Monday, March 16, 2026

'மியூஸிக்கல் சேர்’ - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மியூஸிக்கல் சேர்’

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



முதலில் வரும் முப்பது பேருக்கே
மியூஸிக்கல் சேரில் பங்குபெற
முடியுமென்றனர்
பந்தயம் நடத்தும் புரவலர்கள்

எருதோ விருதோ பிறிதோ
பணம் போடுகிறவர்களே எல்லாம்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெரிந்த
உண்மையிதை
உள்வாங்கிக்கொண்டோர் உளரும் இலரும்
தத்தமது தேவை நிமித்தம்
கிளம்பத் தொடங்கினார்கள்.

கால்நடையாய் சிலர் கிளம்ப
காலுக்கு கழுதை பரவாயில்லை
என்று சிலர் விளம்ப
கட்டை வண்டி எத்தனையோ மேல்
என்று சிலரும்
கடன்வாங்கிக்கொண்ட கார்வண்டியில்
சிலரும் என
பந்திக்கு முந்துவதே என்றும் நன்றென
சிந்திக்கத் தெரிந்த
ஆறறிவாளர்கள், பேரறிவாளர்கள்
பந்தயம் நடக்குமிடத்திற்கு வந்துசேர்ந்தால்
அங்கே _

முன்னமே
பறக்கும் காரிலோ
பறவைகள் முதுகிலோ
காற்றுக்குக் கட்டளையிட்டோ
மாற்றுவழிகள் மற்றும பல செய்தோ
ஏற்கெனவே முப்பது பேரை
வரவழைத்திருந்த விழாக்குழுவினர்
அவர்களில் இருபது பேரை
ஆன்ற பார்வையாளர்களாக்க
அவர்களும் வேறு வழியின்றி
தரப்பட்ட இருக்கைகளே தமக்கான
அங்கீகாரமாகக் கொண்டு
ஆளுக்கு மூன்று கைகளால்
ஆரவாரத்தட்டொலிக்க
பழக்கதோஷத்தில் சிலர்
சீழ்க்கையொலியெழுப்ப
அதைக் கேட்டு ஒரு கட்சியினர்
இன்னொரு கட்சியின் ஆதரவாளர்களாய்
அவர்களை பார்த்து முறைக்க

விழாக்குழுவினர்
எஞ்சிய பத்துபேரை வட்டமாய்
ஓடவிட்டார்கள்
இறுதியில் மிஞ்சுபவர் யாராயிருக்க
வேண்டுமென்ற
திட்டவட்டமான முன்முடிவோடு.

No comments:

Post a Comment