Thursday, June 20, 2024

மகிழ்ச்சியைத் தேடி... 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகிழ்ச்சியைத் தேடி...

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

.............................................................................................................


/*என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு ’போகிற போக்கில்’. 24 கவிதைகள் கொண்ட சிறுநூல். 2011இல் வெளியாகியது. அதில் கடைசிக் கவிதையாக இடம்பெறு வது இப்போது ஆஸ்கார் வி்ருது வாங்கியுள்ள நடிகர் வில் ஸ்மித் நடித்த அற்புதமான படம்The Pursuit of Happyness குறித்துப் பேசுவது. 2006இல் வெளியான படம் அது.

2022 சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டு ஆஸ்கார் விருது வாங்கும் முன் விழாவில் நகைச்சுவை என்ற பெயரில் மேடையில்ருந்தவர் (stand-up comedy) வில் ஸ்மித்தின் புற்று நோய் வந்த மனைவியின் தோற்றத் தை (மனைவி புற்றுநோய் வந்து அதன் விளைவாய் தலைமுடி இழந்து மொட்டையடித்துக் கொண்டிருக்கி றார்) கேலி செய்து ஏதோ கூற நேரே மேடைக்கு சென்று அந்த மனிதரை அடித்துவிட்டார் வில் ஸ்மித்.
பின்னர் விருது வாங்கியதற்கான தன் ஏற்புரை யில் தன் நடத்தை குறித்து வருத்தம் தெரிவித் திருக்கிறார். அவருடைய ஏற்புரை அத்தனை ஆழமானது; ஆத்மார்த்தமானது.
ஆனால், எல்லோரும் வில் ஸ்மித் வன்முறை யைப் பிரயோகித்துவிட்டார் என்று குற்றஞ் சாட்டத்தொடங்கிவிட்டார்கள்.
நல்ல வேளை, இருவரும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர்கள் என்பதால் நிறவெறி என்பதாய் இந்த நிகழ்வு பகுக்கப்படும் அபாயம் நேர வில்லை.
வார்த்தைகளின் வன்முறையையையும் வன் முறைச் செயல்களில் ஒன்றாக ஏன் கணக்கி லெடுத்துக்கொள்ளக் கூடாது?
நடிகர் வில் ஸ்மித்திற்கு என்னுடைய இந்தக் கவிதை சமர்ப்பணம்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

--------------------------------------------------------------------------------

மகிழ்ச்சியைத் தேடி...

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் 'ராணுவ வீரனின் பொம்மை
கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.
மகிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை
மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே
நிர்மாணித்தவனாயிற்றே!
”கோள்கள் எத்தனை?”
“ஏழு”
”இல்லை, ஒன்பது" ”வனராஜா யார்?"
"கொரில்லா”
”இல்லை, சிங்கம்”
தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும்
மகன்.
(தவறாய் இருந்தால்தான் என்ன!)
எனில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
”அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
“இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.
“நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்" என்று
பரிவோடு கூறுகிறது பிள்ளை.
”வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
’இந்தச் சின்னஞ்சிறு பகுதியே மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.
”என்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான
காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.
காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.
......................................................................................................

No comments:

Post a Comment