Thursday, July 4, 2024

தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தாமரையிலைத் தண்ணீரை தூலமாக நேரில்
பார்த்திருக்கிறேனா, தெரியவில்லை….
அப்படிப் பார்த்தால்
தாகூரைப் பார்த்ததில்லை,
ஷேக்ஸ்பியரைப் பார்த்ததில்லை
லதா மங்கேஷ்கரைப் பார்த்ததில்லை,
மம்முட்டியைப் பார்த்ததில்லை,
இமயமலையைப் பார்த்ததில்லை.
இக்குனூண்டு முளைவிதையைப்
பார்த்ததில்லை
பார்த்தல் என்பதன் நேரில் என்பதன்
அர்த்தார்த்தங்களில்
பார்த்திராதவையே அதிகம் பார்க்கப்பட்டதாய்…..
நான் பார்த்திராத தாமரையிலைத்
தண்ணீர்த்துளிகள்
இருக்குமிடமெங்கும் உருண்டோடியவாறே…
உணர்ந்தும் உணராமலுமா யதன் ஈரம் _
காய சி்றிது நேரமாகும்.
சில நாட்கள் அலைபேசியில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட்டால், பின்
அந்த அலாரம் எப்படியோ ஆழ்மனதில்
அடிக்க ஆரம்பித்துவிடுவது போலவே _
பழகிவிட்ட தாமரையிலைத்தண்ணீர்
வாழ்வில்
இலை நீர்த் துளிகள் மேல்
நிலைகொள் மனது _
பற்றுடைத்து என் றொரு சொல்லின்
இருபொருளுணர்த்தி.

No comments:

Post a Comment