Tuesday, August 15, 2023

தன்வினை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தன்வினை

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

நிராயுதபாணியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்

குறிபார்த்து

அம்பெய்தி தலைகொய்யும்போது

அசகாயசூரராக இறுமாப்படைகிறேன்.

ஆஹா ஓஹோ என்று அவரிவர் புகழும் பேரோசையில்

விழுந்தவரின் மரண ஓலம் எனக்குக் கேட்பதில்லை.

கேட்டாலும் கேட்டுக்கொள்ளாமல்

காலெட்டிப் பீடுநடைபோடுகிறேன்.

தேர்ந்த வில்லாளியான குரூரரொருவரின்

முனையில் நஞ்சுதோய்ந்த குத்தீட்டி பாய்ந்து வந்து

என் நடுமார்பைப் பிளக்க

தரைசாய்ந்து குருதிபெருக்கி நினைவுதப்பும் நேரம்

அரைகுறையாய் கேட்கக் கிடைக்கும் அசரீரி _

ஆகாயத்திலிருந்து வந்ததா?

அடிமனதிலிருந்து வந்ததா?

No comments:

Post a Comment