Friday, July 5, 2024

'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - கவிஞர் - திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி

'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

8, பிப்ரவரி 2023 பதிவுகள் இணைய இதழில் இயக்கு னர் சீனு ராமசாமியின் 'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' கவிதைத்தொகுப்பு குறித்து வெளியாகியுள்ள எனது கட்டுரை

                                                    - லதா ராமகிருஷ்ணன். 

*இந்தக் கவிதைத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளும் வேறு சில கவிதைகளும் ஆங்கிலத்தில் என்னால் மொழிபெயர்க்கப் பட்டு சமீபத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகம் அந்தத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது




- கவிதைத்தொகுப்பு:  'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' - சீனு ராமசாமி | பதிப்பகம்:  டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் -

ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்க மாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கிய வுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதா ரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர் கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப் பதும் வழக்கமாக இருந்துவருகிறது.

திரைத்துறையின் வீச்சும், வருமானமும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வாழ்க்கைத் தொழிலாக திரைப்படங்களில் பாடல்களெழுதும் தரமான கவிஞர்கள் உண்டு. எழுதப்படும் சாதாரணப் பாடல்கள் இசையின் மூலம் அசாதாரணத்தன்மை பெற, அதில் குளிர்காயும் கவிஞர்களும், திரைப்படப் பிரபலங்க ளோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் புகைப்படத்தைப் பதிவேற்றுவதன் மூலமே தங்கள் கவிதைகளின் தரம் குறித்த பிரமையைப் பரவலாக்கிக்கொண்டிருக்கும் கவிஞர்களும் இங்கே உண்டு. தனித்துவமான கவித்துவம் வாய்க்கப் பெற்ற கவிஞர்கள் திரையுலகத்தினரால் கைவிடப்பட்ட அவலநிலைக்கு இங்கே கணிசமான எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும்.



தரமான சில திரைப்படங்களின் மூலம் திரையுலகில் தம்மை நிலைநிறுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமியின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (டிஸ்கவர் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு)யைப் படிக்கக் கிடைத்தபோது மேற்கண்ட எண்ணவோட்டங்கள் மனதில் எழுந்தன.


கவிதைத்தொகுப்பை ஒருவித முரண்பட்ட மனநிலையில் தான் வாசிக்கத் தொடங்கினேன். கவிஞரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் (இது இன்னும் கொஞ்சம் விரிவாக அமைந்திருக்க லாம்), கவிஞரின் சுருக்கமான என்னுரை, அருமையான திரைப்படப் பாடலாசிரியர் என்பதோடு காத்திரமான தமிழ்க் கவிஞராகவும் தன் கவிதைகளின் மூலம் தன்னை அடையாளங் காட்டிச் சென்ற நா.முத்துக்குமாருக்கு தொகுப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது, பிரபலங்களிடமிருந்து பல்வேறு முன்னுரை, அணிந்துரை களை வாங்காத பாங்கு ஆகியவை திரு. சீனு ராமசாமி கவிதைகளால் மட்டுமே தன்னைக் கவிஞராக அடையாளங்காட்டிக்கொள்ள விழைபவர் என்பதை உணர்த்தின. தனது திரைப்படப் பிராபல்யத்தினா லன்றி தனது கவிதைகளின் அடர்செறிவின் உதவியால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள அவர் தகுதி யானவர் என்பதை அவருடைய கவிதைகள் உண்ர்த்திநிற்கின்றன.

கவிதைத்தொகுப்புகள் வழக்கமாக இரு பொதுவான பிரிவுகளில் அமைவதாக வகைப்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை பல கோணங்களில் பார்க்கும், பாடும் கவிதைகளை உள்ளடக்கி யவை. வாழ்வினூடாய் மனிதர், மனித மனம் எதிர்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகள், உணர்வுகள், தருணங்களைப் பற்றிப் பேசுபவை. இதில் திரு. சீனு ராமசாமியின் கவிதைத் தொகுப்பு இரண்டாம் பிரிவைச் சேர்ந்தது எனலாம்.

ஒரே கருப்பொருளைப் பல கோணங்களில் பேசுவதாக இருந்தாலும், பல கருப்பொருட்களைப் பற்றிப் பேசினாலும், ‘கவிப்பார்வை’ என்ற ஒன்று அந்தக் கவிதைகளில் புலப்படும். மொழிநயம் என்ற ஒன்று அந்தக் கவிதைகளில் புலப்படும். அவை, சம்பந்தப்பட்ட கவிஞரின் கவிதைகள் மேலோட்டமான வையா, ஆழமில்லாத ஆரவாரத்தன்மை கொண்டவையா, கைத்தட்டலைக் கோரி எழுதப்பட்டவையா, சுய புலம்பலும் கழிவிரக்கமுமே கவிதையாகிவிடும் என்ற பிரமையில் உழலுபவையா என பலப்பல விஷயங்களை தேர்ந்த வாசகருக்குத் தெளிவாக்கி விடும்!

 - சிநேகிதரும் சக கவிஞருமாகிய கவிஞர் சீனு ராமசாமியிடம் கவிஞர்
அய்யப்ப மாதவன் தனது சமீபத்திய கவிதைத்தொகுப்பைத் தந்துவக்கும் தருணம் -


திரு.சீனு ராமசாமியின் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் ஆழமும், மொழிநயமும், சமகாலத் தமிழ்க்கவிதைப்போக்குகளில் அவருக்கிருக்கும் பரிச்சயமும், பயிற்சியும் தேர்ச்சியும் புலனாகின்றன மனவினை என்ற கவிதையின் தலைப்பை உதாரணமாகக் கூறலாம். மணவினை என்ற வழக்கமான சொற்பிரயோகம் இங்கே மனவினையாகத் தரப்பட்டுள்ளதில் ஒரு கவித்துவம் புலப்படுகிறது.

அவள்
தரவும் இல்லை
அவன்
பெறவும் இல்லை
என்றெனில்
இடையில் ஒரு பிச்சிப்பூ
மலராமல்
இருக்கிறது

இந்த ஆரம்பவரிகளில் இடம்பெறும் என்றெனில், பிச்சிப்பூ என்ற சொற்கள் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவை. (ஒரு வாசகராக என்னளவில், இந்த ஆரம்ப வரிகளோடு கவிதை நிறைவடைந்துவிடுகிறது என்பதால் அடுத்துவரும் வரிகள் ‘விளக்கவுரை’ போல் தோன்றுகின்றன.

முத்துப்பேச்சி என்ற தலைப்பிட்ட கவிதையின் ஆரம்பப் பத்தி கீழ்க்காணும் வரிகளோடு முடிகிறது:

விடுமுறைக் காலங்களில்
வெளிர் மஞ்சள் வேப்பம்பழங்களைப்
பொறுக்கும்போது
என் தலை முட்டியதில்
சிநேகிதி ஒத்தக்கண் முத்துப்பேச்சி
பெரிய மனுசியானாள்.

பெண்ணின் உடல்சார் இயற்கை நிகழ்வொன்றை ஓர் ஆண் அவனுக்கேயுரித்தான விடலைப்பருவ, வளர்பருவ, வாழ்நாள்பூராவுக்குமான அனுமானத்தில் ‘தன் தலை முட்டியதில்/ பெரிய மனுசியானதாகப் பேசும் இந்தக் கவிதையின் மையக் கரு முத்துப்பேச்சியல்ல, வேப்பமரமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை என்ற கவித்துவமான தலைப்பு முன்வைக்கும் குறியீடுகள் கவனிக்கத்தக்கவை.

பக்கம் 49இல் இடம்பெறும் ‘காதலன்’ என்ற தலைப்பிட்ட கவிதை தமிழ்க்கவிதைவெளியில், சங்க காலம் தொட்டு சமகாலம் வரை மிக அதிகமான அளவு பாடுபொருளாக அமைந்த நபரை, அவர் தொடர்பான நிகழ்வுகளை, உணர்வுகளை தனித்துவத்தோடு எடுத்தாள்கின்றன. இதுவரை சொல்லப்படாத, பேசப்படாத விஷயங்களைப் பேசுவதால் ஒரு கவிதை வாசக கவனத்தை ஈர்ப்பது போலவே இதுவரை பேசப்பட்ட, சொல்லப்பட்ட நிகழ்வுகளை, உணர்வுகளை புதிய கோணங்களில் பார்ப்பதன் மூலமும், புதிய உவமான உவமேயங்கள், குறியீடுகளைப் பயன்படுத்திக் கவிதையாக்குவதன் மூலமும் அதேயளவு வாசக கவனத்தை ஈர்க்க முடியும்:

‘உன் சீயக்காய் வாசனையின்
நறுமணமிக்க அதிகாலை
பிரகாசமான நம்பிக்கைகளை
எனக்குத் தந்திருக்கிறது

என்று தெரிவித்து _

நீ வாசித்த என் கவிதை வரிகளில் விழுந்த
ஒரு புன்னகையைப் பிடித்துறங்கிய எனக்கு
நீ நீங்கிச் சென்ற நாளின் முதல் மூன்று ஜாமங்கள்

துயர்மிக்கவை
என்று நகர்ந்து _

என் கவிதையின் மூலம் உன்னை மீட்பேன் என

எண்ணிய
என் காலம் நம்பிக்கையானது

என்று முடியும் இந்தக் கவிதையில் காலம், நம்பிக்கை ஆகிய இரண்டு சொற்களின் கூட்டிணை விலான அர்த்தப்பரிமாணங்கள் உய்த்துணரத்தக்கவை. ’ஆசை முகம் மறந்துபோச்சே – இதை ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்று அலைக்கழியும் பாரதியின் கவிதைவரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.

நாள் என்பது நாளல்ல
பின்பொரு சமயம்
ஏங்கித் தவிக்கும்
நினைவு (நாள் – பக்.27)

மகளின் தலைக்கு மேலே
வட்டமிட்டன பஞ்சவர்ணங்கள்’ (மந்திரச்சொல் – பக்: 38 – 40)

‘நீ கண்மூடி
லயித்த கணத்தில்
களவு போன
அலைபேசியை
எப்படி மீட்பாய்
நான் அங்கிருந்துதான்
உன்னை பின் தொடர்வேன் ( தவம் --- ப;41)

என்று ஒரு முழுக்கவிதையில் தன்னிறைவு பெற்ற தனிக்கவிதைகளாகத் திகழும் வரிகள் நிறையவே கிடைக்கின்றன இந்தத் தொகுப்பில்.

ஆழ்மனம் என்ற தலைப்பிலான சிறுகவிதை (பக்.58) ‘கலவியின் உச்சகணத்தில்/ நாராயணா/ நாராயணா/ நாராயணா/ என்று தானறியாமல் அழைத்தவர்/ சமீபத்தில் மதம் மாறிய/ ஃபெர்ணாண்டஸ் என்கிற பார்த்தசாரதி/ என்று முடிகிறது. பார்த்தசாரதி என்ற பெயர் இந்துவைக் குறிப்பதோடு ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறிக்கிறதா, ஆமெனில் பிரக்ஞாபூர்வமாக அப்படிக் குறிக்கிறதா, அப்படிக் குறிப்பிட்டால் அது சரியான தகவலா’ என்பதாக மனதில் கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கவிதை மதமாற்றம் சரியா, தவறா என்று பட்டிமன்றம் நடத்தித் தீர்ப்
பளிக்கப் புகாமல் மதம் மாறியிருப்ப வரின் உளவியலைக் கவிநயத்தோடு சித்தரித்திருப்பது நிறைவான வாசிப்பனுபவத்தை வரவாக்குகிறது.

ஒரு தனிநபரின் உணர்வை, அனுபவத்தை அதனூடாக சமுக நிலவரங்களை பிரக்ஞா பூர்வமாக அல்லது கவிதையின் இயல் பான போக்கில் இரண்டறக் கலந்த அம்சமாகவும் பேசும் கவிதை களுக்கு இக்கவிதை ஓர் எடுத்துக்காட்டு.

சில கவிதைகள் அளவுக்கதிகமாக நீட்டியும் விரித்தும் தரப்பட்டி ருப்பது அந்தக் கவிதை களின் அடர்செறிவைக் குறைப்பதாக உள்ளது. (அப்படி நீட்டி விரித்து விவரித்து எழுத வேண்டிய தேவையைக் கவிமனம் உணர்ந்திருக்கலாம்). மற்றபடி, கூறியது கூறல், உரத்துக் கூறல், எள்ளலாய்க் கூறல் இந்தக் கவிதைத் தொகுப்பில் இல்லை. எல்லாக் கவிதைகளுமே in all seriousness எழுதப்பட்டிருக்கின்றன என்ற உணர்வு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதை களை வாசிக்கும்போது நமக்குள் மேலோங்கி நிறைவான வாசிப்பனுபவம் வரவாகிறது.

lathaa.r2010@gmail.com

No comments:

Post a Comment