Friday, February 17, 2023

க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்

 க.நா.சு என்கிற

படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்

லதா ராமகிருஷ்ணன்

(*10.2.2019 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)


( “இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கி யத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச் சொல்வதுதான் - - க.நா.சு)
க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்]
[ ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988]
[இந்தச் சிறு கட்டுரையை நான் இப்போது எழுதுவதற்குக் காரணம் க.நா.சுவின் பிறந்தநாள் ஜனவரி 31(1912) என்பதா? இல்லை. இலக் கிய விமர்சகராகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள், விமர்சனம் என்ற பெயரில் சக-படைப்பாளிகளைக் கேவலப்படுத்து பவர்கள் க.நா.சு பெயரையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் க.நா.சுவின் விமர்சன அணுகுமுறையே இந்தவிதமாகத்தான் அமைந்திருந்தது என்று யாரும், குறிப்பாக இளைய தலைமுறையி னர் எண்ணிவிட லாகாது என்பதற்காகவே இதை எழுதத் தோன்றி யது].

எழுத்தாளர் க.நா.சுவின் நூற்றாண்டுவிழா என்று நினைக்கிறேன். சென்னை, மயிலையில் ஸ்ரீராம் அறக்கட்டளை –விருட்சம் சார்பாக ஒரு கூட்டம் நடந்தது. நானும் பேசினேன்.
க.நா.சுவின் வாழ்நாளில் கடைசி ஒன்றரை இரண்டு வருடங்கள் – அவர் சென்னைக்கு வந்துசேர்ந்த பின் தன எழுதுவதைப் பிரதி யெடுக்க உதவிக்கு ஆட்கள் தேவை என்பதாக அவர் கூறியிருந்த தைப் படித்து ‘சாகித்ய அகாதெமி விருது வாங்கியவர் நீங்கள். உங்களுக்கு உதவ எத்தனையோ பேர் இருப்பார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமானால் அதை மிகப்பெரிய கௌரவமா கக் கருதுவேன்’ என்றெல்லாம் நான் எழுதியனுப்பிய தபால் அட்டைக்கு ‘அப்படியெல்லாம் யாரும் உதவிக்கு இல்லை. நீங்கள் வரலாம். ஆனால், சன்மானம் எதுவும் தர இயலாது’ என்பதாக சுருக்கமாக பதில் வந்தது!

அப்போது நான் மந்தைவெளியில் இருந்தேன். அவர் மயிலாப்பூர் கோயில் பக்கம். அதன்பின் அவருடைய இறப்புவரை தினமும் காலையில் இரவுப்பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியது. அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும், அல்லது அவருடைய எழுத்தாக்கங்களைப் பிரதி யெடுத்துக்கொடுப்பதும் வழக்கமாகியது.

திரு. க.நா.சுவின் கையெழுத்து சிற்றெறும்புகள் ஊர்ந்துசெல்வ தைப் போல் சின்னச்சின்னதாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும். அப்போது தினமணிக்கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்த தேவகி குருநாத் நான், இன்னும் ஒருசிலரால் மட்டுமே அவற்றைத் தெளிவாக வாசிக்க முடியும்.
இந்த விஷயங்களையும், ’க.நா.சுவுக்கு புதுச்சேரி பல்கலைக்கழ கத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணி கிடைத்தபோது அவர் கேட்ட ஊதியமே 2000 ரூபாய்தான். அதற்கடுத்து அந்தப் பதவியில் அமர்ந் தவர் 10000போல் வாங்கினார்! க.நா.சுவின் தேவைகள் மிகவும் குறைவு. மிகவும் எளியவாழ்க்கை வாழ்ந்தவர் அவர். தன்னுடைய தந்தையாரின் திதியன்று லஸ் கார்னரில் இருக்கும் சுகி நிவாசுக்கு அவருடைய மனைவியையும், கூடவே என்னையும் அழைத்துச் சென்று நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டபிறகு வெகு சாதாரணமாக அன்று அவருடைய தந்தையாரின் திதி என்ற விவரத்தைத் தெரிவித்தார். அவரிருந்த தெருவழியாக சாமி ஊர்வலம் வரும்போது, ‘நான் போய் பார்க்கவில்லையே என்று சாமி என்னைப் பார்க்க வருகிறார்’ என்று வேடிக்கையாகச் சொல்வார்.’ என்பதையெல்லாம் நான் என் உரையில் குறிப்பிட்டேன்.
கூட்டம் முடிந்து திரும்பும்போது எழுத்தாளர் பிரபஞ்சன் இதை யெல்லாம் நீங்கள் கட்டுரையாக எழுதலாமே லதா” என்றார்.

இது நாள் வரை நான் எழுதவில்லை. அதற்கு இரண்டு காரணங் கள். ஒன்று, நினைவுகளை நாம் எழுதும் போது அதில் ஒன்றி ரண்டு இடைச்செருகல்கள் சேர்ந்துவிடக் கூடும். இரண்டு, ‘இந்தப் பெரிய எழுத்தாளரை எனக்குத் தெரியும்’ ‘அந்தப் பெரிய பிரப லத்தை எனக்குத் தெரியும் என்றெல்லாம் ‘ஃபிலிம்’ காட்டுவது எனக்கு ஒத்துவராத விஷயம்.

ஆனால் இன்று க.நா.சு என்ற மனிதரைப் பற்றி, படைப்பிலக்கிய வாதி - விமர்சகரைப் பற்றி எழுதவேண்டிய தேவையை உணர் கிறேன். எனவேதான் இந்தச் சிறிய கட்டுரை – எழுதுவதற்கு இன்னும் நிறையவே உள்ளது).

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் பழகுவதற்கு எளிய மனிதர் க.நா.சு. எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். வன்மமான பேச்சு அவரிட மிருந்து வெளிப்பட்டதில்லை. குரு-சிஷ்ய பாவத்தில் அவர் யாரிட மும் அளவளாவியதில்லை. அவ்வமயம் வந்துகொண்டிருந்த ஞானரதம் இலக்கிய இதழுக்குத் தான் எழுதியவற்றை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லியதுண்டு.
அதிகாரத்திற்கும் அலட்டலுக்கும் அவர் என்றுமே அடிபணிந்த தில்லை. தன்னை ஒரு இலக்கிய-விமர்சன அதிகாரபீடமாகவும் அவர் நிறுவ முயன்றதேயில்லை. சக எழுத்தாளர்களுடைய படைப்புகள் குறித்த அவருடைய விமர்சனத்தில் தனிமனிதத் தாக்குதலோ, மதிப்பழிப்போ இருக்காது. முகமறியாத எத்த னையோ இளம் எழுத்தாளர் களைப் பாராட்டி எழுதியிருக்கிறார்.
அவர் கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர் – கூடவே விமர்சகரும். அவரிடத்திலிருந்த படைப்பிலக்கியவாதி விமர்ச கரின் எல்லை குறித்த கறாரான பார்வையைக் கொண்டிருந்தார். விமர்சனத்தின் தேவையை வலியுறுத்தியதைப் போலவே விமர் சகர்கள் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற தெளிவான பார்வை யையும் கொண்டிருந்தார்.

இரு விமர்சகர்கள் என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை இது: [மயன் என்ற பெயரில்தான் அவருடைய பெரும்பாலான கவிதை களை எழுதியிருக்கிறார்].
இது க.நா.சுவின் கவிதை:
இரு விமர்சகர்கள்
இவர்கள் இரண்டுபேருமே விமர்சகர்கள்தான்
ஒருவன் ஏதோ புஸ்தகத்தைக் குறிப்பிட்டு இது
மிகவும் நன்றாக இருக்கிறது – ஒவ்வொருவனும்
படித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லி
என் பொறுப்புச்சுமையை அதிகரித்துவிடுகிறான்
மற்றவன் அதே புஸ்தகத்தை அலசி அலசித்
தன் கெட்டிக்காரத்தனம் புலப்படப் பலவும்
எழுதி நேரம் போய்விட்டது; அவன் விமர்சனத்தைப்
படித்ததே போதும்; புஸ்தகத்தைப் படிக்க வேண்டிய
அவசியமில்லை என்று என் பொறுப்பைக் குறைத்து
விடுகிறான். இருவரும் விமர்சகர்கள் தான்!
(க.நா.சு கவிதைகள் சந்தியா பதிப்பக வெளியீடு, 2002, பக்கம் 46]

விமர்சனத்தின் தேவையைப் பற்றி தெளிவான பார்வை கொண்டி ருந்தது போலவே விமர்சகர்களின் தகுதி, அணுகுமுறைகள் குறித்தும் தீர்மானமான கருத்துகளைக் கொண்டிருந்தார். அவருடைய விமர்சனக்கலை நூலில் இவ்வாறு கூறுகிறார்:
“குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தின் தரம் பூராவையும் இலக்கிய விமர்சனம் மூலம் எடுத்துச்சொல்லிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்றுதான் பதில் தரவேண்டும். அதனால் தான் ஷேக்ஸ்பியரை யும், டாண்டேயையும் பற்றி இத்தனை நூல்கள் தோன்றியும் (பள்ளி நூல்களைப் பற்றி இப்போது விவாதிக்கவேண்டாம்) இன்னும் பல நூல்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிறுகதையையோ, கவிதையையோ, நாவலையோ அலசிப் பார்த்து இதிலுள்ள இலக்கிய நயம், அம்சம், தரம் எல்லாம் இவ்வளவுதான் என்று எடைபோட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால், இன்னின்ன நயங்கள், தரங்கள், அம்சங்கள் இப்படியிப்படியாக ஏற்பட்டிருக் கின்றன என்று சுட்டிக்காட்ட முடியும். இலக்கிய உருவத்தையும், அந்த உருவத்தை நமக்கு நிர்மாணித்துத் தருகிற வார்த்தைகளை யும், ஆசிரியரின் கருத்துகளையும், சூழ்நிலையையும், அதனால் எழுந்த கோயிலையும், குச்சையும், இலக்கிய விமரிசனம் நல்ல வாசகனுக்குச் சுட்டிக்காட்ட முயலுகிறது. இந்த நூலின் நோக்கம் இது என்று சொல்லும்போதே , வார்த்தைகளால் எழுந்த இதன் நோக்கம் பலதரப்பட்டது, இதிலே பல கோணங்களும் திருப்பங் களும் தொனிக்கின்றன என்பதையும் காட்ட இலக்கிய விமரிசனம் பயன்படுகிறது. இதோ கதவு, திறந்துகொண்டு உள்ளே போகலாம் என்றோ; இதோ மலர். நுகரலாம் என்றோ; இதோ பாதை, நடக்க லாம் என்றோ நல்ல வாசகனுக்குச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவதுதான் இலக்கிய விமர்சகன் செய்யவேண்டிய காரியம் என்று நான் என்ணுகிறேன். கதாகாலட்சேபக்காரர்கள், ஒரு வரிக் கவிதைக்கு எட்டுப் பக்கப் பிரசங்கம் செய்பவர்கள் செய்ய வேண்டிய காரியம் அல்ல இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய காரியம். நல்ல கவிதையை(சிறுகதையையோ நாவலையோ) சுயம் கவிதையாக அப்படியே தரவேண்டுமே தவிர அதிலே பட்டணத்துப் பால்காரனாகத் தண்ணீர் ஊற்றிப் பெருக்கித் தரக் கூடாது இலக்கிய விமர்சனம் என்பது வெளிப்படை.
”கம்பனுடைய காவியத்தைப் பற்றி விமரிசனம் செய்ய முன்வரு பவன், கம்பனுடைய கவிதையை முக்கியமாகக் கருதி விமரிசனம் செய்யவேண்டுமே தவிர ‘என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், என் அறிவைப் பார் என்றெல்லாம் கம்பன் கவிதைக்குப் புறம்பானதை, இல்லாததைச் சொல்லி கதாகாலட்சேபம் செய்வதை இலக்கிய விமரிசனம் என்று சொல்லமுடியாது.
“ஆனால் அதற்காக இலக்கிய விமரிசகன் அறிவற்ற ஒரு சூனியத் தில் நிற்கிறான் என்பதல்ல. அவன் அறிவெல்லாம், அவன் திற னெல்லாம் அவன் படித்த படிப்பெல்லாம் அவன் விமர்சனம் செய்யும் நூலுக்குள் அடங்கி நிற்கின்றன. அதை மீறிய எதையும் அவன் கவனிப்பதேயில்லை. தாட்சண்யம், பரிவு, அநுதாபம், பெரியவர், சின்னவர், காலத்தால் முந்தியவர், பிந்தியவர் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் விமர்சனத்துக்கும் புறம்பான அப்பாற்பட்ட விஷயங்கள்” என்கிறார். [விமரிசனக் கலை – க.நா.சு]
ஆக, விமர்சகர் என்பவருக்கும் அடிப்படைத் தரநிர்ணயங்கள் இருக்கின்றன. ’காலதேவனுடைய நிர்தாட்சண்யத்துடன் பரிவு என்பதே காட்டாமல்தான் இலக்கிய விமரிசனம் செய்தாக வேண் டும்’ என்று கறாராகக் கூறும் க.நா.சு, “எதையும் அநுதாபத்தோடு பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள், இலக்கியத்தில் அநு தாபம் தேவையில்லை. எந்த இலக்கியாசிரியனுக்கும் யாருடைய அநுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்றும் கூறத் தவறவில்லை! விமர்சனம் செய்வது என் பிறப்புரிமை என்று கூறுபவர் ‘ ஒரு சிட்டுக்குருவியின் விழுகையில்கூடக் கடவுளின் கையைக் காண முடியும் என்று ஹாம்லட் சொல்லுவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். எல்லாக் கவிதைகளின் வரிகளிலும் கடவுளின் கையைக் காண முடியும்’ என்றும் கூறத் தவறவில்லை. (கலை நுட்பங்கள் வேள் பதிப்பகம் வெளியீடு, டிசம்பர் 1988, பக்128)
கலைநுட்பங்கள் என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பில், “கடைசியாக, இலக்கியத்துக்கு எதிராகக் கடைசி ஆய்தமாக உபயோகப்படுத்தக்கூடியது ஒன்றுண்டு. இந்த ஜனநாயக யுகத்தில் யாரோ ஆயிரம் இரண்டாயிரம் பேர்வழிகள் ஆஹா, ஊஹூ என்று சொல்லிக்கொண்டிருக்கிற நூல்களை இலக்கியம் என்று எல் லோர் தலையிலும் இலக்கியவாதிகள் கட்டுகிறார்கள். எழுதுவ தெல்லாம் இலக்கியம் ஆகாது என்கிறார்கள். ஏதோ குறிப்பிட்ட சில நூல்கள் தான் இலக்கியம் என்கிறார்கள். விமர்சனம், காலம் இரண்டுமாகச் சேர்ந்துகொண்டு இன்று எழுதப்படுவதில் பெரும்ப குதியையும் அழித்துவிடுகின்றன எனவும் (பக் – 44), இப்படிப்பட்ட காரியங்களால் இலக்கியப்படிப்பு தேவையா என்கிற கேள்விக்கு தேவையில்லை என்று பதில் சொல்லவே எங்களுக்குத் தோன்றுகிறது என்று சொல்பவர்கள் நம்மிடையே இருக்கலாம்’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

‘இலக்கியம் என்பதை எல்லோரும் படிப்பதில்லை. சிலர்தான் படிக்கிறார்கள், அதிலும் மிகச்சிலரே தங்களிடமிருக்கும் ஒரு தன்மையால் பிறரிடம் காணப்படாத ஒரு குணாதிசயத்தினால் சிருஷ்டிக் கிறார்கள். இலக்கியம், கலை என்பதெல்லாமே ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் பயிலப்படுகிற மாதிரி தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைகள் இலக்கியங்க ளைத்தான் நாம் சிரமப்பட்டு மூவாயிரம் ஆண்டு களாக வளர்த்துவந்திருக்கிறோம்” என்று அவர் கூறுவதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், ‘எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகாது’ என்ற கூற்றின் உண் மையை நாம் ஏற்றுக்கொண்டாலும் இன்னொருவகையில் அப்ப டிச் சொல்பவர்களின் விமர்சனத் தகுதியையும், விமர்சன நேர்மை யையும், பாரபட்சத்தன்மை யையும் நாம் அவதானித்துப் பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இத்தகைய இலக்கியவாதிகள் யார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியம்.
அகராதி என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை இது:
அகராதி

க.நா.சு

நான் சொல்லக்கூடிய
வார்த்தைகள் எல்லாம்
இதோ இந்த அகராதியில்
அடங்கியுள்ளன.
இந்த அகராதியை எடுத்து
உங்கள் மேல் வீசி எறிந்தால்
என்னை ஒரு கவி என்று
ஏற்றுக்கொள்வீர்களா?
நான் செய்யக்கூடிய காரியங்கள்
எல்லாமே இந்தப் பத்து
விரல்களில் அடக்கம்.
என் விரல்களைக் கண்டு
நான் காரியவாதி என்று
கண்டுகொள்வீர்களா?
அவருடைய கட்டுரைகளையெல்லாம் படிக்கிறபோது வெளியி லிருந்து பெறும் விமர்சனம் என்பதைவிட ஒரு வாசகர் தன் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தானேயொரு தரமான விமர்சகராக மாறுவதே சிறந்தது என்ற கருத்துடையவராக க.நா.சு இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment