Thursday, July 20, 2023

குழந்தைகளின் நிலை - கையறுநிலை லதா ராமகிருஷ்ணன்

குழந்தைகளின் நிலை - கையறுநிலை


லதா ராமகிருஷ்ணன்
............................................................................
 சொல்லத் தோன்றும் சில…..
ஒரு குற்றம் நடந்திருப்பதாகச் செய்தி வந்தால், உடனேயே குற்றம் இழைத்தவர், குற்றம் இழைக்கப் பட்டவர் ஆகிய இரு தரப்பினரின் சாதி, பொருளாதார நிலை மதம், அரசியல்கட்சி சார்பு – இப்படி பல விஷயங் களை அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே அந்தத் தவறை அணுகுவது இப்போது சமூக சிந்தனையாளர் களாக, போராளிகளாக அறியப்படும் பலரின் அணுகு முறையாக இருக் கிறது.
இது வேண்டத்தகாத போக்கு.
நேற்றிலிருந்து தொலைக்காட்சி சேனல்களிலும், இன்று தினமணி, டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள ஒரு செய்தி. தர்மபுரியைச் சேர்ந்த 19 வயது நபர் 6 வயதுச் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி கொலை செய்திருப்பதாக அந்தச் செய்தி.
தெரிந்த சிறுவன். ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று மிக உயரமான, பயன்படுத்தப்படாத தண்ணீர் டாங்கிற்கு ஏற வைத்து அங்கே நடந்திருக்கிறது இந்தக் கொடுமை. சிறுவன் அழுததும் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
காவல்துறையினர் வந்து விசாரித்தபோது நரபலி கொடுக்கப்பட் டிருக்கலாம் என்று இந்த குற்றமிழைத்த நபர் காவல்துறையின் கவனத்தை திசைதிருப்பப் பார்த்திருக்கிறார். இப்போது இந்த நபர் சிறையில்.
(உடனே ஊரை குறைகூறத் தயாராகிவிடுவார்கள் சிலர். எதையும் பொதுமைப் படுத்திப் பேசுவதற்கான தேவை யும் உண்டென்றாலும் எல்லா நேரமும் அதையே செய்வது பிரச்சனையை திசை திருப்புவதாகவே அமையும்)
பழக்கமான நபர் என்றால் பெரும்பாலும் ஒரே சாதியைச் சேர்ந்த வர்களாகத் தான் இருப்பார்களா?
அலைபேசியில் சரளமாகப் புழங்கும் நீலப்படக் காட்சிகள் வளரி ளம் பருவத்தினரிடம் அதைப்போலவே செய்து பார்க்கும் ஆசை யைக் கிளறச் செய்வதாலா?
சிறுவர் சிறுமியருடனான பாலுறவுக் காட்சிகளுக்கு உலகம் முழுக்க நல்ல பணம் கிடைப்பதாலா?
முன்பு இளங்குற்றவாளிகளுக்கான சீர்நோக்குப் பள்ளி யொன்றில் சில காலம் அவர்கள் படைப்பாற்றலை வளர்க்கும் பகுதிநேர வேலை பார்த்தபோது முதல் நாளே அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் ‘ பார்க்க பாவமாயிருப்பார்கள் – இரண்டு கொலை, மூணு ரேப் செய்திருப்பார் கள்’ என்று 15 முதல் 18 வயது வரையான இளங்குற்ற வாளிகளை(அவர்களை மற்ற சிறுவர்களிடமிருந்து பிரித்து தனி பிரிவில் வைத்திருந்தார்கள்) என்று சொன்ன போது என்னவோபோலிருந்தது. ஆனால், போகப்போக அந்தக் கூற்றி லிருந்த யதார்த்த உண்மை புரிந்தது.
சிறுவர்கள், வளரிளம்பருவப் பையன்கள் பற்றிய அக்கறை நம்மிடம் போதுமானதாக இல்லை. அரசுப் பள்ளிகளில் சில ஆயாக்கள் மழலையர் வகுப்பிலுள்ள குழந்தைகள் கொண்டுவரும் சாக்லெட், பிஸ்கெட்டு களை சர்வசாதாரணமாக எடுத்துச் சாப்பிடு வது வழக்கமாம். குழந்தை மூத்திரம் போகவேண்டுமென்று கேட்டல் அடி. அடக்கியடக்கி ஒரு கட்டத்தில் வகுப்பிலேயே போய்விட்டால் அதற்கும் அடி. இதையெல்லாம் பற்றி புகார் செய்தால் அந்த ஆயா பாவம் கணவன் கைவிட்டு விட்டான் என்று அந்தப் பெண்ணுக்காகப் பரிந்துபேச ஆரம்பித்துவிடுவார்களாம் பொறுப்பிலுள்ளவர்கள். அப்படியானால் அந்தக் குழந்தைகள் பாவமில்லையா?
இதேபோல்தான் திரைப்படங்களில் காட்டப்படும் stalking முதலான பல விஷயங்கள்.
ஒளி ஊடகங்கள், சமூக ஊடகங்களெல்லாம் பெரும்பாலும் ஒரு விஷயத்தைப் பரபரப்புக்காகவே பேசுகின்றன. நடிக நடிகைகளைப் பற்றி எத்தனை மஞ்சள் பத்திரி கைகள் யூட்யூப் காணொளிகளாக வலம் வருகின்றன.
சீரியல் நாடகங்களைக் கேட்கவே வேண்டாம். இந்து மதம் என்றாலே வேண்டாத சடங்குகள் என்று திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். கோவில்களில் தான் பெரும்பாலும் கொலைக்கான திட்டங்கள் தீட்டப் படுகின்றன.
மிக மிக மோசமான வார்த்தைகளால் (மோசமான வார்த் தைகளென்றால் நாம் வழக்கமாக ‘கெட்ட வார்த்தைக ளா’கச் சுட்டும் வார்த்தைகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் நாகரீகமான வார்த்தைகளாகக் கொள்ளப்படும் எத்தனையோ மோசமான விஷந் தோய்ந்த வார்த்தைகள் இந்த சீரியல்களில் புழக்கத்தி லிருக்கின்றன.
தொலைக்காட்சி சேனல்களுக்கு கொஞ்சமேனும் சமூகப் பொறுப்பு ணர்வு இருந்தால் மேற்குறிப்பிட்ட மிக அவலமான நிகழ்வைப் பற்றி அகல்விரிவாகப் பேசவேண்டும். அது குறித்துப் பேசத் தகுதி யான வல்லுனர்களை வரவழைத்துப் பேசவேண்டும்.
தினமும் குழந்தைகளுக்கு சில அத்தியாவசிய விஷயங் களைச் சொல்ல ஆரம்பிக்கவேண்டும். (GOOD TOUCH, BAD TOUCH என்பதுபோல்) ஆனால், தொலைக்காட்சி சேனல்களே சிறுவர் சிறுமியரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது (எத்தனையோ விரசமான பாடல்களை சூப்பர் சிங்கர், சரிகமப நிகழ்ச்சி களில் சின்னக்குழந்தைகள் பாடுகிறார்கள் - அதற்கேற்ற அசிங்க அபிநயங்களில்) அவர்கள் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கை கொள்ள வழியில்லை.
கோர விபத்துகளை ‘நடந்தது நடந்தபடி’ காட்டுவதில் தான் அவர்களுக்குப் பெரும் ஆர்வம். இந்தக் காட்சிகளையெல்லாம் ஊடகங்களில் காட்டவே கூடாது. இதய பாதிப்பு எத்தனையோ பேருக்கு ஏற்படச் செய்யும் காட்சிகள். அதைப்பற்றியெல்லாம் தொலைக்காட்சி சேனல்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் என்ன கவலை?
தருமபுரியில் நடந்திருக்கும் இந்தக் கொடூர நிகழ்வு ஆண்குழந்தை கள் மீதும் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இனியேனும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுவிடங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஆண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் போதுமான கவனம் செலுத்தப்படவேண்டும்.
இப்படிச் சொல்வதால் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து போதுமான அக்கறை செலுத்தப்படுகிறது என்று சொல்வதாக அர்த்தமில்லை. சமீபத்தில் ஒருவர் தன் மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முதலில் புகார் செய்த எட்டு வயது மகளும், அந்த நபரின் மனைவியும் அந்த நபர் இல்லையென்றால் சாப்பாட் டுக்கே வழியில்லாத நிலை புரிய இப்போது பிறழ்சாட்சி யாகிவிட்டார்களாம். ஆனாலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார்.
குடும்பத்தில் நிகழும் இத்தகைய அத்துமீறல்களை மிக அதிக மாகப் பேசி, வெளிச்சம் போட்டுக்காட்டும்போது மற்ற குழந்தைகள் தங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் பார்த்து சந்தேகப்படும், அச்சப் படும் சூழலும் உருவாகிவிடக்கூடும்.
அதேபோல் சமீபத்தில் தன் கணவன் தங்களுடைய மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பொய்ப்புகார் கொடுத்த மனைவியைப் பற்றியும் அதன் விளைவாக ஆறேழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து தற்போது விடுதலையாகியிருக்கும் தந்தையைப் பற்றியும், அதேபோல் மகள் தந்தைமேல் பொய்ப் புகார் கொடுத்த செய்தியையையும் படிக்க நேர்ந்தது.
வீட்டில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் சிறுமியை குழந்தை களுக்கான பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க, அங்கும் அவளை சில பணியாளர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஒரு அவலச் செய்தி.
எங்கேதான் அந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்?
இறந்துவிட்ட ஆறுவயது ஆண்குழந்தைக்கு எத்தனை வலித்திருக்கும்? அது எத்தனை கதறியிருக்கும்?
குற்றமிழைத்த 18 வயது இளைஞன் இனி அது குறித்து வருந்து வானா? வருந்தி என்ன பயன்?
தொலைக்காட்சி சேனல்களிலும் நாளிதழ்களிலுமாக எதிர் கொள்ளவேண்டியிருக் கும் இத்தகைய செய்திகள்/ தகவல்கள் மனதில் ஒரு மிகப்பெரிய கையறுநிலை யுணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.

No comments:

Post a Comment