Monday, July 17, 2023

(எனக்கு) எது கவிதை? _ லதா ராமகிருஷ்ணன்

(எனக்கு) எது கவிதை?

_ லதா ராமகிருஷ்ணன்




என்னை அழித்தாலும்

என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை

-ஆத்மாநாம்

With due respect to Poet Athmanam, இந்தக் கவிதையில் பிரகடனம் இருக்கும் அளவு poetic finesse இருப்பதாகப் படவில்லை எனக்கு. ஒருவேளை, அவர் எழுதிய காலத்தில் இந்த தொனியும் பார்வையும் புதுமை யாக இருந்திருக்கலாம். (அப்படியும் முழுமையாகச் சொல்ல முடியாது. பாரதியின் பல செறிவான கவிதைகளில் இந்தப் பிரகடனம் இன்னும் அடர்த்தியாக வெளிப்பட்டிருப்பதாய் உணர்கிறேன்).

அப்படியெனில், நல்ல கவிதை என்பதற்கு அது எழுதப்பட்ட காலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவது போதுமானதா? அல்லது, அது எல்லாக் காலத்திலும் புதுமையாக இருப்பதா? எல்லாக் காலத்திற்குமான , எல்லோருக்கும் பொதுவான விஷயங்களை எழுதுவதால் மட்டும் ஒரு கவிதை கவிதையாகிவிடுமா?

இவை ஒரு வாசகராக என்னுடைய கேள்விகள்.

ஆத்மாநாமின் பின்வரும் கவிதை அதிகக் கவித்துவம் வாய்ந்ததாக எனக்கு நிறைவளிப்பது.

இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்கு.

அதேபோல் ‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்’ என்று எல்லோரும் பாராட்டும் நகுலனின் கவிதை என்னப் பொறுத்தவரை கவிதையாக முடியாத வார்த்தை விளையாட்டுதான். அதில் எத்தனை ‘தத்துவச்செறிவு’ இருப்பினும்.

அதைவிட _

‘இருப்பதற்கென்று வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

என்ற கவிதை ‘இல்லாமல் போகிறோம்’ என்பதிலுள்ள ஒன்றுக்கும் ஏற்பட்ட அர்த்தத்தினால் வெறும் ஸ்டேட் மெண்ட் கவிதையாகச் சுருங்கிவிடாமல் தப்பிக்கிறது .

என்றாலும் இதை ,கவிதையென்று எப்படிச் சொல்ல?

இதைவிட ’அலைகள்’ என்ற தலைப்பிட்ட நகுலன் கவிதை அதன் ஆழ்மனப் பட்டவர்த்தன அலசல் தன்மையால் அதிகக் கவித்துவம் வாய்ந்ததாகப் படுகிறது.

அலைகள்
நேற்று ஒரு கனவு;
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக;
இந்த மனதை வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது’

இதைவிட கவித்துவம் வாய்ந்த கவிதையாக எனக்குப் படுவது நகுலனின் கீழ்க்கண்ட கவிதை:

நள்ளிரவில்
தனியாக
சூரல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
எழுதிக்கொண்டிருக்கிறான்
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது.
காலம் கண்ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாகச்
சுழித்துச் செல்லுகிறது
விறைத்த கண்களுடன்
அதன் மீது செத்த மீன்கள்
மிதந்துசெல்கின்றன
எழுந்து கோட்-ஸ்டாண்டில்
தொங்கிக்கொண்டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
கொள்கிறான்

இதில் வாசகப் பங்கேற்புக்கான சாத்தியம் அதிகம் இருக்கிறதென்று தோன்றுகிறது. Mere Statement, Mere Reportingஐத் தாண்டிய விஷயம் இருப்பதாகப் படுகிறது. அந்த அம்சம்தான் கவித்துவமா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பார்வை எத்தனை தூரம் subjective என்றும்,

ஆத்மாநாமில் எழுதத் தொடங்கியவள் நகுலனில் ஏன் முடிக்கிறேன் என்றும்கூட...!


No comments:

Post a Comment