Tuesday, June 20, 2023

பூதகணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்

 பூதகணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்
(*நான்காம் தொகுப்பு – காலத்தின் சில ‘தோற்ற’ நிலைகள்)
(2005 இல் வெளியானது)
1

காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்துவரும் பூதம்.
மூச்சுத் திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாகவேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம் குடுவை காலம், நான் நீ யாவும்….

2

நிராதரவாய் ஒரு மூலையில் சுருண்டு கிடக்கும்
பூதத்திற்கு
ஆடிக்கொரு நாள் அரைவயிற்றுக் கஞ்சியும்
அமாவாசைக்கொரு நாள்
சிறு துளி நிலவும்
ஈயப்படும்.
செவிக்குணவு ஸ்ருதிபேதங்கள்,
நிராசைகளின் பேரோசைகள்,
நாராச நிசப்தங்கள்
என்றாக
போகும் வழியெல்லாம் பெருகிவரும் அகதிமுகாமில்
இருகால் மிருகங்களாய் சிறு
புழுப் பூச்சிகளாயும்
பாவம் பூதம் குடுவை காலம் நான் நீ யாவும்….

3
வாரிசைப் பெற்றெடுக்காததால்
வெறும் பூனையாகிவிடுமோ பூதம்?
எலியைக் குடுவைக்குள் விட்டால்
என்ன நடக்கும் பார்க்கலாமென
காதுங் காதுமாய் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.
கத்தித் தீர்த்தார்கள் குரல்வளை கரிந்தெரிய.
குடுவை மூடியைத் திறக்கத் துணிவில்லை.
உள்ளே
தனது மூன்றடி மண்ணுக்காய்
தவமிருந்துகொண்டிருக்கக்கூடும் அது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..

4

இன்னும் தன்னை நுண்ணுயிராக்கிக்கொண்டு
இரத்தவோட்டத்தில் நீந்திச்செல்லும் பூதம்
இரப்பை, நுரையீரல், மலப்பாதை, சிறுநீரகமென
மென்மேலும் பயணமாகி
உடலியக்கத் தொழில்நுட்பத் திறன் கண்டு
வெட்கிப் போனதாய்
அடிமுடியெல்லாம் செந்நிறமணிந்து
கோலம் புதிதாகக் கொண்டாடிய கணமொன்றில்
குடுவை தாயின் கருவறையாகத் தோன்ற
தலைசாய்த்துக் கண் மூடியது
கோபதாபங்களில்லாது.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்….

5

வீதியெங்கும் பெருகியோடிக்கொண்டிருக்கின்றன
கழிவுநீர்கள்…..
பாதாளச் சாக்கடையிலிருந்து கிளம்பிவரும்
மனிதவுடல் நாறும் மலக்கிடங்காய்.
கண்ணாடியின் சன்னத்திலான மென்தேக
இடுப்பின் வளைவு தாங்கும்
குடங்கள் எண்ணிறந்ததாய்.
ரயில் நிலையப் படிக்கட்டுகளின் ஓரங்களில்
நீளும் கைகளின் மொண்ணை விரல்கள்
தகரத்தை விழுங்கியதாய் இருமியவாறு.
வராத சவாரிக்காய் விழி பூத்திருக்கும்
சைக்கிள்ரிக்‌ஷாக்காரர்.
சுடச்சுட ‘சிங்கிள் டீ’யை கை வேக
விநியோகிக்கும்
விடலைச் சிறுவர்கள்.
சீறிச்செல்லும் வாகனங்களுக்கிடையே
சிக்கிநிற்கும் வெறுங்காலாட்கள்….
வர்ணமயமாக்கலுக்கு அப்பால் அவர் தம்
கால்களின் வெறுமை
உயிர்நிலையைக் கிழித்தெறிய
காதறுந்த ஊசியும் கூட வராத வாழ்வில்
அழிந்துகொண்டிருப்பவர்களுக்கு
ஆதரவாக
தன் விசுவரூபத்திற்கான ஏக்கம்
தாக்கி மோதும் எப்போதும்.
பாவம் பூதம் குடுவை காலம் நான்
நீ யாவும்…..

No comments:

Post a Comment