலி அதிகமாய்...

22. மோனம்


முகர முடியும் நாசியுள் ளோடி
நாளமெலாம் நிரம்பிப் பரவும்
வாசமாய்
நிசப்தம்.
ஆளலைக்கலாகா நீர்த்தேக்கமாய்
அடிமனதில் நிர்மலம்.
அரைக்கணத்தில் ஒரு மறுபிறப்பு.
அருகாய் அடுத்த கல்.

23. வயது


குழந்தையோடு குழந்தையாய் குழலூதினேன்.
கோலிவிளையாடினேன்.
மழலையில் குழறி அழுதேன்.
சொரசொரத்த தரையில் முழங்கா லுராய
முட்டுக்குத்தினேன்.
கட்டிலுக்கடியில் குஸ்தியிட்டேன்.
மாடோட்டினேன்; மணல் வீடாக்கினேன்...
குழந்தை வளர்ந்துவிட
திரும்பவும் கிழவனாகினேன்.

24. என் வழியே


தனியனாய் உணரும் தருணங்கள் உண்டென்றேன்.
இணையிருந்தால் இராதென்றார்.
துணையுண்டென்று சொன்னேன்.
மணந்தாயிற்றா என்றார்.
உள்நானைச் சொன்னேன் என_
பிரிந்தாயோ உறவை எனப் பரிகசித்தார்.
உரைக்க பதிலுண்டு; இருக்கும் கேள்விகளும்....
சன்னமாய் சிரித்து முன்னேறினேன்.

25. கொள்கலம்


ஆளரவ மற்ற அந்தி வனாந்திரத்தில்
தளதளத்துப் பெய்த தொரு மழை யெனக்காய்.
கனியும் அன்பில் ஆனபோதும்
நனையாத ஊனும் உயிரும்
அனத்தும் தனக்குள்:
எதை உள்வாங்கவும் சில நிபந்தனைகள் உண்டுதான்’.
தூறலாகி நின்றுபோக
தொடருமொரு கேள்வியும்:
பொழிந்தது மெனக்காயோ? இல்லை
பருவத்தின் பயனாயோ...?’

26. காலப்பொருள்


மைக்களிம்பும் மருந்து வரிகளுமாய்
மடலொன்று வரக்கூடும்
என்றேனு மொரு தினம்...
இன்று ரணம்.

27. போகுமாறு


ஒற்றையடிப்பாதையில் பிரயாணம்
நாளூர்களினூடாய்.
வார்த்தைச் சில்லறைகள்
வழிச்செலவுக்கு.
ராத்தங்க சில மனங்கள்.

28.நிறமாலை


பின்னும் கனத்த போர்வையை
தொங்கவிடுகிறேன்
எனக்கும் நினைவுக்கும் இடையே.
பழகும் விழி யிருள் வழியின்
திரை யூடாய்த் தெரியும்
சொப்பன வேலைப்பாடுகள்!

29.வேலியேற்றம்


பாதம் தொட்டுப் போகும் அலை சில
சுரீரென பூமி சாய்க்கும்.
ஏதலை யேனும் என்னை
விழுங்கவேண்டும் முழுவதுமாய்.
ஓங்காரக் கள்வெறியில் நுரைபொங்கிச்
சுருளலைக்குள் சரியாதிருந்தவன் சிரித்து
நின்றுவிட்டான் நினைவுக்குள்.


எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 2

- ரிஷி

[*முதல் தொகுப்பு-அலைமுகம்]



30.அச்சும் பண்டமும்
சிந்துபாத் பயணம்
ஆக்டோபஸ் முதுகில்.
ஆயிரங் கால்கள் வருடுவதாயறைந்தபடி.
உயிரருகும்.
பலமனைத்தும் திரட்டி சில கால் பிரித்தெடுக்க
இறுக்கும் பிறசில.
அடி முதல்  முடி வரை படர் சாட்டை வரி
வடுவாயும், கசிந்தபடியும்...
சிரசில் பதிந்தொரு கால் நிரந்தரமாய்.
கண் தின்னும் மண்.
சூரிய சந்திரன் சதுரமா செவ்வகமா?
சரியாகாது நாணலாகிவிட்டதென்று
முதுகெலும்பைச் சொல்லுவதும்.
ஆற்றுப்போக்கில் ஆங்காங்குறும் சுமைதாங்கிகளில்
சற்றே சாய்ந்து
சிரம பரிகாரம் செய்யப்போக
தாங்கிக் கல் தாவி
முதுகேறியது.
ஆக்டோபஸின் மேல்
ஆக்டோபஸ்...
மேலின் மேலின் மேலின்....

31. மொழித்துவம்

நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை
கருப்பு வெளுப்பு மா பூ பலா
கண் மருந்து பால் ஈ புறா
அது இது எது எது
தினம் கணம் நிரந்தரம்
மரணம்
ஜனனம் புனரபி
ஸாம்ஸன் தலைமுடி
தகர்தூணுறு[ரு] வரு[று]
தேவ தரிசனம்!
தந்தீச்சுட ரொளிர்
தேஜோமயம்!
நிர்விசாரம் பெருகும்
விரிவெளிக் கதவருகாய்
இருகைப்புலிரோஜா சிரித்திருக்க
காற்றுக்கடிகாரம் கூறும்
நாளை படித்தாயிற்றென!
நிலவூறி யினிக்கும் நா!
நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!
நட்டதழிந்தோட ஓட
விட்ட இடம் விடியும்!
சிறுகாற் பெருவளத்தான் ஆட்சியில்
செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்
பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி
காணப் போதுமோ கண்கோடி?!

[சமர்ப்பணம்: குட்டித்தோழனுக்கு]


32. மனவந்தனம்

பாதிக்கிணற்றின் மேல் அந்தராத்மா பேதலித்த நாழி
காலடி பதிந்த மரப்பாலமாய்
காலந்தப்பாது வந்தடைந்ததுன் வாழ்த்துமடல்!
சாகரங் கடந்த அகர இகரங்களில்
சஞ்சீவிப்புதர்கள் செழித்திருந்தன பக்கங்களில்.
எழுதிய, எழுத்துக்கோர்த்த ஏராளங் கூடு பாய்ந்து
காடு மலை கடல் கடந்து
வரியிடை வரி வலம்புரிக்காய் மீண்டும் மீண் டும்
முழுகி மூச்சுத்திணறி நீயலைந்த கதை யுரைக்கும்
மெய் யுயிரெழுத்துக்கள் மிக நிறைய.
கடந்து வந்த பகலிரவுகளில் அதிர்ந்துதிர்ந்தது
எண்ணிறந்தது போக
இன்னமும் கனிந்த சுடராய் கூடவரும் நீ.
இரண்டனுப்பி யென்னைப் புரந்த காருண்யம்
எண்ண எண்ண
மயிலிறகின் சுமையேறிய வண்ணம்.
அச்சிறும் போல்...
பாரந் தாங்கலாற்றாமல் பதில் மரியாதை செய்யப்
பதறும் மனது.
வேறென்ன தரலாகும் _
ஒரு கற்றுக்குட்டிக் கவிதையைத் தவிர?

[சமர்ப்பணம்: தேவிக்கு]                                                                           


33. பதிலாகும் கேள்விகள்

எங்கிருந்து பிராணவாயு இந்தக் கண்ணாடிக்
கூண்டுக்குள்
எனக் கேட்பவர்களுக்கு
எப்படிப் புரியவைப்பது
வானம் நாற்புறமுமான திறந்தவெளி அரங்கிது
என்பதை?

அதிரும் செவிப்பறைகள் வேறாக
உள்மரச் சலசலப்புகளை உணர்த்துவதெவ்வாறு?

மாறும் தாகத்து மனிதர்களுக்கு
என் நதிநீர் கானலாகக் காண்பதில்
என்ன வியப்பு?

தனிமைச்சிறைத் தாழ்வாரங்களாய் தட்டுப்படுவது
உப்பரிகையிலிருந்து தாழப் பார்க்க
உன்னத ராஜா பவனிவரும் உற்சவச் சாலையாக
தெளிவதென்றுமக்கு?

நான் நீயாக நீ நானாக
நிர்பந்தம் யார் ஆக்கியது?

நியமங்கள் ஒன்றாய் ஏன்
நிறம் பலவாயிருக்க...?


34. ஆகுதி

மனதி ஒளிப்பாய்ச்சலுக்கு முன்
முட்டி போட்டு நடக்கும் உடல்
ஓடான மாடாக நுரைதள்ள
உட்பரவும் காட்டுத்தீயில்
வெளியெல்லாம் வெளிச்சக்காளியாக்கி
வியப்பும் பயமும் வார்க்கும்
ஓங்கி உலகளந்த ஜ்வாலையாய்
விரிதலையாடச் சிரித்தது அந்த வரி:
“தீக்குள் விரல் வைக்கும் சிரமம் தரலாகாதென்றா
எனக்குள் தீயை வைத்தாய் நந்தலாலா?!”
வரித்துச் சேர்த்தணைகும் பெருவிருப்பு
நெருப்பைப் படரும் பெருநெருப்பாய்...
ஆள்விழுங்கப் பார்க்கும் அடர்வெப்பம்.
சுவர் சித்திர படிமம் துரத்த
தூரம் போகிறேன்
உருக்குலையாமல் உலை புகுந்து மீளும்
தருணம் பார்த்தவாறு.


குறுங்கவிதைகள்

35.விடுகவிதை

ஒன்றிரண்டுமூன்றுநான்கு
ஐந்தொன்பதிருபதாங்கு
முக்கோடி முப்பத்து பூஜ்யம் சூழ
மூவேழுலகும் எட்டு மாறும்
வகுத்துப்பெருக்கிகூட்டிக்கழி
என்கணக்காகுமென்வழி


36. காணிநிலந் தாண்டி...

ஆறு கால்களும் எட்டு கைகளும் இருந்தால் போதும்
வாழ்வை நடந்து கைக்கொண்டு விட ஏலும் போலும்.
மறவாமல் இரு பாதை பிரியவேண்டும் பார்வை.
கண்ணிரண்டு கூட வேண்டும் பின்மண்டையில்.
விரல்கள் அதிகமாக, வாரக் கூடுமோ காலத்துகள்களை?
இரவல் மனம் இருபது  வேண்டும், ஒரு நாள்
இருபத்திநானூறு மணிநேரம் வேண்டும்...
இன்னும்.... இன்னென்னவும்... இன்னும்...


37.அடையாளம்

இந்தக் கைக்கடிகாரம்
நிச்சயம் என்னுடையதுதான்.
இன்றை நேற்றாக்கி நிற்கிறது.
என்றாலும், ஓரிரண்டு நிமிடங்கள்
அதிகமாயும்,
நேரங்காட்டுகிறது
மிகச்சரியாய்!
38.பறை

நானே வாள்சுழற்றி
நானே விழுந்துபட்டு
நானே அசோக பௌத்தனாய்
ஆங்கில மொகலரசர்களுமாகி
கால் மாற்றி நிற்பதாய் மாறி மாறி
வெற்றி தோல்வி பெற்றும் பெறாமலும்
வளரும் பெரும்போர் ஆளரவமற்று.
காற்றோடு கடிதமும் வீசுஜன்னல் களமாக.




39.தோற்றம்

காற்று வீசும்
சூரியவொளி வரும்.
மழைவெயிலுக்கு நிழலாய்
மேற்கூரை.
மனிதர்களுமுண்டு
சுற்றுப்புறத்தில்....
கதவும் சாளரமும் பக்கச்சுவர்களும்
தரைப்பரப்புமாய் _
வீடு போலவே இருக்கும் சிறை.

















No comments:

Post a Comment