Tuesday, July 25, 2023

பார்வை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிப்பிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….

No comments:

Post a Comment