Tuesday, September 19, 2023

கண்டதைச் சொல்லுகிறேன்…… ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கண்டதைச் சொல்லுகிறேன்……

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சாலையோரமாய் ஒரு ஆளைச் சுற்றி நின்று
தர்ம அடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்
சிலபலர்.
கோட்டுசூட்டு போட்டவர்களும் கரைவேட்டிகட்டியவர்களும்
நாட்டமைக்காரர்களாய் தீர்ப்பளித்துக்
கொண் டிருந்தார்கள்.
காலெட்டி நடைபோட்டுக்கொண்டிருந்
தோரெல்லாம்
கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்து
கைக்கெட்டும் தோள் அல்லது தலை
அல்லது காது அல்லது பின்மண்டை
அல்லது மேற்கை அல்லது முதுகு
அல்லது பிட்டம்
என ஆளுக்கொன்றிரண்டு அடி கொடுத்து
Photo-Shoot சமூகக்கடமையாற்றிமுடித்ததாய்
ஆசுவாசத்தோடு அப்பாலேகினார்கள்.
அட என்ன தான் செய்தான் பையன் என்று
அடித்த பின் அடுத்திருந்தவர் கேட்க _
அரைக்கணம் தடுமாறி பின்
’அதைத் திருடினான் இதைத் திருடினான்
அவரை எட்டி உதைத்தான்
இவள் கையைப் பிடித்திழுத்தான்’
என ஆளுக்கொரு காரணம் சொல்ல _
அவற்றின் உண்மைத்தன்மை நம்பகத்தன்மை
சொல்பவரின் தரம் அறம் யெதையுமே
அறியவோ சரிபார்க்கவோ விருப்பமின்றி
பொறுப்புமின்றி
சுரவேகத்தில் அவற்றை மனனம் செய்து
சேர்ந்திசையாகப் பாடியவாறே
கரகரவென்றந்தப் பையனை இழுத்துச்சென்று
அங்கிருந்த மரமொன்றில் கட்டிவைத்துப்
பின்னும் முண்டியடித்து அடிக்கத்
தொடங்கியவர்களில்
நிதி மோசடிக்காரர்கள்,
நிலக்கொள்ளைக்காரர்கள்
வரி ஏய்ப்பாளர்கள்
கையூட்டு பெறுவோர்
விஷங்கக்கும் பரப்புரைகளைக்
குரல்வளையிலிருந்து
துப்பித்துப்பியே
வீதியடைத்திருக்கும் மாடமாளிகைகளை
இப்போதும் எப்போதும்
வளைத்துப்போட்டிருப்பவர்
அன்னாரே, அன்னபிறரே
நன்னான்கு கைகளோடு
முன்னணியிலிருந்தார்கள்.

No comments:

Post a Comment